சிறப்புக் களம்

ஸ்டார்ட் அப் இளவரசிகள்-20: சிறுசிறு வேலையை மற்றவர்களை செய்யக்கோரும் இணைய சேவை-சாதித்த லியா

webteam

பொருட்கள் வாங்குவது போன்ற வழக்கமான தேவைகளுக்காக இந்த தளத்தை பயன்படுத்திக்கொண்டதோடு, மிகவும் விநோதமான பணிகளையும் இந்த தளத்தில் பட்டியலிட்டனர். அலுவலக சோதனை நடைபெற இருப்பதால் விடுப்பில் இருந்த ஊழியர்களுக்கு பதிலாக ஊழியராக நடிக்க வேண்டும் போன்ற வேலைகளும் பட்டியலிடப்பட்டன.

உலகம் ‘உபெர்’மயமாகி இருக்கிறது. தேவைக்கேற்ப சிறு பணிகளை உடனடியாக செய்து தருபவர்களை இணையதளம் அல்லது செயலி வாயிலாக அழைத்துக் கொள்ளும் வாய்ப்பு எல்லா துறைகளிலும் உருவாகி இருக்கிறது. உணவு தேவையா? ஸ்விக்கி அல்லது ஜொமேட்டோ போன்ற செயலிகளை நாடலாம். கால்டாக்சி தேவையா? ஓலாவும் இன்னும் பிற செயலிகளும் இருக்கின்றன. மளிகை பொருட்கள் வாங்க வேண்டுமா? டன்சோவும், இன்ஸ்டாகார்டும் இன்னும் பிற செயலிகளும் இருக்கின்றன. இந்த மாற்றத்தை அல்லது புதிய போக்கை தான் ‘உபெர்’மயமாக்கல் என்கின்றனர்.

பயனாளிகளுக்கு விரல் நுனியில் உடனடி சேவை சாத்தியமாவதோடு, பங்கேற்பாளர்களுக்கு விரும்பிய நேரத்தில் பணியாற்றும் வாய்ப்பு சாத்தியமாவதாக சொல்லப்படுவதும் உபெர்மயக்காலின் முக்கிய அம்சமாக அமைகிறது. ஆனால், உபெர்மயமாக்கலின் விளைவாக, இந்த வகை செயலிகளுக்காக பணியாற்றுபவர்கள், நிரந்தர பணி இல்லாமால், அது தரும் பாதுகாப்பும், வசதிகளும் இல்லாமல், சொற்ப வருமானத்திற்காக கசக்கி பிழியப்படுவதாகவும் விமர்சனங்கள் வலுக்கத் துவங்கியிருக்கின்றன. ‘உபெர்’மயமாக்கலின் இன்னொரு முகமாக இருந்தாலும், இணையத்தின் வலைப்பின்னல் ஆற்றலை ஆதாரமாக கொண்டு புதிய வகை பணி வாய்ப்புகளும், சேவைகளும் உருவாகியிருப்பது பொருளாதாரத்தின் புதிய போக்காக உருவெடுத்திருப்பதை மறுப்பதற்கில்லை.

முன்னோடி கருத்தாக்கம்

உண்மையில் ’உபெர்’மயமாக்கலுக்கு உபெர் மட்டும் காரணம் இல்லை. உபெருக்கு முன்னரே, ’டாஸ்க்ரேபிட்’ (TaskRabbit) உருவானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். டாஸ்க்ரேபிட் சேவையை, இன்று ’கிக் எக்கானமி’ என அறியப்படும் இடு பணிகளுக்கான பொருளாதாரத்தை துவக்கி வைத்த முன்னோடி நிறுவனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சின்னஞ்சிறு வேலைகளை எளிதாக செய்து தரக்கூடியவர்களையும், அத்தகைய வேலையை செய்ய நேரமில்லாமல் இருப்பவர்களையும் இணைத்து வைக்கும் ஆன்லைன் சந்தையாக உருவான டாஸ்க்ரேபிட் சேவையை உருவாக்கிய லியா பஸ்கியூ (Leah Busque ) பற்றித்தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

