சிறப்புக் களம்

ஸ்டார்ட் அப் இளவரசிகள் 10: இணையம் வளர்த்த இவா பாஸ்கோ - அது ஒரு சைபர் கஃபே காலம்!

ஸ்டார்ட் அப் இளவரசிகள் 10: இணையம் வளர்த்த இவா பாஸ்கோ - அது ஒரு சைபர் கஃபே காலம்!

PT WEB

யாஹுவும், ஹாட்மெயிலும்தான் இணையத்தின் அடையாளமாக கருதப்பட்ட காலம் ஒன்று இருந்தது உங்களுக்குத் தெரியுமா? சபீர் பாட்டியாதான் இந்தக் காலத்தில் இணைய நாயகர்களில் ஒருவராக கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தார். சபீர் பாட்டியா வேறு யாருமல்ல, ஹாட்மெயிலின் நிறுவனர். ஜி-மெயில் யுகத்தில் ஹாட்மெயிலை பலரும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றாலும் கூட, அந்தக் காலகட்டத்தில் ஹாட்மெயிலில் இ-மெயில் கணக்கு பெறுவது என்பது அத்தனை நவீனமானதாக கருதப்பட்டது.

ஹாட்மெயில் போலவே யாஹு மெயிலும் பிரபலமாக இருந்தது. சொந்தமாக கம்ப்யூட்டர் வசதி இல்லாதவர்கள் கூட, இ-மெயிலை அணுகுவதற்காக சைபர் கஃபேக்களை ஆர்வத்துடன் தேடிச்சென்று கொண்டிருந்த காலம் அது.

இத்தகைய சைபர் கஃபேக்களை நடத்துவதில் முன்னோடிகளில் ஒருவரான இவா பாஸ்கோ (Eva Pascoe) பற்றிதான் இந்த வாரம் பார்க்கப் போகிறோம். இவா பாஸ்கோவை இணைய நாயகிகளில் ஒருவர் என வர்ணிக்கலாம். சைபர் கஃபேக்களை உலகலாவிய அளவில் விரிவடையச் செய்யும் வகையில் செயல்பட்டது, இவாவின் சாதனையாக அமைகிறது என்றால், பெண்களை மனதில் கொண்டு இந்த முயற்சியில் ஈடுபட்டது அவரது தொலைநோக்கிற்கான உதாரணமாக அமைகிறது.

ஆம், சைஃபர் கபே எனும் கருத்தாக்கத்தை பிரபலமாக்கியதோடு, அதை வர்த்தக நோக்கில் அல்லாமல், லட்சிய நோக்கில் செய்ததே இவாவை இணைய நாயகியாக கொண்டாட காரணமாகிறது. இதன் காரணமாகவே இணைய வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை செலுத்தியவராகவும் கருதப்படுகிறார்.

இவாவின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், இணைய வசதியை பொதுவெளிக்கு கொண்டு வந்த சைபர் கஃபேக்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

உள்ளங்கையில் இணையத்தை அணுகுவது சாத்தியமாகி, ரயில் அல்லது பஸ் பயணத்தின்போது இணைய வேகம் மோசமாக இருப்பது பற்றி குறைபட்டுக்கொள்வது இயல்பாக இருக்கும் காலகட்டத்தில், சைபர் கஃபேக்கள் எனும் கருத்தாக்கமே பலருக்கு புதிராக இருக்கலாம்.

எனினும், ஒரு காலகட்டத்தில் சைபர் கஃபேக்கள் புதுமையான கருத்தாக்கமாக அமைந்ததோடு, மிகவும் தேவையானதாகவும் இருந்தன. இணைய வசதி பரவலாகத் துவங்கியதன் முதல் படிக்கல்லாக சைபர் கஃபேக்களை கருதலாம். அதோடு இணைய உலகில் டிஜிட்டல் இடைவெளி இன்றளவும் நீடிக்கும் நிலையில், தனிப்பட்ட கம்ப்யூட்டர் இல்லாதவர்களும் இணையத்தை அணுகுவதை சாத்தியமாக்கிய சைபர் கஃபேக்கள் பின்னே இருக்கும் கருத்தாக்கத்தை நன்றாகவே புரிந்துகொள்ளலாம்.

