சிறப்புக் களம்

'செல்வந்தர்களுக்கு வரி விதிப்பீர்' - ஃபேஷன் மேடையை அரசியல் களமாக்கிய அமெரிக்க பெண் எம்.பி

webteam

அமெரிக்காவின் பிரபல ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியான மெட் காலா (Met Gala) குறித்து முன்னெப்போதையும்விட இம்முறை பெரும் பரபரப்பாகவே பேசப்பட்டு வருகிறது. கிம் கடார்ஷியனின் கறுப்பு முழுக்கவச உடையின் வைரல் முதல் 'அந்த ஷோவில் நம்ம ஊரு ரன்பீர் கம்பூர் கலந்துகொண்டால் எப்படி இருக்கும்?' என்ற ரீதியிலான கலாய்ப்பு மீம்கள் வரை கவனம் ஈர்த்த விஷயங்கள் ஏராளம். இதில், அரசியல் ரீதியில் விமர்சிக்கப்பட்டு வருகிறது, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க பெண் எம்.பி அலெக்சாண்ட்ரியாவின் செயல்.

பொதுவாக மாடல் அழகிகளும், நடிகைகளும்தான் ஃபேஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று கவனத்தை ஈர்ப்பார்கள் என்றால், அமெரிக்க இளம் எம்.பி.யான அலெக்சாண்ட்ரியா ஒகாசியோ-கார்டஸ் (Alexandria Ocasio-Cortez ) பங்கேற்று வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். ஏ.ஓ.சி (AOC) என சுருக்கமாக அழைக்கப்படும் அலெக்சாண்ட்ரியா, 'மெட் காலா 2021' நிகழ்ச்சிக்கு அசத்தலான ஆடை ஒன்றை அணிந்து வந்தார். அந்த ஆடையில் 'செல்வந்தர்களுக்கு வரி விதிப்பீர்' எனும் அரசியல் செய்தியை வெளிப்படுத்தி பரபரப்பையும் ஏற்படுத்தியதுதான் ஹைலைட்.

அமெரிக்காவில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்தப் புகழ்பெற்ற ஃபேஷன் நிகழ்ச்சி கடந்த ஆண்டு கொரோனா பேரிடர் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு திங்கள்கிழமை நடைபெற்றது. நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்த ஃபேஷன் நிகழ்ச்சி ஒன்றும் வழக்கமான ஃபேஷன் நிகழ்ச்சி அல்ல. இதில் பங்கேற்பதற்கான டிக்கெட் விலை மட்டும் 35,000 டாலர் என்கின்றனர். இதில் உணவு மேஜைக்கான கட்டணம் மட்டும் 3 லட்சம் டாலர்களாம்.

ஆக, இந்த நிகழ்ச்சியே சமூகத்தின் மேல்தட்டு பிரிவினருக்கானது என புரிந்துகொள்ளலாம். இப்படி ஒரு நிகழ்ச்சியில் அமெரிக்க இளம் எம்.பி.யான அலெக்சாண்ட்ரியா பங்கேற்றுள்ளார். அவரது ஆடையை விட அந்த ஆடையில் இடம்பெற்றிருந்த செய்திதான் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 'செல்வந்தர்களுக்கு வரி விதிப்பீர்' எனும் பொருள்படும் வகையில் 'Tax The Rich' எனும் ஆங்கில எழுத்துகளை அவர் ஆடையில் இடம்பெறச் செய்திருந்தார்.

பொதுவாக 'செல்வந்தர்களுக்கு வரி விதிக்க வேண்டும்' எனும் கோரிக்கை, சமூக செயற்பாட்டாளர்களால் தொடர்ந்து எழுப்பப்படுவதுதான். ஆனால், இளம் எம்.பி அலெக்சாண்ட்ரியாவும் செயற்பாட்டாளராகத்தான் கருதப்படுகிறார். அதனால்தான் ஃபேஷன் நிகழ்ச்சியில் இப்படி அரசியல் செய்தி சொல்லும் ஆடை அணிந்து வந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

இப்படி ஆடை அணிந்து வந்ததற்கான காரணத்தையும் அவர் சி.என்.என் செய்தி நிறுவனத்திடம் பேசியபோது 'பளிச்' என கூறியிருக்கிறார். "எல்லா வகுப்பு மக்கள் மத்தியிலும் இந்தச் செய்தியை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே எனது நோக்கம்'' என்று அவர் கூறியுள்ளார்.

அலெக்சாண்டிரியாவின் இந்தச் செயல் ட்விட்டரில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 35,000 டாலர் கட்டணம் கொண்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, 'செல்வந்தர்களுக்கு வரி விதிப்பீர்' எனும் செய்தியை சொல்லியிருக்கிறார் என ஒரு தரப்பினர் நகைமுரண் என்று விமர்சனம் செய்தாலும், இன்னொரு தரப்பினர் அவரது துணிச்சலை பாராட்டியிருக்கின்றனர்.