அமித் ஷா வருகைக்குப் பிறகு, அதிமுக தேர்தல் முகாம் நிலவரம் வெளிவரத் தொடங்கிய நிலையில், திமுக முகாம் எப்படி இருக்கிறது?
இன்னும் நான்கே மாதங்கள்தான். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவிட்டது. அதற்காக, தமிழகத்தில் இப்போதிலிருந்தே பரபரப்பு தொற்றிக் கொண்டுவிட்டது. அரசியல் கட்சிகள் பரஸ்பரம் கடுமையாக சாட ஆரம்பித்துவிட்டன. செல்லும் இடங்களிலெல்லாம் திமுகவை காட்டமாக விமர்சித்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதேபோல் இருந்த இடத்தில் இருந்தே அதிமுகவை சரமாரியாக சாடி வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.
இது ஒருபுறமிருக்க, 'அரசு கூட்டம் எனக் கூறி, அதிமுகவின் பரப்புரையை சாமர்த்தியமாக நடத்தி வருகின்றனர் இரட்டையர்கள். ஆனால் எங்கள் பரப்புரையை நடத்த விடாமல் அதிமுக அரசு கைது நடவடிக்கைகளை எடுத்து இடையூறு செய்து வருகிறது' என்று திமுகவினர் புலம்பி வருகின்றனர்.
மேலும் அவர்கள் நம்மிடம் பேசும்போது, "அதிமுகவை வீழ்த்தி ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என தலைவர் ஸ்டாலின் உறுதியாகக் களமிறங்கியிருக்கிறார். இதற்காக திமுக பரப்புரையை தொடங்கி, மக்களை நேருக்கு நேராக சந்திக்க ஆரம்பித்துவிட்டது.
எங்கள் தலைவர் ஸ்டாலின் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே காணொலி வாயிலாக மக்களைக் காண ஆரம்பித்துவிட்டார். நிர்வாகிகளை நியமனம் செய்து குறைகளையும் கேட்டறிந்து வருகிறார். எதிர்கட்சியாக இருந்துகொண்டே ஏழை மக்களுக்கு நிவாரணங்களையும் வாரி வழங்கி வருகிறார்.
ஆடு எட்டு அடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதற்கேற்ப திமுகவின் இளைஞர் அணிச் செயலாளரும் ஸ்டாலின் மகனுமான உதயநிதி கடந்த 3 நாட்களாக பரப்புரையைத் தொடங்கி நடத்தி வருகிறார். ஆனால், மூன்று நாட்களும் போலீசார், உதயநிதியை பிடித்து கைது எனக் கூறி, திருமண மண்டபத்தில் அடைத்து வருகின்றனர். ஆனாலும் திமுகவின் பரப்புரை ஓயாது தொடரும்" என்கின்றனர் உறுதியாக.
உதயநிதி ஸ்டாலினின் 100 நாள் பரப்புரை என்பது பிரசாந்த் கிஷோர் டீம் போட்டுக் கொடுத்த வியூகம்தானாம். மக்களைக் களத்தில் சந்திக்கும் வடமாநில வெற்றி உத்திகளையே இங்கும் நடைமுறைப்படுத்தி வருகிறது பி.கே. டீம். திமுக தலைவர் ஸ்டாலின் வரும் ஜனவரி 5 ஆம் தேதி முதல் பரப்புரையை தொடங்க திட்டமிட்டுள்ளார். இதையொட்டிய கள ஆய்வுகளிலும், உத்திகளை வகுப்பதிலும் பி.கே டீம் படுபிசியாக இருக்கிறதாம்.
இதனிடையே, அரசின் பரப்புரைத் தடுப்பு நடவடிக்கையை எதிர்கொள்ளும் வகையில், திமுக திங்கள்கிழமை உயர்மட்ட செயல்திட்டக்குழுவை கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் 'எத்தனைத் தடைகள் வந்தாலும், அவற்றை உடைத்தெறிந்து திமுகவின் பரப்புரை பயணம் தொடரும்' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், மக்களாட்சியில் ஒவ்வொரு அரசியல் கட்சியினருக்கும் தேர்தல் பரப்புரை செய்யும் உரிமை உண்டு என்றும், கொரோனா ஆய்வு என்ற போர்வையில் மாவட்டம்தோறும் முதலவர் எடப்பாடி பழனிசாமி அரசு விழாவை அரசியல் கூட்டமாக நடத்துகிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ள திமுக, அதிமுக அரசின் நடவடிக்கைகளைமீறி மக்களிடம் பரப்புரை நடத்த வியூகங்களை வகுத்து வருகிறது.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் கேட்டபோது, "திமுகவை பொறுத்தவரை, இது மிக முக்கியமான சட்டப்பேரவைத் தேர்தல். 1977-க்கு பிறகு 1989 ஆம் ஆண்டில்தான் திமுக ஆட்சிக்கு வருவதைப் பார்க்க முடிந்தது. அந்த வகையில் இப்போது முக்கியமான தேர்தல்தான். நாடாளுமன்றத்திற்காக அமைக்கப்பட்ட கூட்டணியை வைத்தே பல முன்னெடுப்புகளை திமுக எடுத்து வருகிறது.