டாஸ்க்ரேபிட் சாத்தியமாக்கும் புதிய பணி

உலகை, ‘இடுபணி பொருளாதாரம்’ என குறிப்பிடப்படுவதை லியா விரும்புவதில்லை. அதற்கு பதிலாக ‘பகிர்வு பொருளாதாரம்’ என சொல்வதையே விரும்புகிறார். ஒருவருக்கு ஒருவர் உதவி என்று சொல்வதை போல, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு உதவ வழி செய்வதே டாஸ்க்ரேபிட் மேடையின் சாரம்சம் என்றும் அவர் கூறியிருக்கிறார். சமூக வலைப்பின்னல் போல, சேவைகளுக்கான வலைப்பின்னலை உருவாக்கியிருப்பதாகவும் லியா பெருமிதம் கொள்கிறார். லியாவின் இந்த வாழ்க்கை பாதையை திரும்பி பார்க்கலாம்.

சிறு வயது கனவு

தொழில்முனைவோராவது லியாவின் சிறுவயது கனவாக இருக்கிறது. எட்டு வயது சிறுமியாக இருந்த போது தனது தந்தையிடம் சி.இ.ஓ என்றால் என்ன என அவர் கேட்டிருக்கிறார். சி.இ.ஓ என்றால் எந்த ஒரு நிறுவனத்திலும் எல்லோருக்கும் மேல் உயர் பதவியில் இருப்பவர் என தந்தை கூறிய பதிலை கேட்டு லியா நானும் சி.இ.ஓ ஆவேன் எனக்கூறி, தன் வீட்டிலேயே சின்னதாக அலுவலகம் துவங்கி தன்னை தலைமை செயலதிகாரியாக அறிவித்துக் கொண்டார். அதன் பிறகு, லியா சி.இ.ஓ பதவியை மறந்து படிப்பில் கவனம் செலுத்தினார். கம்ப்யூட்டர் பாடத்தில் பட்டம் பெற்றவர், 2001 ம் ஆண்டு முதல் அமெரிக்காவின் வர்த்தக ஜாம்பவான் நிறுவனமான ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றினார். எட்டு ஆண்டுகள் தொடர்ந்து ஐபிஎம் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர், உலக அளவில் பயன்படுத்தப்பட்ட மென்பொருள்களை உருவாக்குவதில் அனுபவம் பெற்றிருந்தார்.

அப்போது லியாவுக்கு திருமணமும் ஆகியிருந்தது. நல்ல வேலை, கை நிறைய சம்பளம் என இருந்தவர், திடீரென்று வேலையை விட்டுவிட தீர்மானித்தார். அவரது மனதில் தோன்றிய சிறு எண்ணமே இதற்கு காரணமாக அமைந்தது. அந்த எண்ணம் அவரது வாழ்க்கையை மாற்றுவதாக மட்டும் அல்ல, இணைய பரப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சேவையின் தோற்றமாகவும் அமைந்தது.

‘ரன் மை எரண்ட்’ பிறந்த கதை

லியா தனது கணவரோடு விருந்து நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்ல வேண்டியிருந்தது. அந்த நேரம் பார்த்து அவர்கள் ஆசையாக செல்லப்பிராணியாக வளர்த்து வந்த நாய்க்கு, உணவு தீர்ந்து போயிருந்தது. விருந்து நிகழ்ச்சிக்கு செல்லும் பரபரப்புக்கு மத்தியில் நாய் உணவை வாங்க ஏற்பாடு செய்ய வேண்டிய நெருக்கடிக்கு இலக்கானவர், இந்த தருணத்தில், யாரேனும் நண்பர்கள் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து, அவர்களிடம் தனது தேவையைக் கூறி, நாய்க்கு உணவை வாங்கி வந்து கொடுக்கச் செய்தால் எப்படி இருக்கும் என அவர் யோசித்துப் பார்த்தார்.