டிஜிட்டல் ஏற்றத்தாழ்வு மட்டும் அல்ல, பெண்கள் இணையத்தை பயன்படுத்துவதில் உள்ள போதாமைகளை உணர்த்தும் டிஜிட்டல் பாலின பேதத்தையும் மனதில் கொண்டால், சைபர் கஃபே கருத்தாக்கத்தின் மகத்துவத்தை தெளிவாக உணரலாம்.

சைபர் கஃபே என்பவை பொதுவெளியில் இணையத்தை பயன்படுத்த வழி செய்த இணைய மையங்களாக அமைகின்றன. இப்போதும் கூட பல இடங்களில் இவற்றைப் பார்க்கலாம். சைபர் கஃபேக்களின் செல்வாக்கும், தேவையும் வெகுவாக தேய்ந்து போய்விட்டன என்றாலும், இணையத்தின் ஆரம்ப காலத்தில் இந்த மையங்கள் மிக பிரபலமாக விளங்கின. அந்தக் காலகட்டத்தில், புதிய நகரங்களுக்கு செல்பவர்கள் முதலில் கேட்க கூடிய கேள்விகளில் ஒன்றாக 'இங்கே சைபர் கஃபே எங்கே இருக்கிறது தெரியுமா?' என்பதில் இருந்தே, இந்த இணைய மையங்களின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்ளலாம்.

பலரும் தங்களுக்கு இ-மெயில் வந்திருக்கிறதா என பார்க்க சைபர் கஃபேவுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்றால், பெரும்பாலானோருக்கு இணையமும், இ-மெயிலும் அறிமுகமான இடமாக இவை விளங்கின.

சைபர் கஃபேவின் அடிப்படை கருத்தாக்கம் எளிமையானது. இந்த மையங்களில் இணைய வசதி கொண்ட கம்ப்யூட்டர்கள் இருக்கும். பயனாளிகள் இந்தக் கம்ப்யூட்டர் வாயிலாக இணைய வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். அவர்கள் பயன்படுத்தும் நேரத்திற்கு ஏற்ப இணைய வசதிக்கான கட்டணம் செலுத்தினால் போதும். பொதுவாக ஒரு மணி நேரத்திற்கு இத்தனை ரூபாய் எனும் அடிப்படையில் இணைய பயன்பாட்டிற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டன.

இந்த மையங்களில் ஆரம்ப காலத்தில் வசூலிக்கப்பட்ட கட்டண அளவை கேட்டால் மலைப்பாக இருக்கும். மும்பையில் அமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் சைபர் கஃபேவில் ஒரு மணி நேரத்திற்கு 800 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த கஃபே மும்பையின் நட்சத்திர ஓட்டல்களில் ஒன்றான 'லீலா பேலஸ்' ஓட்டலில் அமைக்கப்பட்டது எனும் தகவலில் இருந்து கட்டண விகிதத்தை மட்டும் அல்லாமல், கஃபே கலாசாரத்தையும் கூட புரிந்துகொள்ளலாம்.

சைபர் கஃபேக்கள் அறிமுகமான காலத்தில் அவை, இணைய மையம் மற்றும் காபி கடை ஆகிய இரண்டின் கலவையான தன்மையை கொண்டிருந்தன. இதை காலத்தின் கட்டாயம் எனலாம். ஏனெனில், இணைய மையம் என்பதே அக்காலத்தில் புதுமையானதாக இருந்தது. அதாவது இணைய வசதியை பொதுமக்கள் அணுகுவதற்கான மையம்.

1990-களில் தான் இணையம் பிரபலமாகத் துவங்கி, 1993-ல் இணையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது என்றாலும், இணையத்தை அணுகுவது எளிதாக இருக்கவில்லை. இணைய வசதிக்கான மூலதன செலவு அதிகம் என்பதோடு, சொந்தமாக கம்ப்யூட்டர் வேண்டியிருந்தது. இல்லை எனில் அலுவலக கம்ப்யூட்டரில் இணையத்தை அணுகலாம். (இந்த வாய்ப்பும் கூட வெகு சிலருக்கே சாத்தியமானது).

