சிறப்புக் களம்

மூடப்படுகிறதா ஏர்செல்? கட் ஆன சிக்னல்; கலக்கத்தில் கஸ்டமர்கள்!

மூடப்படுகிறதா ஏர்செல்? கட் ஆன சிக்னல்; கலக்கத்தில் கஸ்டமர்கள்!

webteam

ஏர்செல்.. இந்தியாவின் 6வது மிகப்பெரிய செல்போன் சேவை நிறுவனம். அது சமீப நாட்களாக தள்ளாடிக் கொண்டிருக்கிறது. வாடிக்கையாளர்களின் அழைப்புகளை கூட ஏற்க முடியாத நிலைக்கு சென்றிருக்கிறது. அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களும், ஆள விடுங்கடா சாமிகளா என்ற குரல் ஒலிக்க தொடங்கியிருக்கிறது. ஆனால், மொபைல் எண்ணை அப்படியே வேறு செல்போன் சேவை நிறுவனத்துக்கு மாற்ற முடியாமல் வாடிக்கையாளர்கள் பரிதவிக்கும் நிகழ்வும் நடந்து கொண்டிருக்கிறது.

ஏர்செல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹைசத் ஹீர்ஜீ தனது சகப் பணியாளார்களுக்கு ஒரு இ-மெயில் அனுப்பியுள்ளார். அதில் “மிக இக்கட்டான சூழலில் நாம் நிற்கிறோம், எந்தவிதமான பண உதவியும் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை; இருப்பதை வைத்தே சரிசெய்யும் நிலை மட்டுமே நமது நம்பிக்கை” என்று எழுதியுள்ளார். மேலும், கடுமையான போட்டி உருவாகியுள்ள இந்தச் சூழலில், நிதிச்சுமையும் நம்மை சேர்த்தே அழுத்துகிறது, அப்படியான சூழலில் பாதிக்கப்படமால் நாம் தப்பித்து விட முடியாது. ஆனால் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், வரும் நாள்கள் கஷ்ட காலமாகவே நகரும் என்று கூறியுள்ளார்.

தமிழகத்தில் சிவசங்கரன் என்பவரால் 1999-ல் தொடங்கப்பட்ட ஏர்செல், தமிழகத்தின் கடைக்கோடி வரை மொபைல் சேவையை கொண்டு சேர்க்க உதவியது. கிரிக்கெட் வீரர் தோனி, நடிகர் சூர்யா ஆகியோர் கூட ஏர்செல் நிறுவன விளம்பரங்களில் நடித்து அதனை பிரபலபடுத்தினார். இதர செல்போன் சேவை நிறுவனங்களோடு சேர்ந்து நாட்டின் மற்றைய பகுதிகளிலும் தனது சேவையை விரிவுபடுத்தி, இந்தியாவின் 6-வது மிகப்பெரிய செல்போன் சேவை நிறுவனம் என்று விரிவடைந்து. அந்தப் பெயரை கடந்த ஆண்டு வரை தக்க வைத்திருந்தது ஏர்செல். இந்த நிலையில்தான் திடீரென எந்தக் காரணமும் கூறாமல், தனது சேவையை ஆங்காங்கே துண்டித்து வருகிறது ஏர்செல்.

இது தொடர்பாக 20க்கும் மேற்பட்ட ஏர்செல் வாடிக்கையாளார்களை தொடர்பு கொண்டது புதிய தலைமுறை. கடந்த சில தினங்களாகவே ஏர்செல் இணைப்பில் குறைபாடுகள் இருந்ததாகவும், இன்று ஓரளவுக்கு ஓகே என்றும் கூறினார்கள். மேலும் ஊரகப்பகுதிகளில் சிக்னல் கிடைப்பதில் இன்னும் சிக்கல் இருப்பதாக சிலர் தெரிவித்தனர். அதே நேரத்தில் வேறு நெட்வொர்க்கிற்கு மாறும் வசதியை ஏர்செல் நிறுத்தி வைத்திருப்பதாகவும், வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகாரளித்தும் பயனில்லை என்றும் தெரிவித்தனர்.

இதற்கிடையில், ஏர்செல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், “எதிர்பாராமல் ஏற்பட்ட சிறிய பிரச்னைகள் காரணமாக சேவை அளிப்பதில் தடங்கல் உள்ளதாகவும், சேவைக் குறைபாடுகள் சரி செய்யப்பட்டு விரைவில் உரிய சேவை வழங்கப்படும் என்பதால், யாரும் வேறு நிறுவனங்களுக்கு மாற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 2016 ஜூலை வரை ஒரு காலாண்டுக்கு ஏர்செல் நிறுவனம் ரூ.120 கோடி நிகர லாபம் ஈட்டிவந்தது. ஆனால் கடந்த 2017 ஜூலையில் காலாண்டுக்கு ரூ.5 கோடி மட்டுமே லாபம் ஈட்ட முடிந்தது. இதனால் நேரடி முதலீட்டை அந்நிறுவனத்தின் தலைமையகம் கைவிட்டது. 

சில நாட்களுக்கு முன்பு ஏர்செல் நிறுவனம் நிதிப்பற்றாக்குறை காரணமாக மூடப்பட உள்ளதாக தகவல் பரவியது. இதனை அடுத்து ஏர்செல் பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாற ஆரம்பித்தனர். தொடக்கத்தில் குறைவாக மாற ஆரம்பித்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, போகப்போக அதிகரிக்க ஆரம்பித்ததை அடுத்து அலர்ட் ஆனது ஏர்செல். மாறும் வசதிக்கான MNP வசதியை நிறுத்தியது. இதனால் வாடிக்கையாளர்கள் ஏர்செல் நிறுவனம் மூடப்பட்டு விடுமோ என்ற அச்சத்துக்கு சென்றுள்ளனர்.

ஆனால், வாடிக்கையாளர்களின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஏர்செல் நிறுவனம், யார் விரும்பினாலும் வேறு நெட்வொர்க்கிற்கு மாறிக் கொள்ளலாம் என்றும், 30 நாட்கள் வரை மாறும் வசதிக்கான ஒப்புதலை அளிக்க ட்ராய் விதி வழிவகை செய்கிறது என்றும் தெரிவிக்கிறது. ஆனாலும், பல இடங்களில் சிக்னல் இல்லை என்பதும், வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகாரளிக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதும் உண்மை. உரிய நடவடிக்கை மேற்கொண்டு சீரமைக்காவிட்டால் 80 லட்சம் வாடிக்கையாளர்களை எளிதில் இழக்கும் நிலைக்கு சென்று விடும் ஏர்செல்.