இப்படி ஒரு வசதி இணையத்தில் இருக்கிறதா என்று அவசரமாக தேடிப் பார்க்கவும் செய்தார். சிறு வேலைகளை நிறைவேற்றித்தரும் எண்ணத்தை குறிக்கும் வகையில் ரன் மை எரண்ட் (RunMyErrand ) எனும் பதத்தை டைப் செய்து தேடிப்பார்த்தார். அது போன்ற சேவை இல்லை என தெரிய வந்ததோடு, இந்த டொமைன் முகவரி பதிவு செய்யப்படாமல் இருப்பதையும் கவனித்தார். உடனே அதிகம் யோசிக்காமல் அந்த டொமைன் முகவரியை பதிவு செய்து கொண்டார். எப்படி தனக்கு நாய் உணவை யாரேனும் வாங்கி கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியதோ அதே போலவே, எந்த ஒரு சின்ன வேலைக்கான தேவை உள்ளவர்களை, அந்த வேலையை சின்ன கட்டணத்திற்காக செய்து தரக்கூடியவர்களுடன் இணைக்கும் ஒரு சேவையை உருவாக்க விரும்பினார்.

இணையத்தில் சமூக வலைப்பின்னல் தளங்கள் செல்வாக்கு பெற்றிருந்த காலம் என்பதால், இந்த வலைப்பின்னலோடு இருப்பிடம் சார்ந்த தகவல் அடிப்படையில் நபர்களை இணைத்து வைக்கும் வகையில், சேவை வலைப்பின்னலை உருவாக்க முடியும் எனும் நம்பிக்கை இதற்கு அடிப்படையாக அமைந்தது. இந்த நம்பிக்கையோடு அடுத்த சில மாதங்கள் தன் மனதில் உள்ள சேவை தொடர்பான ஆய்வை மேற்கொண்டார்.

ஆலோசனை நேரம் காஸ்மோ எனும் டாட்காம் நிறுவனத்தை நடத்தி வந்த ஜெப் யோலன் என்பவருடன் பேசிப் பார்த்தார். யோலன், இணையம் வழியே ஐஸ்கீரிம் போன்றவற்றை தேவை அடிப்படையில் டெலிவரி செய்யும் சேவையை வழங்கிக் கொண்டிருந்தார். அவருடன் பேசிய போது லியாவுக்கு தனது யோசனை மீது மேலும் நம்பிக்கை உண்டானது. அதே போல, சராசரி மனிதர்களிடமும், எந்த வகையான தேவைகளை மற்றவர்களிடம் ஒப்படைப்பீர்கள், அதற்கு எந்த அளவு கட்டணம் தர முன்வருவீர்கள் எனக் கேட்டறிந்தார்.

இதனிடையே ஜிப்கார் இணைய நிறுவனத்தின் சி.இ.ஓ கிரிபீத் என்பவருடன் ஆலோசனை நடத்திய போது, இன்னும் ஏன் நீங்கள் இதற்கான பணியில் இறங்காமல் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என அவர் கேட்கவே, லியா, இந்த கட்டத்தில் வேலையை விட்டு விலகி துணிந்து முடிவெடுத்தார். மென்பொருள் உருவாக்கத்தில் அவருக்கு அனுபவம் இருந்ததால், இந்த சேவைக்கு தேவையான தளத்தை உருவாக்கும் பணியை அவரே மேற்கொண்டார். சில மாதங்கள் இடைவிடாமல் கோடிங் செய்வதில் ஈடுபட்டு இணையதளத்தை உருவாக்கினார். முதல் கட்டமாக 2008 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் இந்த சேவை அறிமுகமானது.