இந்தச் சூழலில், பொது மக்களும் இணைய வசதியை அறிமுகம் செய்துகொள்ளும் வகையில், இணைய காபி கடைகளாக சைபர் கஃபேக்கள் அறிமுகம் ஆகின. கம்ப்யூட்டர்களை கொண்ட இணைய மையம் என்பது ஈர்ப்பில்லாமல் போகும் என்பதாலோ என்னவோ, காபி பருகுவதற்கான வசதியையும் கொண்டிருந்தன. காபி பருகியபடி, கம்ப்யூட்டரில் இணையத்தில் உலாவலாம் என்பதாக இந்த மையங்கள் அமைந்திருந்தன.

ஆக, பொதுமக்கள் இணையம் என்றால் என்ன என தெரிந்துகொள்ள விரும்பினாலோ அல்லது இணையத்தை அறிந்தவர்கள் இ-மெயில் போன்றவற்றை பயன்படுத்த விரும்பினாலோ சைபர் கஃபேவை தேடிச்செல்லலாம். இத்தகைய சைபர் கஃபேக்களை முதலில் அறிமுகம் செய்தவர்களில் ஒருவரான இவா பாஸ்கோவின் இணைய பங்களிப்பை, இந்த விளக்கத்தின் பின்னணியில் பொருத்திப் பார்க்க வேண்டும்.

உலகின் முதல் சைபர் கஃபே 1989-ம் ஆண்டு தென்கொரியாவில் உருவாக்கப்பட்டதாக கருதப்பட்டாலும், அதற்கு முன்னதாகவே அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் இதற்கான மூல வடிவிலான சைபர் கஃபே உருவாகியிருந்தன என்றாலும், 1994-ல் லண்டலில் அறிமுகமான இவா பாஸ்கோவின் 'சைபரியா' (Cyberia) சைபர் கஃபே தான் இந்தக் கருத்தாக்கத்தை வர்த்தக நோக்கிலும், பயன்பாடு நோக்கிலும் மக்கள் மத்தியில் பிரபலமாக்கிய முதல் சைபர் கஃபே நிறுவனமாக அமைகிறது.

போலந்து நாட்டைச் சேர்ந்த இவா, பிரிட்டனில் குடியேறியிருந்தார். லண்டன் பல்கலை.யில் உளவியல் பாடத்தில் முனைவர் ஆய்வில் ஈடுபட்டிருந்தவருக்கு புரோகிராமிங்கிலும் பரிச்சயம் இருந்தது. ஆய்வு பணிக்காக அவர் இணையத்தில் தகவல்கள் மற்றும் ஆய்வு கட்டுரைகளை தேடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தார். இணையத்தில் ஆய்வுக் கட்டுரைகளை தேடுவது அத்தனை சுலபமாக இருக்கவில்லை.

இந்த நிலையில்தான், வலை என சுருக்கமாக சொல்லப்படும் வைய விரிவு வலை (WWW) அறிமுகமாகி, இணையத்தை அணுகுவதை எளிதாக்கியது. சிக்கலான எந்த புரோகிராமிங் செயல்களும் தேவையில்லாமல் வலை மூலம் இணையத்தை அணுக முடிந்தது. இந்த மாற்றம் இவா போன்றவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இணையத்தில் மூழ்கிய இவா, அதன் பயன்பாட்டில் ஒரு முக்கிய அம்சத்தை கவனித்தார். லண்டனில் தான் புழங்கிய கல்வியாளர்களில் பெரும்பாலும் தொழில்நுட்ப பரிச்சியம் கொண்ட ஆண்களே இணையத்தை அதிகம் பயன்படுத்துவதை அவர் கவனித்தார்.

