மோடி ஆட்சிக்கு வரும் போது, வழக்கமான இந்துத்துவா அஜெண்டாக்களை முன்வைக்கவில்லை. அவர் வளர்ச்சியை மட்டுமே முன்னிறுத்துகிறார் என்று சொல்லப்பட்டது. இப்போது கூட அவர் வளர்ச்சியை முன்னிறுத்தி மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகளை ஆர்எஸ்எஸ் பரிவாரங்களே விரும்பவில்லை என்று கூட கருத்து நிலவுகிறது. அந்த அளவுக்கு அவர் வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்கிறாராம். ஆனால் உண்மை அதுதானா?
ஐநாவில் யுனேட்டட் நேஷன்ஸ் குளோபல் காம்பாக்ட் என்ற பெயரில் நடைபெற்ற இருநாள் நிகழ்ச்சியில் “சிறந்த வர்த்தகம் சிறந்த உலகம்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கை சொல்லும் தகவல் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. இந்தியாவின் மொத்த வளத்தில் 53 சதவீதம் இங்குள்ள ஒரே ஒரு சதவீதம் பணக்காரர்கள் வசம் மட்டுமே உள்ளது என்கிறது அந்த அறிக்கை. இந்தியாவில் ஏழை பணக்காரன் என்ற சமத்துவமின்மை அதிகரித்து வருவதாக அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
இந்த சமத்துவமின்மையை குறைப்பதற்கு (போக்குவதற்கு என்று அந்த அறிக்கை சொல்லவில்லை) இந்தியா ஒரு வித்தியாசமான பொருளாதார மாதிரியை அமல்படுத்த வேண்டும் எனும் அந்த அறிக்கை, முதலில் இங்குள்ள வறுமையை அங்கீகரிக்க வேண்டும் என்கிறது.
இந்த இடத்தில் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் விவசாயிகள் வறட்சியால் உயிரிழக்கவில்லை என்று தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் நமக்கு நினைவுக்கு வந்து தொலைக்கிறது. போகட்டும் அடுத்து, இங்குள்ள சமத்துவமின்மையை, நிதி முதலீட்டில் பற்றாக்குறையை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
ஒரு நாட்டைப் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடையச் செய்வது என்பது அந்த நாட்டில் ஏற்கனவே உள்ள பணக்காரர்களை மேலும் பணக்காரர்கள் ஆக்குவதிலோ அங்குள்ள பெரு நிறுவனங்களை மேலும் மேலும் வளர்ச்சியடையச் செய்வதிலோ மட்டும் இல்லை. பெரு நிறுவனங்கள் வளர வளர வேலை வாய்ப்புகளும் புதிய தொழில் நுட்பம் தெரிந்தவர்கள் எண்ணிக்கையும் அக்கம் பக்கமாக வளரும். அதன் மூலம் வாங்கும் சக்தி அதிகரிக்கும் மக்களின் எண்ணிக்கை உயரும். ஆனால் இது போதாது.
அடித்தட்டில் வசிக்கும் பெரும்பான்மையோரின் வருமானம் உயராமல்...மிகச் சொற்பமான எண்ணிக்கையில் உள்ள மேல் தட்டில் உள்ளவர்களின் வருமானம் அபரிமிதமாக உயர்வது ஒட்டுமொத்தமாக ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சிக்கு உகந்ததல்ல.இந்த சமத்துவமின்மையைத்தான் ஐநாவில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஒரு நாட்டின் வளங்கள் சரியாகப் பயன்படுத்தப்பட்டு அதில் வரும் வருமானமும் வசதியும் பரவலாகப் பகிர்ந்து கொள்ளப்படுவதுதான் சரியான வளர்ச்சியாக இருக்கும். அப்படிப் பரவலாகப் பகிர்ந்து கொள்ளும் போது ஏழை பணக்காரன் இடைவெளி குறைய வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக ஐடி பூம் எனச் சொல்லப்பட்ட தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் (அவை இந்திய நிறுவனங்களோ அல்லது அன்னிய மூலதனத்துடன் கூடிய நிறுவனங்களோ) இங்கு வளர்ச்சியடைந்த போது பெங்களூர், ஐதராபாத், சென்னை, மும்பை, டெல்லி, பூனா, கொல்கத்தா போன்ற நகரங்களில் ஐடி நிறுவனங்கள் ஏராளம் வந்தன
மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக், ஆப்பிள், இன்போசிஸ், கூகுள் உட்பட கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஐடி நிறுவனங்கள் ஐதராபாத்தில் மட்டுமே உள்ளன. இதனாலேயே சைபர்பாத் என்ற பெயர் கூட வந்தது. இந்த நிறுவனங்களில் வேலை பார்த்த இளைஞர்களுக்கு அபரிமிதமான சம்பளம் (வளர்ச்சியடைந்த நாடுகளை ஒப்பிடும் போது அது குறைவுதான். அதனால்தான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியா போன்ற நாடுகளில் தங்களது கிளைகளைத் துவக்குகின்றன) வழங்கப்பட்டது.
