சிறப்புக் களம்

தொட்டதில் எல்லாம் ‘கில்லி’; அவருக்கு பெயர் ஏபி டிவில்லியர்ஸ்

தொட்டதில் எல்லாம் ‘கில்லி’; அவருக்கு பெயர் ஏபி டிவில்லியர்ஸ்

webteam

ஏபி டிவில்லியர்ஸ் கிரிக்கெட் உலகின் மந்திரச்சொல். கிரிக்கெட் உலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் மிகச் சிறந்த வீரர்கள் உருவாகி உள்ளனர். அதில் ஒருவர்தான் தென் ஆப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ். இவரை அதிரடி ஆட்டக்காரர் என அழைத்துதான் நாம் பார்த்திருப்போம். ஆம், அணிக்கு இக்கட்டான நிலைமை என்றால் 400 பந்துகளை சந்தித்து 30 ரன்கள் அடிக்கவும் தெரியும். அதிரடியாக விளையாட முடிவு செய்துவிட்டால் 30 பந்துகளில் சதம் அடிக்கவும் தெரியும். சூர்யாவின் ‘அஞ்சான்’படத்தில்‘நீ சாகணும்னாலும் அதை நான்தான் முடிவு செய்யணும்; நீ வாழும்னாலும் அதை நான்தான் முடிவு செய்யனும்’என வசனம் வரும். அந்த வசனம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ ஏபி டிவில்லியர்ஸுக்கு பொருந்தும். இந்தப் பந்தை அடிக்க வேண்டும் என முடிவு செய்து விட்டால் அது எப்படிப்பட்ட பந்தாக இருந்தாலும் எல்லை கோட்டில்தான் போய் நிற்கும். 

இந்தத் திசையில்தான் அடிக்கப் போகிறார் என்று பந்து வீச்சாளர்கள் யூகித்து  வீசினால் அவர்களின் எண்ணத்திற்கு எதிர்மாறாகத்தான் ஏபி டியின் பேட்டிங் இருக்கும். இதுவே அவரின் சிறப்பும் கூட. அணி வெற்றி பெற எவ்வளவு ரன் வேண்டுமானாலும் இருக்கட்டும், களத்தில் ஏபி டிவில்லியர்ஸ் இருந்தால் போதும்: எந்தக் கவலையும் இல்லாமல் இருப்பார்கள் அணி வீரர்கள். அந்த நம்பிக்கையை பல முறை காப்பாற்றியும் இருகிறார் இந்த மனிதர். இன்றைய காலகட்டத்தில் அதிரடி ஆட்டக்காரர்களாக நாம் பார்க்கும் பலரும் இவரின் ரசிகர்கள்தான். இதை அவர்களே பலமுறை சொல்லி நாம் கேட்டு இருக்கிறோம். சூப்பர் மேன், மிஸ்டர் 360 என பல புனைபெயருக்கு சொந்தக்காரரான இவரின் திறமைக்கு முன்னால் இந்தப் புகழ்ச்சியெல்லாம் குறைவுதான்.

1982 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 தென் ஆப்பிரிக்காவில் பிறந்தவர் ஏபி டிவில்லியர்ஸ். 2004ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு முதன்முதலில் எதிராக களம் கண்ட டிவில்லியர்ஸ், தொடக்க காலத்தில் சுமாரான பேட்ஸ்மேனாகதான் இருந்தார். விக்கெட் கீப்பராக அணியில் இடம் பெற்ற இவர் அவ்வபோது பத்து வீச்சாளராகவும் இருந்திருகிறார். தன்னுடைய இளமை காலத்தில் கிரிக்கெட் மட்டுமல்லாமல், டென்னிஸ், 
ரக்ஃபி, நீச்சல் என பல விளையாட்டிலும் கலக்கிய இவர். நீச்சல் போட்டியில் 6 முறைக்கு மேலாக பதக்கமும் வாங்கியுள்ளார். விளையாட்டு மட்டுமின்றி அறிவியல் ஆய்வுக்காக நெல்சன் மண்டேலா விருது வாங்கியிருக்கிறார். இதையெல்லாம் தவிர அவர் சிறந்த பாடகரும்கூட. ஓய்வு நேரங்களில் பாடல்களைப் பாடுவது ஆல்பம் வெளியிடுவது போன்றவற்றிலும் ஆர்வம் கொண்டு விளங்கினார் இந்த கிரிக்கெட் பிதாமகன். 

