சிறப்புக் களம்

நஷ்டமடைந்தாலும் நம்பிக்கையை கைவிடாத விவசாய தம்பதியினர் !

நஷ்டமடைந்தாலும் நம்பிக்கையை கைவிடாத விவசாய தம்பதியினர் !

webteam

திருவாரூரில் 40 ஆயிரம் நஷ்டமாகியும் தன்னம்பிக்கையை கைவிடாமல் மீண்டும் சம்பா தெளிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் விவசாய தம்பதிகள்.

வேளாண்மை தொழில் என்பது தமிழர்களின் பாரம்பரிய தொழில். அதிலும் குறிப்பாக காவிரி டெல்டா பகுதி முழுமையாக விவசாயத்தையே நம்பியுள்ளது. இந்த சூழ்நிலையில் உற்பத்திப் பொருளுக்கு உரிய விலை கிடைக்காதது, இடுபொருட்களின் விலை உயர்வு என நாடு முழுவதும் விவசாயிகள் தங்களது தொழிலை கைவிட்டு மாற்று தொழிலுக்கு சென்று வருகின்றனர் .இந்தப் பிரச்சனையோடு தமிழகத்தில் கூடுதலாக தண்ணீர் பிரச்சனை விவசாயிகளின் பெருந்துயருக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.

காவிரி டெல்டாவை பொருத்தவரை விவசாயிகளிடையே பரவலான சொல்லாடல் ஒன்று உண்டு. விவசாயத் தொழிலை ஒன்று காய்ந்து கெடுக்கும் அல்லது பெய்து  கெடுக்கும் என்பதுதான் அது. அந்த வகையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் உரிய தண்ணீர் இருந்த போதும் ,அதனை கடைமடை விவசாய நிலங்களுக்கு கொண்டுவந்த சேர்க்காத நீர் மேலாண்மை குளறுபடி காரணமாக, விளை நிலங்களுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் நடப்பாண்டில் விவசாயிகள் சம்பா சாகுபடியை செய்ய பெரும் பாடுபட்டு வருகிறார்கள்.

மேட்டூர் அணை ஜூலை 19ம் தேதி திறக்கப்பட்டது. இதனால் நம்பிக்கையோடு சாகுபடி பணியை விவசாயிகள் திருவாரூர் மாவட்டத்தில் 1.70 லட்சம் ஏக்கர் நேரடி விதைப்பிலும் 44500 ஏக்கர் நடவு முறையிலும் விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பணிகள் தொடங்கிய நேரத்தில், முக்கொம்பு அணை உடைந்து தண்ணீர் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் தண்ணீர் வேகமாக வந்து கொண்டிருக்கிறது. ஆனால்  பெரும்பாலான இடங்களில் கிளை வாய்க்காலில் தண்ணீர் ஏறி பாயவில்லை. அவ்வாறு தண்ணீர் கிடைக்காத விளைநிலங்களில் தெளிப்பு மற்றும் நடவு செய்யப்பட்ட பயிர்கள் தற்போது கருகி உள்ளன. அவற்றை மீட்டெடுக்க வேண்டுமானால், மறு தெளிப்பு தான் செய்ய வேண்டும் என்கின்ற நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த 50 ஆண்டு காலமாக இந்த விவசாயப் பணியை மேற்கொண்டு வரும் கீழகூத்தங்குடியை சேர்ந்த பக்கிரிசாமி கனகாம்பாள் தம்பதியினர், இந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு தெளிப்பு செய்து இதுவரை 6 முறை உழவு ஓட்டியுள்ளனர். இதற்கு ஒரு ஏக்கருக்கு 3300 வீதம் 5 ஏக்கருக்கு 16500 செலவு செய்துள்ளனர். மேலும் விதைநெல் தனது 5 ஏக்கருக்கு 10 சிப்பம் விதை நெல் தெளித்துள்ளார். ஒரு மூட்டை விதையின் விலை 1100 ஆகும். ஆகமொத்தம் 5 ஏக்கருக்கு 11 ஆயிரம் ரூபாய் செலவு செய்தனர்.

மேலும் வேலை செய்த தொழிலாளர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ஐந்து பேர் வேலை செய்துள்ளனர் மொத்தம் 5 ஏக்கருக்கு 12500 ஊதியம் வழங்கியுள்ளார்  ஆனால் அந்த 30 நாட்கள் ஆன பயிர்கள் காட்டாற்றில் தண்ணீர் வந்தும் பாப்பன் வாய்க்காலில் தண்ணீர் வராததால் பயிர்கள் அனைத்தும் கருகிவிட்டன. ஆகமொத்தம் தன்னுடைய  ஐந்து ஏக்கருக்கு இதுவரை 40 ஆயிரம் செலவு செய்து அவை அனைத்தும் வீணாக போய்விட்டதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர் வயதான தம்பதிகள்.

இருப்பினும் தன்னம்பிக்கையை கைவிடாத அத்தம்பதிகள், எப்படியும் தங்கள் விளைநிலத்திலிருந்து கிடைக்கின்ற வருமானம்தான் நமது வாழ்வாதாரம் என்கின்ற உணர்வோடு மறு தெளிப்பு பணியை செய்து வருகின்றனர். மீண்டும் ஆட்சியர் தண்ணீர் முழுமையாக  வரும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் பணியை தொடங்கியுள்ளதாகவும் தண்ணீரை முழுமையாக வழங்கி தங்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என  தம்பதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.  காவிரி டெல்டா விவசாயிகளின் தற்போதைய சூழலுக்கு இந்த ஒரு விவசாயி உதாரணம். இதுபோல் நூற்றுக்கணக்கானோர் மறு தெளிப்பு பணிகளை செய்து வருகின்றனர் என்பது தான் கள நிலவரமாக உள்ளது.

தகவல்கள் : கு.ராஜசேகர்,செய்தியாளர் - திருவாரூர்.