மக்களவைத் தொகுதி வரையறை தடுமாற்றம்! pt
சிறப்புக் களம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்... | ’மக்களவைத் தொகுதி வரையறை தடுமாற்றம்!’

"ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு மக்களவைத் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றால், அந்தந்த மாநிலத்தின் மக்கள் தொகைக்கும் – அதற்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கும் விகிதாச்சாரத்தில் கூடுமானவரை - சமமாக இருக்க வேண்டும்”

ப. சிதம்பரம்

மக்களவைத் தொகுதி வரையறை தடுமாற்றம்!

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 1977-இல் கொண்டுவந்த 42-வது திருத்தம், மாநிலங்களின் கழுத்துக்கு மேல் தொங்கும் கத்தி போல, மக்களவைத் தொகுதி மறுவரையறையை விவகாரமாக்கிவிட்டது. அரசமைப்புச் சட்டத்தின் கூறுகள் 81, 82 இரண்டும் தெளிவான மொழியில் சொல்கின்றன: ‘ஒரு குடிமகனுக்கு - ஒரே வாக்கு’.

அரசமைப்புச் சட்டப்பிரிவு 81, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை மாநிலங்களைப் பொருத்து 530-க்கு மிகாமலும், ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து 20-க்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்று உச்சபட்ச வரம்பை நிர்ணயித்துவிட்டது. இப்போதுள்ள நாடாளுமன்றத்தில் மாநிலங்களிலிருந்து 530 பேரும் ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து 13 பேரும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

துணை சட்டக்கூறு (2) (அ) கூறுகிறது: “ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு மக்களவைத் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றால், அந்தந்த மாநிலத்தின் மக்கள் தொகைக்கும் – அதற்கு ஒதுக்கப்படும் இடங்களுக்கும் விகிதாச்சாரத்தில் கூடுமானவரை - சமமாக இருக்க வேண்டும்”.

இங்கே ‘மக்கள் தொகை’ என்று குறிப்பிடப்படுவது யாதெனில், அதற்கும் முன்னர் கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் – 2026-க்குப் பிறகு முதல் கணக்கெடுப்பு நடைபெற்று முடியும் வரையில், 1971-ல் எடுத்த கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தொகுதிகள் எண்ணிக்கை தொடர வேண்டும் என்பதாகும். அரசமைப்புச் சட்டத்தின் 81-வது பிரிவு கூறுவது என்னவென்றால், ஒவ்வொரு கணக்கெடுப்புக்குப் பிறகும் மாநிலங்களுக்கான மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை மறு நிர்ணயம் செய்யப்பட வேண்டும்; ஆனால் அந்தப் பணி, 2026-க்குப் பிறகு புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் வரை இடை நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதுமாகும். இதனால்தான், மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை 1971-ல் இருந்த அளவிலேயே ‘நிலைநிறுத்தி’ வைக்கப்பட்டிருக்கிறது – ‘ஒரு குடிமகனுக்கு ஒரு வாக்கு’ - என்ற கொள்கைக்கு ஊறு ஏற்படும் விதத்தில்!

ஜனநாயகம் – கூட்டரசு

ஒரு குடிமகனுக்கு ஒரேயொரு வாக்கு என்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கை என்பதில் சந்தேகம் ஏதுமில்லை; ஆனால் அதுவே கூட்டாட்சி தத்துவத்துக்கு முரணாக இருப்பதை அமெரிக்கர்கள் 1776-ல் உணர்ந்தார்கள். அதற்கு அவர்கள் கண்ட தீர்வு கடந்த 250 ஆண்டுகளாக சிக்கலில்லாமல் தொடர்கிறது. நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவைக்கு, மக்கள் தொகை அடிப்படையில் 50 மாநிலங்களுக்கும் அவர்கள் தொகுதிகள் எண்ணிக்கை மறு நிர்ணயம் செய்துகொள்கின்றனர், ஆனால் ‘செனட்’ என்று அழைக்கப்படும் அவைக்கு, அனைத்து மாநிலங்களிலிருந்தும் சம எண்ணிக்கையில் தலா 2 உறுப்பினர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அனுப்புகின்றனர். அமெரிக்காவைப் போலத்தான் இந்தியாவும் ஜனநாயக நாடு. அத்துடன் கூட்டாட்சியை ஏற்ற நாடும் கூட. மக்கள் தொகைக்கேற்ப விகிதாசார அடிப்படையில் தொகுதிகள் எண்ணிக்கையை மாற்றுவதில் உள்ள ஆபத்தை 1971-ல் நாம் கண்டுபிடித்தோம். ஆனால் அதற்கு உரிய தீர்வைக் காணாமல், அந்தப் பிரச்சினையை 2026 வரைக்கும் வளர்த்து விட்டிருக்கிறோம்.

 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கடைசியாக 2011-இல் நடந்தது. அடுத்த கணக்கெடுப்பு 2021-இல் நடத்தப்பட்டிருக்க வேண்டும், ‘கோவிட்-19’ பெருந்தொற்று காரணமாக அந்தப் பணி ஒத்திவைக்கப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பானது 2021 வரையில் ஏதேனும் ஒரு காரணத்துக்காக ஒத்திபோடப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2026-க்குப் பிறகுதான் என்றால், மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை நடைபெற்றாக வேண்டும்; ஒவ்வொரு மாநிலத்துக்குமான தொகுதிகள் எவ்வளவு என்பதையும் அப்போது தீர்மானித்தாக வேண்டும். மக்கள் தொகையைப் பெருகவிட்டதால் சில மாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் பரிசாகக் கிடைக்கும், கருவுறு விகிதத்தை - குடும்பநல நடவடிக்கைகள் மூலம் 2.0-க்கும் கீழே குறைத்ததற்காக சில மாநிலங்கள் தண்டிக்கப்படும். ‘ஒரு குடிமகனுக்கு ஒரு வாக்கு’ என்ற கொள்கையால் ஏற்படும் ‘அசமத்துவம்’, உங்களுடைய கன்னத்தில் விழுந்த அறைபோல எதிரொலிக்கும்.