வலையை முதன் முதலில் பயன்படுத்திய அனுபவம் அற்புதமானது என அவர் குறிப்பிடுகிறார். "வலையை பயன்படுத்துவது எளிதாக இருப்பதைப் பார்த்தபோது மிகப்பெரிய தகவல் தொடர்பு முறை மெல்ல திறந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனது பெற்றோர் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு தொலைக்காட்சி ஈர்ப்புடைய ஊடகமாக அமைந்தது என்றால், இந்த தலைமுறைக்கான ஊடகமாக இணையம் இருப்பதை அவர் உணர்ந்தார்.

வலை அவருக்குள் ஏற்படுத்திய உற்சாகத்தை மீறி அப்போதைய இணையச் சூழல் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. பெண் என்பதாலும், கம்ப்யூட்டர் கில்லாடிகளில் ஒருவராக கருதப்படாதாலும், தன்னால் மாணவர்களுக்கு எளிதாக இ-மெயில் முகவரி பெற்றுத் தர முடியாமல் இருப்பதையும், வலையை பயன்படுத்துவதும் சாத்தியமாகாமல் இருப்பது அவரை வாட்டியது. இந்த நிலையை மாற்றியாக வேண்டும் என்றும் நினைத்தார்.

பெண்களும் இணையத்தை எளிதாக அணுக வழி செய்ய வேண்டும் எனும் உறுதியோடு தனது தோழி தியாரேவுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதன் பயனாக உண்டானதுதான், லண்டனில் சைபர் கஃபேவை அமைக்கும் திட்டம். புரோகிராங் திறன் கொண்டிருந்த இவாவுக்கு போலந்து மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பங்குகள் இருந்தன. அவற்றை விற்று கிடைத்த தொகையை கொண்டு சைபரியா எனும் பெயரில் சைபர் கஃபேவை அமைக்க தீர்மானித்தார்.

இணையத்தை அணுகும் வசதியை அளிப்பதோடு, இளைப்பாறுதலுக்கான காஃபி பானத்தை பருகும் வசதியையும் இணைந்து அளிக்க தீர்மானித்தார். சைபர் கஃபே கருத்தாக்கம் ஏற்கனவே இருந்தாலும், காபி வசதியுடன் இணைய வசதியை அளிப்பது என்பதை இவாதான் முதலில் கொண்டு வந்தார்.

சைபரியா கேஃப் எப்படி இருக்க வேண்டும் என்பதில் அவருக்கு தெளிவான திட்டம் இருந்தது. சமூக கூடலுக்கு ஏற்ற வகையில், பிரதான சாலையின் மூலையில் இந்த மையம் இருக்க வேண்டும் என நினைத்தார். அதற்கேற்ப லண்டனில் மக்கள் புழங்கும் இடத்தில் சைபரியா கஃபேவை அமைத்தார்.

இவாவின் சைபர் கஃபேவை வெறும் வர்த்தக நோக்கிலான மையம் என்று சொல்லிவிட முடியாது. அதன் பின் ஒரு லட்சிய நோக்கம் இருந்தது. பெண்களுக்கு இணையத்தை அறிமுகம் செய்ய வேண்டும் என்பதுதான் அது. ஆம், பெண்கள் பயன்படுத்துவதற்காக தான் சைபர் கஃபேவை அவர் அமைத்திருந்தார். அதோடு, இந்த மையத்தில் பெண்களுக்கு இணையப் பயன்பாட்டில் பயிற்சி அளிக்கவும் தீர்மானித்திருந்தார்.

ஆனால், இவா திட்டமிட்டதற்கு மாறாக, சைபர் கஃபே திறக்கப்பட்டதும் ஆண்களே அதிகம் நாடி வந்தனர். அது மட்டும் அல்ல, இணைய வசதியை பயன்படுத்த வரிசையில் காத்திருந்தனர். இவா இதை எதிர்பார்க்கவில்லை என்றாலும், சைபர் கஃபே கருத்தாக்கத்திற்கான வெற்றியாக இது அமைந்தது. பெண்களை மனதில் கொண்டு இந்த மையத்தை துவக்கியவர், பொதுமக்கள் ஆர்வத்திற்கு ஏற்ப அனைவரையும் வரவேற்றார். எனினும் இணைய பயிற்சி போன்றவை பெண்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டன.

