உயர்பொறுப்புகளை அலங்கரிக்கும் பெண்கள்.. இந்தியாவிற்கே முன்னோடியான திண்டுக்கல்..!
ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தின் ஒருபகுதியாக இருந்தது திண்டுக்கல். 1985ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் நிர்வாக வசதிக்காக திண்டுக்கல்லை தனியாக பிரித்து திண்டுக்கல் மாவட்டத்தை உருவாக்கினார். மாவட்டம் உருவான காலம் முதல் இன்று வரை திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 24 பேர் ஆட்சித்தலைவர்களாக பணியாற்றியுள்ளனர். அவர்களில் முன்னாள் ஆட்சித்தலைவர் வாசுகி மற்றும் இப்போதைய ஆட்சித்தலைவராக பதவி வகிக்கும் விஜயலட்சுமி ஆகிய இருவர் மட்டுமே பெண்கள். அதேபோல திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆண்கள் மட்டுமே இருந்துவந்த நிலையில் சென்னை மாதவரத்தில் பணியாற்றிய ரவளிபிரியா ஐ.பி.எஸ் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட வன அலுவலராக வித்யா பணிபுரிகிறார். இப்படி ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஐ.எப்.எஸ் என மூன்று முக்கிய பொறுப்புகளிலும் பெண்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். உயர் பொறுப்பில் உள்ள இவர்கள் மூவரைதவிர மாவட்ட ஊரக வளர்ச்சித்திட்ட இயக்குனராக கவிதா, மாவட்ட முதன்மை நீதிபதியாக ஜமுனா, மாவட்ட விளையாட்டு அலுவலராக ரோஸ்மேரி பாத்திமா, மாவட்ட தீயணைப்பு அலுவலராக அம்பிகா, மாவட்ட கோட்டாட்சியராக உஷா, மாவட்ட கிராம பஞ்சாயத்து இணை இயக்குனராக கங்காதரணி ஆகியோர் மாவட்ட அளவிலான உயர்பதவிகளில் நியமிக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர் பொறுப்புகளிலும் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளது இந்தியாவில் முன்னுதரானமாக திகழ்வதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதுபற்றி முன்னாள் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பாலபாரதியிடம் கேட்டதற்கு அனைத்து உயர்பதவிகளிலும் பெண்களே இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு பணியமர்த்தப்படவில்லை. அதேபோல அனைத்து உயர்பதவிகளுக்கும் பெண்களை நியமிக்க வேண்டும் என்று யாரும் கோரிக்கை வைக்கவில்லை. இது தற்செயலாக அமைந்த ஒன்றுதான் இருந்தாலும் வரவேற்கத்தக்கது.
அனைத்து துறைகளிலும் பெண்கள் உயர்பதவிகளை வகிப்பதால் நல்ல நிர்வாகம் நடைபெறும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதிகாரிகளின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.