ஏற்கனவே பதிவு செய்திருந்த ’ரன் மை எரண்ட்’ எனும் இணைய முகவரியிலேயே இந்த சேவை அறிமுகமானது. தேவையான சேவை இந்த சேவையின் அடிப்படை கருத்தாக்கம் எளிதாக இருந்தது. வீட்டிற்கு அவசரமாக மளிகை பொருள் அல்லது வேறு ஏதேனும் பொருள் வேண்டுவோர் தங்கள் தேவையை இந்த தளத்தில் குறிப்பிடலாம். அருகாமையில் உள்ளவர்களில் யாரேனும் இந்த தேவையை பூர்த்தி செய்ய விரும்பினால், இதற்காக முன்வரலாம். வேலையை வழங்குபவர்கள், டாஸ்கர் என அழைக்கப்பட்டனர். வேலைக்காக தாங்கள் தர தயாராக இருக்கும் கட்டணத்தை அவர்கள் குறிப்பிடலாம். வேலையை செய்ய முன்வருபவர்கள் ரன்னர்கள் என அழைக்கப்பட்டனர். வேலையை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், அவர்கள் தங்கள் விரும்பும் கட்டணத்தை குறிப்பிட்டு அதற்கான ஏலத்தில் பங்கேற்கலாம். இரு தரப்பிற்கும் ஒத்து வரும் கட்டணத்தை ஏற்றுக்கொள்ளலாம், என்பதோடு, செய்து முடிக்கும் வேலைக்கு ஏற்ப கூடுதல் புள்ளிகளும் அளிக்கப்பட்டன.

ஏலம், புள்ளிகள் உள்ளிட்ட அம்சங்கள் சேவையை சுவாரஸ்யமாக்கிய நிலையில், லியா இந்த சேவை எந்த வகையான வரவேற்பை பெறுகிறது என தெரிந்து கொள்வதில் கவனம் செலுத்தினார். வாடிக்கையாளர்கள் கருத்துகளை அறிந்து கொண்டதோடு, தளத்தில் பட்டியலிடப்பட்ட வேலை யாராலும் ஏற்கப்படவில்லை எனும் தானே நேரில் சென்று அந்த பணியை முடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

பாஸ்டனில் அறிமுகம்

பாஸ்டன் வாடிக்கையாளர்கள் பலவிதமான வேலைகளுக்காக இந்த சேவையை பயன்படுத்திக் கொண்டனர். அலுவலக கூட்டத்திற்காக தேவைப்பட்ட காட்சி விளக்கக் கோப்பை எடுத்து வரச் சொல்வது முதல், பூங்கொத்து வாங்கி வரச்சொல்வது வரை விதவிதமான பணிகளுக்காக நபர்களை அமர்த்திக் கொண்டனர். அதே நேரத்தில் கைவசம் நேரம் இருந்து பகுதி நேரமாக எதேனும் பணியை செய்ய விரும்பியவர்கள் இந்த வாய்ப்பை விரும்பி பயன்படுத்திக்கொண்டனர். அதே நேரத்தில் வேலையும் வருமானமும் இல்லாதவர்களும் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டனர்.

இந்த சேவைக்காக சிறிய தொகையை சேவைக் கட்டணமாக கழித்துக் கொள்ளப்பட்டது. இந்த தொகை நிறுவனத்திற்கான வருவாயாக அமைந்தது. இந்த கட்டத்தில் தான், அடுத்த கட்ட வளர்சிக்காக நிதி திரட்டுமாறு லியாவிடம் கூறப்பட்டது. ஆனால், 2008 ம் ஆண்டு அமெரிக்காவில் வீட்டுக்கடன் வசதி நெருக்கடியால் உண்டான பொருளாதார தேக்க நிலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால் நிதி திரட்டுவது எளிதாக இருக்கவில்லை.

ஆனால் பொருளாதார நெருக்கடி பலரை வேலையிழக்க வைத்திருந்தால், பகுதி நேர வருமானத்தை எதிர்பார்த்த பலரும், ரன் மை எரண்ட் சேவையை நாடி வந்தனர். இதன் பயனாக இந்த சேவை மெல்ல வளர்ந்தது. இதனிடையே நிதி திரட்டும் முயற்சியை தொடர்ந்தார். இதன் பயனாக, சிலிக்கான் வேலி முதலீட்டாளரும், எழுத்தாளருமான டிம் பெரிஸ் நிறுவனத்தில் ஆலோசகராக இணைய ஒப்புக்கொண்டார். அதோடு, ஃபேஸ்புக் நிறுவனம் நடத்திய நிதி அளிப்பு திட்டத்திலும் நிறுவனம் தேர்வானது.