குறையும், அதிகமாகும்

மக்களவையில் இப்போதுள்ள 530+13 என்ற மொத்த எண்ணிக்கை அப்படியே பராமரிக்கப்பட்டு, அரசமைப்புச் சட்டத்தின் 81, 82 கூறுகள் அடிப்படையில் மாநிலங்களுக்கான எண்ணிக்கையில் மாற்றம் செய்தால், தென் மாநிலங்கள் (ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம்) கணிசமான தொகுதிகளை இழக்க நேரிடும். தென் மாநிலங்களின் மொத்த மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை 129-லிருந்து 103 ஆக குறைந்துவிடும். மக்கள் தொகை எண்ணிக்கைக்கேற்ற விகிதாசாரத்தில்தான் தொகுதிகள் எண்ணிக்கை என்றால், மக்கள் தொகை பெருகாமல் தடுத்ததற்காக சில மாநிலங்கள் தொகுதிகள் குறைக்கப்பட்டு, தண்டிக்கப்படும்; மக்கள் தொகையைக் குறைப்பதுதான் நாட்டின் ஐம்பதாண்டு கால தேசிய இலக்காகக் கொள்ளப்பட்டு இன்றளவும் தொடர்கிறது. இன்றைக்கு மக்களவையில் தென் மாநிலங்களின் குரல் வலிமை 543-க்கு 129 ஆக இருக்கிறது – இதுவே போதவில்லை. இதுவே மேலும் குறைந்து 103-க்கு 543 என்று சுருங்கிவிட்டால், தென்னிந்தியாவின் குரல் நாடாளுமன்றத்தில் மேலும் அமிழ்ந்துவிடும்.

தென்னிந்திய மாநிலங்களுக்கு இப்போதுள்ள தொகுதிகள் எண்ணிக்கை குறையாது என்று ஒன்றிய அரசு சார்பில் அளிக்கப்படும் வாக்குறுதி மிகவும் வலுவற்றது. மக்கள்தொகை அதிகமுள்ள உத்தர பிரதேசம், பிஹார், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தின் தொகுதிகள் எண்ணிக்கை இப்போதிருக்கும் எண்ணிக்கையை விட அதிகரிக்கப்பட மாட்டாது என்று அரசு அதே மூச்சில் வாக்குறுதி அளிக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும். தென் மாநிலங்களின் தொகுதிகள் எண்ணிக்கையைக் குறைக்காமல், பிற மாநிலங்களின் எண்ணிக்கையை உயர்த்துவதாக இருந்தால் மக்களவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தினால்தான் முடியும். அதை முன்கூட்டியே எதிர்பார்த்துத்தான் புதிய மக்களவையில் அதிகபட்சம் 888 பேர் அமரும் வகையில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்பட்டிருக்கிறது. அப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் தென் மாநிலங்களின் குரல் மக்களவையில் மேலும் குறையும். 543-க்கு 129 என்பது 23.76% என்றால் 888-க்கு 129 என்பது 14.53% ஆக குறைகிறது.

எப்படிப் பார்த்தாலும் ‘ஒரு குடிமகனுக்கு ஒரு வாக்கு’ என்ற கொள்கையில் உறுதியாக இருந்தால், அதற்கு தென்னிந்திய மாநிலங்கள் அதிக விலை கொடுக்க நேரும். மக்கள் பிறப்பு விகிதத்தையும் மக்கள் தொகை எண்ணிக்கையையும் கணிசமாக குறைத்ததற்காக மாநிலங்கள் தொகுதி இழப்பை இழக்க வேண்டும் என்பதை ஏற்கவே முடியாது.

சில மாநிலங்களின் இப்போதைய கருவுறு விகிதம் (ஆதாரம் தேசிய குடும்ப நல சுகாதார கணக்கெடுப்பு-5) கூறும் உண்மையை கீழ்க்காணும் பட்டியல் காட்டுகிறது...

 இழப்பவர்களும் பெறுகிறவர்களும்

மக்களவையில் இனி குறைந்த கருவுறு விகிதம் உள்ளவர்கள் இழப்பவர்களாகவும், அதிக கருவுறு விகிதம் உள்ளவர்கள் லாபம் பெறுகிறவர்களாகவும் இருப்பார்கள். மாநிலங்களவையில் ஏற்கெனவே, அதிக மக்கள் தொகையுள்ள மாநிலங்களுக்கே சாதகமாக - சீரற்ற எண்ணிக்கையில் - தொகுதிகள் உள்ளன.

ஒன்றிய அரசு, அரசமைப்புச் சட்டத்தின் கூறுகள் 81, 82 ஆகியவற்றின்படி நடக்க உறுதி பூண்டு, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறு நிர்ணயம் செய்யக்கூடாது என்று தென் மாநிலங்களும் உறுதி பூண்டால், தடுக்க முடியாத எழுச்சிக்கு எதிராக அசைந்து கொடுக்காத ஒரு ஜடம் தடுப்பதைப் போன்ற சூழ்நிலையை ஏற்படுத்திவிடும். அதற்குப் பிறகு உட் கலகமும் பேரழிவும் தொடரும். அப்படி நேராமல் சுமூகமாகத் தீர்வு காணும் அறிவாற்றல் நமக்கு (அரசுக்கு) இருக்கிறதா?