சிறப்புக் களம்

திமுக வியூகத்தை முறியடிக்க திட்டம் போடுகிறதா அதிமுக..?

திமுக வியூகத்தை முறியடிக்க திட்டம் போடுகிறதா அதிமுக..?

webteam

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அப்போது முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வத்தை ராஜினாமா செய்ய வைத்துவிட்டு அரியணையில் ஏற சசிகலா முயற்சி செய்தார். அந்த எண்ணம் கைகூடவில்லை. ஏற்கெனவே நிலுவையில் இருந்த சொத்துக்குவிப்பு வழக்கு சசிகலாவை சிறைக்கு அழைத்துச் சென்றது.

இதனால் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியை முன்மொழிந்தார் சசிகலா. இதையடுத்து துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனின் தலையீடு கட்சியில் அதிகம் இருந்ததால் அமைச்சர்கள் மூலம் பன்னீர்செல்வத்திற்கு தூதுவிட்டார் எடப்பாடி. அவரும் தலையசைக்க டிடிவியை ஓரங்கட்டியதோடு, ஒபிஎஸ்சுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.

அதிமுக அவ்வளவுதான் என எதிர்க்கட்சியினர் கூறிவந்த நிலையில், கட்சியை பிளவு படாமல் கட்டமைத்தார் எடப்பாடி பழனிசாமி. அதற்காக சசிகலாவையே ஓரங்கட்டியது அதிமுக. ஒரு புறம் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், மறுபுறம் திமுக என பல்வேறு பிரச்னைகள் இருந்தாலும் அதிமுகவினருக்கு நம்பிக்கை ஊட்டிய எடப்பாடி பழனிசாமி, கட்சியை கட்டி காத்து வந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். ஜெயலலிதா விட்டுச்சென்ற ஆட்சியை கவிழவிடாமல், மீதமுள்ள 4 ஆண்டு காலத்தை எடப்பாடி பழனிசாமி வழிநடத்தி வருகிறார்.

இதனிடையே உட்கட்சித் தேர்தலில் போட்டியிடுவோர் தொடர்ந்து 5 ஆண்டுகள் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் விடுதலை ஆகி வரவுள்ளதாக செய்திகள் பரவிய நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அப்படி சசிகலா விடுதலையாகும் பட்சத்தில் அதிமுகவில் அவர் சேர்க்கப்படுவாரா? அப்படி சேர்க்கப்பட்டால் கட்சியில் எந்தப் பதவி கொடுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வந்தன. இத்தகைய சூழலில்தான், சசிகலாவை கட்சியில் இருந்து ஓரங்கட்டவே அதிமுக விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்பட்டது.

இது ஒருபுறமிருக்க, வரவுள்ள 2021 சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்போடு திமுகவும், ஆட்சியை தக்க வைத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தோடு அதிமுகவும் செயல்பட்டு வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், இடைத் தேர்தலிலும், ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவே அதிக இடங்களை கைப்பற்றியது. அதிமுகவோ பார்டரில்தான் பாஸ் ஆனது. இதனால் வரும் தேர்தலில் ஆட்சியை தக்க வைப்பதே அதிமுகவுக்கு பெரும்பாடாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் 2021 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவது உறுதி என்றும் ரஜினிக்கும் திமுகவுக்கும்தான் போட்டி இருக்கும் என்றும் ரஜினியின் ஆதரவாளர்கள் வாய்ஸ் கொடுத்து வருகின்றனர். இதனால் அதிமுகவுக்கு இன்னும் நெருக்கடி அதிகரித்துள்ளது.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மக்களிடம் நல்ல பெயர் வாங்குவது, மக்களுக்குத் தேவையான திட்டங்களை அறிவிப்பது, மக்களை நேரடியாக சந்தித்து வாக்குகளை பெற முயல்வது என்பதையெல்லாம் தாண்டி, சமீப காலமாக கார்ப்பரேட் நிறுவனங்களையே அரசியல் கட்சிகள் பெரிதும் நம்பியிருக்கின்றன. இதற்காக உதவுவதற்கென்று, சில கார்ப்பரேட் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அதில் முதலிடத்தில் இருப்பது பிரசாந்த் கிஷோரின் ’ஐபேக்’. அதாவது “இந்தியன் பொலிட்டிக்கல் ஆக்ஷன் கமிட்டி”.

குஜராத்தில் 2012-ஆம் ஆண்டு நரேந்திர மோடி மூன்றாவது முறையாக முதல்வர் ஆக பிரஷாந்த் கிஷோர் கொடுத்த ஆலோசனைதான் காரணம் என பேசப்பட்டது. 2014-ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க அதிக பெரும்பான்மையுடன் வென்றதிற்கு பின்புலமாக நின்றது பிரஷாந்த் கிஷோரின் ஐபேக்.
அதேபோல், 2015 பீகார் சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் நிதிஷ் குமாருக்கு ஆதரவாக வேலை செய்தார் பிரஷாந்த் கிஷோர். இதில் நிதிஷ் குமார் வெற்றிப் பெற்றார். 2019 தேர்தலில் ஆந்திராவில் பிரஷாந்த்தின், ஐடியாக்களால் 151 தொகுதிகளைக் கைப்பற்றி, ஜெகன் மோகன் ரெட்டி முதல்வரானார்.

இந்நிலையில், திமுக தனது 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு வியூகத்தை அமைத்து தர பிரசாந்த் கிஷோருடன் கைக்கோர்த்துள்ளது. இதை திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தார்.

இதற்கு பதிலாக அதிமுகவும் தங்களது 2021-ஆம் ஆண்டு தேர்தலுக்கான களப்பணியை தொடங்கியுள்ளது. அதாவது, சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களப் பணிகளைத் தொடங்குமாறு, அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நேற்று முதல் தொடங்கிய இக்கூட்டம் தொடர்ந்து 4 நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோல்வியுற்ற இடங்களை ஆய்வு செய்து, அங்குள்ள பிரச்னைகளைக் களைவதற்கு தொண்டர்கள் பணியாற்றத் தொடங்க வேண்டுமென நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருட காலம் இருக்கும் நிலையில், திமுகவில் பிரசாந்த் கிஷோரின் வருகையை பார்த்ததும், அதிமுகவும் களப்பணி ஆற்ற முனைப்பு காட்டுவது, அதிமுகவை பயம் தொற்றிக்கொண்டதா என கேள்வி எழும்பச் செய்கிறது.