சிறப்புக் களம்

11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்

11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்

webteam

தங்கத்திற்கு மாற்றான உலோகம் உலகில் இல்லை. ஆகவேதான் அதற்கு அவ்வளவு மவுசு. வைர நகைகளில் கூட செயற்கை உலோகங்கள் உலாவ ஆரம்பித்துவிட்டன. அந்த இடத்திற்கு தங்கம் இன்னும் தள்ளப்படவில்லை. அப்படிப்பட்ட உலோகத்தை எளிமையாக எப்படி சேமிப்பது? நாட்டில்  குண்டுமணி தங்கத்திற்கு கூட வழியில்லாமல் வாழும் மக்கள் உள்ள இந்தியாவில்தான் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பயன்படுத்தப்படாமல் முடங்கிப் போய் கிடக்கிறது. 

தங்கத்தை சேமிக்க எளிய வழி:

“இந்தியாவில் 20 ஆயிரம் டன்னுக்கு மேல் தங்கம் பயன்படுத்தப்படாமல் உள்ளது. நம் நாடு ஏழையாக இருப்பதற்கு இதுவும் காரணம்.” என்று பிரதமர் நரேந்திர மோடி ஆதங்கப்பட்டு பேசியிருந்தார். பொருளாதார சுழற்சிக்குள் இல்லாமல் மிக அதிகப்படியான செல்வம் முடங்கிக் கிடக்கிறது. வெறுமனே தங்கத்தை வாங்கி வீட்டில் வைப்பதை விட அது ஏதோ ஒரு வழியில் நாட்டிற்கும் உதவ வேண்டும். அப்படி உதவும் பட்சத்தில் நாட்டின் பொருளாதாரத்தோடு சேர்ந்து வீட்டின் பொருளாதாரமும் உயரும். அதன்படி அரசாங்க பாதுக்காப்பில் தங்கத்தை சேமிக்க மூன்று எளிய வழிகள் உள்ளன.

 * 1999 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தங்க டெப்பாசிட் திட்டத்திற்கு பதிலாக தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டத்தில் ஒரே நேரத்தில் குறைந்தபட்சம்  30 கிராம் டெபாசிட் செய்யலாம்.  இது கட்டித்தங்கமாகவோ, அல்லது நாணயமாகவோ, நகையாகவோ கூட இருக்கலாம். இதில் அதிகபட்ச உச்சர வரம்பு என எதுவும் கிடையாது.

* இரண்டு கிராம் தங்க சேமிப்பு பத்திரம் முதல் 500 கிராம் தங்க சேமிப்பு பத்திரம் வரை பத்திரங்கள் மூலம் தங்கத்தை சேமிக்கலாம். இந்தப் பத்திரங்கள் வங்கிகளிலும் அல்லது அஞ்சகங்களிலும் கிடைக்கும். இதன் முதர்ச்சி காலம் மொத்தம் எட்டாண்டுகள். குறிப்பிட்ட கால முதிர்ச்சிக்கு பின் நாம் எத்தனை கிராம் தங்கத்தை பத்திர முதலீடாக செய்துள்ளோமோ அதற்கு ஈடாக தங்கமாகவோ அல்லது பணமாகவோ திரும்ப  பெற்றுக் கொள்ளலாம். பணமாக பெறும் பட்சத்தில் அதற்கு  சிறு வரி பிடித்தம் போக மீதித் தொகையை பெற்றுக் கொள்ள முடியும். அதே தங்கமாக பெறும் பட்சத்தில் அதற்கு வரி பிடித்தம் இருக்காது. பத்திர முதிர்ச்சியடையும் போது சந்தையில் தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்திருந்தாலும் நாம் முன்கூட்டியே முதலீடு செய்த தங்கத்தின் அளவு கொஞ்சமும் குறைவில்லாமல் பத்திர முதலீட்டாளர் பெற்றுக் கொள்ளலாம்.

* இந்திய தங்க நாணயம், தங்கக்கட்டி திட்டம். இதில் குறிப்பிட்ட முத்திரையோடு அச்சிடப்பட்ட தங்க நாணயம் வழங்கப்படும். இந்த நாணயத்தில் முன் புறம் அசோக சக்கரம் பின் புறம் மகாத்மா காந்தி உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். 5 கிராம் முதல் 10 கிராம் வரையான தங்கக் காசுகள் இதில் வழங்கப்படும். அதிகபட்சம்  20 கிராம் தங்கக் கட்டி கிடைக்கும். இதில் போலிகள் நடமாற்றம் இல்லாத அளவுக்கு அரசு கவனமாக நாணயத்தை உருவாகிக் கொடுக்கிறது. இது 24 காரட் தங்கம். சுத்த ஹால்மார்க் முத்திரையும் கொண்டது. 