காபி கடை இணைந்த இணைய மைய வசதி கொண்ட இந்த மையம் அதன் புதுமையான தன்மையை கவனத்தை ஈர்த்தது. நாளிதழ்களில் இது தொடர்பான செய்தி வெளியாகி சைபரியா கேஃப் மேலும் பிரபலமானது. இந்த வரவேற்பை அடுத்து இவா மேலும் மையங்களை திறந்தார்.

புதிய மையத்தை துவக்குவதற்கான செலவு அதிகம் என்பதால், ஒப்பந்த அடிப்படையில் இந்த மையங்களை அமைத்தார். இணைய வசதி தொடர்பான ஆர்வம் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்த நிலையில், சைபர் கஃபேவுக்கான வரவேற்பும் பெருகியது. இதன் விளைவாக இவா பிரிட்டனுக்கு வெளியே மற்ற நாடுகளிலும் சைபர் கஃபேக்களை அமைக்கும் செயலில் ஈடுபட்டார். ஐரோப்பாவுக்கும், ஆசிய நாடுகளுக்குமாக பறந்து ஒப்பந்தங்களை மேற்கொண்டு புதிய மையங்களை துவக்கினார்.

ஆனால், முதல் மையத்தை துவக்க அவர் போராட வேண்டியிருந்தது. இந்த கருத்தாக்கம் புதிதாக இருந்தால் வங்கிகள் கடன் வழங்க முன்வரவில்லை. கம்ப்யூட்டர் நிறுவனங்களை அணுகி உதவி கேட்டபோதும் அவை ஸ்பான்சர் செய்ய முன்வரவில்லை. எனினும், இவா மனம் தளராமல் செயல்பட்டு சைபரியாவை உருவாக்கினார்.

சைபரியாவின் வெற்றி இதேபோன்ற கஃபேக்களை மற்ற நிறுவனங்களும் துவக்க வழிவகுத்தது. இந்த வரிசையில்தான், இந்தியாவில் 1996-ம் ஆண்டு மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் நட்சத்திர ஓட்டல்களில் சைபர் கஃபே துவக்கப்பட்டன. நாளடைவில் தனிநபர்களும் சைபர் கஃபேக்களை அமைத்தனர். முக்கிய நகரங்களில் எல்லாம் சைபர் கஃபேக்கள் முளைத்தன. இவை புதிய வர்த்தக வாய்ப்பாக அமைந்ததோடு, கம்ப்யூட்டர் வசதி இல்லாதவர்களும் இணையத்தை அணுக வழி செய்து, இணையம் பரவலாக உதவின.

அடுத்த பத்தாண்டுகளில் சைபர் கஃபே எனும் கருத்தாக்கம் பரவலாகி, எல்லா தரப்பு மக்களும் இணையத்தை அணுகுவதை சாத்தியமாக்கின. ஸ்மார்ட்ஃபோன் வருகை மற்றும் குறைந்த கட்டணத்தில் இணைய வசதி போன்றவை சைபர் கஃபேக்களின் முக்கியத்துவத்தை குறைத்தாலும் இணைய வரலாற்றில் இவை ஒரு மைல்கல்லாக திகழ்கின்றன.

1998-ல் சைபரியா நிறுவனத்தில் இருந்து வெளியேறிய இவா, இணையம் சார்ந்த மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த துவங்கினார். இணைய கலாசாரம் சார்ந்த விஷயங்களுக்காக அவர் சைபர் சலூன் எனும் அமைப்பையும் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

சைபரியா நிறுவனம் முலம் அவர் கோடிகளை குவிக்காவிட்டாலும், இணைய வசதியை பரவலாக்கிய சாதனைக்கும், இணைய வசதியை பெண்கள் அணுக வழி செய்த முன்னோடிகளில் ஒருவராகவும் இவா விளங்குகிறார்.