இதனால் அவர்களின் வாங்கும் சக்தியை அதிகரித்ததோடு சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவில் ஒரு சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. இது போதுமா.. போதாது. ஏனெனில் எப்படிப் பார்த்தாலும் அது சேவைத்துறைதான்.
ஒரு நாடு தன்னிடமிருக்கும் தனிச்சிறப்பு மிக்க பொருட்களை உற்பத்தி செய்வதில் வளர்ச்சியடைந்து, அதை சந்தைப்படுத்துவதில் வெற்றியடையும் போதுதான் உண்மையான வளர்ச்சியைப் பெற முடியும். அது மட்டுமே பரவலான அளவில் பொருளாதார சமநிலையைக் கொண்டு வரும். அப்படிப்பார்த்தால் இந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயத்துறையில் உணவுப் பொருள் உற்பத்தியில், அதன் விநியோகத்தில், அதை வெற்றிகரமான ஒரு தொழிலாக மாற்றுவதில் நாம் எங்கிருக்கிறோம்? எங்கேயோ இருக்கிறோம்.. அதனால்தான் விவசாயிகள் டெல்லியில் ஆடையின்றி தரையில் உருளும் அவலம் நேர்ந்தது.
ஐநாவில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை, இந்தப் பிரச்னை குறித்தும் பேசுகிறது. உணவு உற்பத்தியில் இந்தியா உலகில் இரண்டாவது மிகப்பெரிய நாடு என்று அது கூறுகிறது. விவசாயத்துறையை, விவசாயம் சார்ந்த தொழில்களை நிர்வகிப்பது மற்றும் மேம்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.
வறுமை குறைப்பு நடவடிக்கை என்பது மந்தகதியில் இருப்பதற்கு சமத்துவமின்மைதான் காரணம் என்று கூறும் அந்த அறிக்கை, சமத்துவமின்மையை மேலும் அதிகரிக்காமல் பார்த்துக் கொண்டால் 2019-க்குள் கடும் வறுமையில் உள்ள ஒன்பது கோடிப் பேரை வறுமையில் இருந்து மீட்கலாம் என்கிறது. ஒன்பது கோடிப் பேரை வறுமையில் இருந்து மீட்கவே இத்தனை வேலை செய்ய வேண்டியிருக்கிறது. அப்படியானால் இந்தியா முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களை மீட்க..... நினைக்கவே அயர்ச்சியாய் இருக்கிறது.
விவசாயத்துறையை வளர்க்காவிட்டால் விமோச்சனமே இல்லை. இப்போதிருக்கும் நிலை தொடர்ந்தால், ஊரக வளர்ச்சி, நகரப்புற வளர்ச்சியின் ஸ்திரத்தன்மை, தேசிய அடிப்படைக் கட்டமைப்பு ஆகிய துறைகளிலும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் இந்தியா மிகப்பெரிய சவால்களைத் தொடர்ந்து சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறது அந்த அறிக்கை.
சரி என்னதான் செய்வது?
சிறு வருமானம் தரும் உணவுச் சந்தைகளை உருவாக்குவது, விநியோகத்தின் போது உணவுப் பொருள் வீணாவதைக் குறைத்தல். சிறு பண்ணைகளுக்கு தொழில்நுட்ப உதவி, நுண் பாசனத் திட்டங்கள், வளங்களை மீட்டெடுப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்கிறது ஐநா அறிக்கை. கடைசியாக ஐநா அறிக்கையும்… தொடர்ந்து வரும் விவசாயிகள் பிரச்சனையும் நமக்கு பின் வரும் கேள்விகளை எழுப்புகின்றன.
எல்லோருக்கும் தேவைப்படும் ஒரு பொருளை... அனைவரும் பயன்படுத்தும் ஒரு பொருளை உற்பத்தி செய்யும் தொழில் எப்படி நலிவடையும்? அந்தத் தொழிலைச் செய்பவர்கள் எப்படி வறுமைக்குத் தள்ளப்படுகின்றனர்? இந்தக் கேள்விக்கு விடை காண வேண்டியது அவசர அவசியம்..
-க.சிவஞானம்