சிறப்புக் களம்

மறந்துபோகும் நினைவுகள்... கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு அதிகரிக்கும் `அல்சைமர்’ அச்சம்!

நிவேதா ஜெகராஜா

கொரோனாவிலிருந்து குணமடைந்த 65 வயதிற்கு மேலானவர்களுக்கு, அல்சைமர் நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்திருக்கிறது. இந்த அல்சைமர் என்பது என்ன? அதுகுறித்த விரிவான தகவல்கள் இங்கே.

ஆய்வின் முடிவு என்ன?

65 வயதிற்கு மேற்பட்ட கொரோனாவிலிருந்து மீண்டவர்களில், 50% - 80% பேருக்கு, அல்சைமர் நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்திருக்கிறது. இந்த அல்சைமர் என்பது என்ன? அதுகுறித்த விரிவான தகவல்கள் இங்கே.

கொரோனாவிலிருந்து மீண்ட 85% 65+ வயதுடைய பெண்களுக்கு இந்த நோய் ஏற்படும் சாத்தியக்கூறுகள் இருக்கிறது. உலகளவில் கடந்த ஒரு வருடத்தில் அல்சைமர் பாதிப்பு 0.35%ல் இருந்து 0.68% ஆக, இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதே நேரம், கோவிட் - 19 பாதிப்பு, அடுத்த கட்டமாக அல்சைமர் நோய் தாக்குதலாக மாறுகிறதா என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அல்சைமர் என்பது என்ன?

நரம்பு செயலிழந்தால் ஏற்படும் முக்கியமான பாதிப்புகளில், ‘அல்சைமர்’ (Alzheimer's disease) எனப்படும் ஞாபக மறதி முதல் இடத்திலும், ‘பார்கின்சன்’ (Parkinson) இரண்டாவது இடத்திலும் உள்ளன.

அல்சைமர், மறதி சார்ந்த பாதிப்பு என்பதால் முதியவர்களிடயே பொதுவானதாக இருக்கிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூளை சரியாக செயல்படுவதில்லை. இதன் காரணமாக அவர்களின் அன்றாட நடைமுறை படிப்படியாக மோசமடையும். இதனை முழுமையாக குணப்படுத்த இயலாது. இருப்பினும், இதனால் ஏற்படும் விளைவுகளை மருந்து மாத்திரைகளின் மூலம் கட்டுப்படுத்த இயலும். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடலில் அதிக கொழுப்புச் சத்து சேர்வது போன்றவை இருந்தால் அல்சைமரின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால், அவற்றை கட்டுப்படுத்துவதில்தான் மருத்துவர்கள் அதிக கவனம் செலுத்துவர்.

அல்சைமர் இருப்போருக்கு தங்கள் வீடு எங்கு உள்ளது என்பதுகூட மறந்துபோகும் வாய்ப்புள்ளது. அந்த அளவுக்கு தீவிர மறதி ஏற்படும். `ஓ காதல் கண்மனி’ திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ்ஜின் மனைவியாக வரும் லீலா சாம்சனுக்கு (பவானி கதாபாத்திரம்) இந்த பாதிப்புதான் ஏற்பட்டிருக்கும்.

அல்சைமர் நோய் பற்றிய அரசு உறுதிப்படுத்தியுள்ள சில தகவல்கள்:

* அதிகரித்துச் செல்லும் ஒரு மூளை நோயே அல்சைமர் நோயாகும். அது சிலவற்றை மறந்து போவதில் இருந்து ஆரம்பித்து, சமீபத்திய நிகழ்ச்சிகளையும் மறந்து போகும் ஞாபக இழப்பில் சென்று முடியும். இறுதியாக, அன்றாடக செயல்களையும் அடிப்படைக் கடமைகளையும் ஆற்ற முடியாத நிலை உண்டாகும்.

* அல்சைமர் நோய்க்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. மூளையில் உண்டாகும் சில சிக்கலான நிகழ்வுகளால் இது ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது.

* அல்சைமர் நோய் குணமடைய வாய்ப்பில்லை. ஆரம்பத்தில் நோயைக் கண்டறிவதின் மூலம் நோயாளிக்குப் பலன்தரும் வகையில் சிகிச்சை அளிக்க முடியும்.

* மருந்து, உளவியல் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குடும்ப மற்றும் சமுதாய ஆதரவு முக்கியப் பங்கு வகிக்கிறது.

தடுக்க உதவும் குறிப்புகள்:

கீழ்க்காணும் உடல், உள, சமூக மற்றும் பொழுது போக்குகளில் ஈடுபடுதல்:

* வாசித்தல்

* மகிழ்ச்சிக்காக எழுதுதல்

* இசைகருவிகள் வாசித்தல்

* முதியோர் கல்வியில் சேருதல்

* குறுக்கெழுத்து, புதிர், சதுரங்கம் ஆகிய உள்ளரங்க விளையாட்டுக்கள்

* நீச்சல்

* பந்துவீசுதல் போன்ற குழு விளையாட்டுக்கள்

* நடை, யோகா மற்றும் தியானம்