தங்கக்காசுகள் வாங்கலாமா?

அரசாங்கம் தரும் சேமிப்பு இருக்கட்டும் சாதாரணமான பொது ஜனம் எப்படி தங்கத்தை எளிய வழியில் சேமிப்பது? பதில் கொடுக்கிறார் தங்க முதலீட்டு ஆலோசகர்,  ஹரிகுமார். “நடுத்தர வர்க்கமோ அல்லது ஏழை எளிய மக்களோ யாராக இருந்தாலும் தங்கத்தை சேமிப்பதற்கு ஒரே முறைதான் பெஸ்ட். பொதுவாக தங்க நகைகளாக வாங்கி வைப்பதை அவர்கள் தவிர்க்க வேண்டும்.  தங்க நகைகளாக வாங்கப்படும் தங்கத்தில் வாங்கும் போதே 15 சதவிதம் கழிவுக்கு போய்விடும். திரும்ப விற்கப்படும்போதோ அல்லது புது நகையாக மாற்றுப்படும் போதோ ஒரு குறிப்பிட்ட சதவிதம் திரும்ப கழிவுகள் போடப்படும். 

ஆக, இந்த முறையில் தங்கத்தை சேமிக்க ஆரம்பிக்கும்போதே கண்ணுக்கு புலப்படாத அளவில் சில நஷ்டங்கள் வாடிக்கையாளர் தலையில் விதிக்கப்படுகின்றன. ஆகவே தங்க சேமிப்பு என்றால் கோல்டு பிஸ்கட், கோல்டு காயின் வழிகளில் தங்கத்தை வாங்கி சேமிப்பதுதான் லாபகரமான நல்ல முறை. நகைக் கடைகளில் சீட்டு போட்டு சேமிப்பது கூட சரியான வழியல்ல; நம் கையில் உள்ள தொகைக்கு ஏற்ப தங்கக் காசுகளை வாங்கி வைத்து சேமிக்கும் முறை கொஞ்சம் பழமையானது என்றாலும் அதுதான் தங்க சேமிப்பிற்கான மிகச் சிறந்த முறை. இப்படி வாங்கும் நகைகளை வீட்டில் வைத்து நீண்ட காலத்துக்கு பாதுக்காப்பது சிரமம். அதற்கு பாதுக்காப்பதற்காகவே அரசு வங்கிகள் மூலம்  ‘gold monetisation scheme’களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அத்திட்டத்தில் நமக்கான தனி கணக்கை தொடங்கிக் கொண்டு  நம் கைவசம் உள்ள தங்கக் காசுகளை லாக்கரில் வைத்து குறிப்பிட்ட ஆண்டு வரை சேமித்தால் வங்கி அதற்கு குறிப்பிட்ட வட்டித் தொகையை கிடைக்கும். முன்பெல்லாம் நகையை கடையில் வைத்து நாம் வட்டிக் கட்டுவோம். ஆனால் இப்பொழுது வங்கியே நமக்கு நகையை வாங்கிக் கொண்டு வட்டிக் கொடுக்கிறது. நம் நகைக்கும் பாதுகாப்பு அதே நேரத்தில் உங்கள் சேமிப்புக்கு வட்டியும் கிடைக்கிறது. எளிமையாக சொன்னால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ”என்ற ஹரி இன்பகரமான தகவலோடு ஆரம்பிக்கிறார்.

“தங்க விலையை பொறுத்தளவில் கடந்த சில ஆண்டுகளாக சரிவை சந்தித்து வந்தது. ஆனால் அந்த சரிவு இனி இருக்கப் போவதில்லை. கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே 17 சதவீதம் வளர்ச்சியை தங்கத்தின் விலை எட்டியிருக்கிறது. அது தங்க சேமிப்புக்கான நல்ல அறிகுறி. இனி 11 ஆண்டுகளுக்கு தங்க விலை ஏறிக் கொண்டேதான் இருக்கும். இனிமேல் விலை இறங்கவே இறங்காது.  ஏனென்றால் தங்கத்தின் விலை என்பது பொதுவாக 11 ஆண்டுகள் விலை ஏறும். 4 ஆண்டுகள் விலை சரியும். அதன்படி கணக்கிட்டால் இனி வரும் காலங்கள் தங்கத்திற்கு ஏறு முகம்” என்கிறார் ஹரி.