காங்கிரஸ் சார்பிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. திமுகவின் முன்னெடுப்புகளில் உதயநிதியின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. வேல் யாத்திரைக்கு ஒரு அளவுகோல் வைத்திருக்கும்போது, உதயநிதிக்கு வேறு ஒரு அளவுகோல் வைக்கமுடியாது. எத்தனை வழக்குகள் பதிவு செய்தாலும் அவர்கள் பரப்புரையில் ஈடுபடத்தான் முனைவார்கள்.
பீகாரில் தேர்தலே நடந்து முடிந்துவிட்டது. இனிமேல் பரப்புரைக்கு கைது என்பதெல்லாம் தேவையில்லாத ஒன்றாகத்தான் நான் பார்க்கிறேன். அதிமுக - பாஜக கூட்டணியை வீழ்த்த திமுக கடுமையான வியூகங்களை வகுத்து வருகிறது. அரசு விழாவில் கூட்டணி குறித்தும் மற்ற கட்சிகளை விமர்சனம் செய்வதும் எந்த வகையில் சரி என்று தெரியவில்லை" என்றார்.
இந்தப் பின்புலம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ரவீந்திரன் துரைசாமியிடம் கேட்டபோது, "கூட்டணி குறித்த அறிவிப்பை அதிமுக வெளிப்படுத்திவிட்டது. ஆனால், பேரம் பேசுவதற்காக பாஜக அந்தக் கூட்டணியை இன்னும் உறுதி செய்யாமல் இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியை பொருத்தவரை பேரம் பேசுவதற்கு வழியே இல்லை. மோடி, காங்கிரஸ் - திமுக கூட்டணியை பிரிக்கப் பார்க்கிறார். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என அகில இந்திய காங்கிரஸ் தலைமை சோனியா காந்தியே 'கூட்டணி தொடர்ந்தால் போதும், சீட்டெல்லாம் இரண்டாம் கட்டம்தான்' என முடிவெடுத்துவிட்டார். மோடியின் ராஜதந்திரத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது என தெளிவாக உள்ளார். ஆனால், தமிழக காங்கிரஸ் தலைமை தனது தொண்டர்களையும், இரண்டாம் கட்ட தலைவர்களையும் உற்சாகப்படுத்துவதற்காக சீட்டு கேட்பது குறித்து பேசி வருகின்றனர்" என்றார்.
திமுகவைப் பொறுத்தவரை, தொகுதிப் பங்கீட்டில் மிகத் தெளிவாக தனிப் பெரும்பான்மைக்கு ஏற்ப கணக்குகளை இறுதி செய்துவிட்டது என்றும், பிரச்சார வியூகங்களில்தான் முழு கவனமும் செலுத்தப்பட்டு வருகிறது என்றும் அறிவாலய வட்டாரங்கள் கூறுகின்றன.
'வாரிசு அரசியல்', 'ஊழல்' ஆகிய விவகாரங்களை முன்வைத்து திமுகவுக்கு எதிரான பிரசார ஆயுதமாக்க வேண்டும் என்று தமிழகத்தில் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் அசைன்மென்ட் கொடுத்ததுடன், தமிழக அரசின் மேடையிலேயே அதை முழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார் அமித் ஷா. இதை எதிர்கொள்ளும் உத்திகளையும், அதிமுக - பாஜகவுக்குமான பதிலடிகளையும் தயார் செய்து வருகிறதாம் திமுக முகாம்.
'பாஜகவின் நெருக்கடியால் பின்னடைவுகளைச் சந்தித்தாலும், அரியர் மாணவர்களுக்கு ஆல் பாஸ், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீடு தொடங்கி சாமானிய மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் ஆன்லைன் ரம்மி தடை வரை முதல்வர் எடப்பாடி தனது அதிரடிகளால் மக்களை வசீகரிக்கவும் தொடங்கியிருக்கிறார். கள அரசியலில் எடப்பாடிக்கு ஈடு கொடுப்பது திமுகவுக்கு கடினமான ஒன்றுதான்' என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
- விக்ரம்