இந்த கட்டத்தில் நிறுவனத்தின் பெயரில் மாற்றம் தேவை என உணர்ந்த லியா, டாஸ்க்ரேபிட் என பெயரை மாற்றினார். மேலும், சான்பிரான்சிஸ்கோ நகரை மையமாக கொண்டு செயல்படவும் தீர்மானித்தார். இரண்டு நடவடிக்கைகளுமே நிறுவன வளர்ச்சிக்கு உதவின. அடுத்து வந்த மாதங்களில் டாஸ்க்ரேபிட் வேகமாக வளர்ந்தது. அமெரிக்காவுக்கு வெளியே லண்டன் நகரிலும் சேவை அறிமுகமானது. இந்த கட்டத்தில், பணிகளை ஏல அடிப்படையில் ஏற்பது தொடர்பாக நிறைய புகார்கள் வந்தது. பலரும் பணிகளை ஏற்காமல் கட்டணத்தை பேரம் பேசுவதில் அதிக நேரம் செலவிடுவதை அறிந்தவர், ஏல முறையை கைவிட்டு தட்டையான கட்டண முறையை கொண்டு வந்தார். இந்த மாற்றமும் நல்ல பலன் அளித்தது.

இணைய வழி

சிறு பணிகளை இணையம் மூலம் மற்றவர்களை செய்யக்கோரும் சேவை பயனாளிகளை கவர்ந்தது. பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தவர்கள் தங்களுக்கு தேவையான அவசரப் பணிகளை இந்த தளத்தில் பட்டியலிட்டனர். பொருட்கள் வாங்குவது போன்ற வழக்கமான தேவைகளுக்காக இந்த தளத்தை பயன்படுத்திக்கொண்டதோடு, மிகவும் விநோதமான பணிகளையும் இந்த தளத்தில் பட்டியலிட்டனர். அலுவலக சோதனை நடைபெற இருப்பதால் விடுப்பில் இருந்த ஊழியர்களுக்கு பதிலாக ஊழியராக நடிக்க வேண்டும் போன்ற வேலைகளும் பட்டியலிடப்பட்டன.

இவைத்தவிர, வீட்டிற்கு பெயிண்ட் அடித்து தருவது, மேஜை நாற்காலியை பொருத்துவது என விதவிதமான பணிகள் கோரப்பட்டன. இந்த பணிகளை தாங்கள் விரும்பிய நேரத்தில் செய்து முடிக்க பலரும் தயாராக இருந்தனர். குறிப்பாக வேலையில்லாமல் இருந்தவர்கள் மற்றும் பகுதிநேர வருமானத்தை விரும்பியவர்கள் இந்த சேவையை தங்களுக்கு ஏற்றதாக கருதினர். விளைவு அறிமுகமான நகரங்களில் டாஸ்க்ரேபிட் வேகமாக வளர்ந்தது. இதனிடையே நிறுவனத்தை நிர்வகிக்க தொழில்முறை சி.இ.ஓ ஒருவரை லியா நியமித்தார்.

வளர்ச்சிப் பாதையில்

சிறிய நிறுவனங்கள் சிலவற்றை கையகப்படுத்திய டாஸ்க்ரேபிட் 2017ம் ஆண்டு பிரபலமான ஐகியா நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. டாஸ்க்ரேபிட் தளத்தை போலவே வேறுபல சேவைகளும் இடைப்பட்ட காலத்தில் அறிமுகமாகியிருக்கின்றன. இந்தியாவிலும் கூட, இதே பாணியிலான சேவைகள் பல்வேறு துறைகளில் அறிமுகம் ஆகியிருக்கின்றன. இந்த வகையான சேவை நகர்புறவாசிகளுக்கு பெரும் ஆசுவாசம் அளிப்பதோடு, வளைந்து கொடுக்கக்கூடிய வேலைவாய்ப்பாகவும் அமைந்திருக்கிறது.