ஏபி டிவில்லியர்ஸ் பொருத்தவரை கிரிக்கெட்டில் மட்டுமில்லை, தான் கால்பதித்த அனைத்து துறைகளிலும், கிங்காகவே விளங்கி இருகிறார். தான் இறுதியாக தேர்வு செய்த கிரிக்கெட்டில் இறங்கி புதிய இலக்கணமே வகுத்துவிட்ட டிவில்லியர்ஸ் களத்தில் ஒரு நாளும் கோவப்பட்டோ, தரகுறைவாக நடந்தோ யாரும் பார்த்திருக்க முடியாது. அவர் களத்தில் இருக்கும் போது அவருடைய பேட் மட்டுமே பேசும். கிரிக்கெட்டில் இருப்பவர்கள் வேறு ஒரு வீரரை புகழ்வது என்பது குறைவு. ஆனால் ஏபி டிவில்லியர்ஸ் என்ற பெயர் மட்டும் அதற்கு விதிவிலக்கு. பல முன்னணி பேட்ஸ்மேன்கள் முதல் பந்து வீச்சாளர்கள் வரை இவரது புகழ்ப்பாடாதவர்களே இருக்க முடியாது. உதாரணமாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜான்சன். பெர்த்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 

அப்போது உங்கள் வாழ்நாளில் நீங்கள் சந்தித்த பேட்ஸ்மேன்களில் யார் திறமையானவர் என்ற கேள்விக்கு, அவரிடமிருந்து வந்த பெயர் ஏபி டிவில்லியர்ஸ். அவரை ஆட்டமிழக்க செய்வது அவ்வளவு சுலபமல்ல; நான் எதிர் கொண்ட பேட்ஸ்மேன்களில் அவர்தான்  திறமை வாய்ந்தவர். எத்தகைய பந்து வீச்சையும் எதிர் கொண்டு பவுலர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்துவார். அவரை வீழ்த்துவதுதான் எனக்கு கடினமான, பெரும் சவாலாக இருந்தது என்றார் ஜான்சன்.  பல பெருமைகளை தன் வசம் கொண்டுள்ள ஏபி டிவில்லியர்ஸ், கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவிரைவாக 50, 100, 150 ரன்கள் அடித்த தென்ஆப்பிரிக்கா வீரர் எனும் சாதனையையும் சர்வதேச டி20 போட்டிகளில் அதிவிரைவாக 50 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனைகளைப் படைத்துள்ளார். 

இவ்வளவு புகழ் கொண்ட டிவில்லியர்ஸ், ஒய்வு பெற போகிறார் என்ற செய்தி சமீப நாட்களாகவே கசிந்து வந்தது. அதை உண்மையாக்கும் வகையில் இன்று ஒய்வு அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியளித்திருக்கிறார் . கிரிக்கெட் போட்டியில் ஓய்வு பெறுவது தொடர்பாக பேசியுள்ள டி வில்லியர்ஸ்,  ‘நான் அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். 114 டெஸ்ட் போட்டிகள், 228 ஒரு நாள் போட்டிகள், 78 டி20 போட்டிகளுக்குப் பிறகு இந்த முடிவை எடுத்துள்ளேன். அடுத்தவர்களுக்கு வழிவிடும் நேரம் இது. நான் எனது விருப்படியே முடிவெடுத்துள்ளேன். நேர்மையான முடிவும் இது. நான் களைத்துவிட்டேன். இது ஒரு கடினமான முடிவு தான். நீண்ட நேர யோசனைக்குப் பிறகுதான் இந்தக் கடின முடிவை எடுத்தேன். நான் நல்ல நிலையில் விளையாடும் கிரிக்கெட்டராக இருக்கும் போதே ஓய்வு பெற விரும்புகிறேன். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் வெற்றி பெற்றிருக்கும் சரியா நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளேன்’ என்று கூறியுள்ளார். 

பொதுவாகவே கிரிக்கெட் உலகில் 30 வயதை கடந்து விட்டால்,‘நீங்க எப்போது சார் ஒய்வுப் பெற போறீங்க’என்ற கேள்வி எழும். உலகின் தலைசிறந்த வீரர்களான பலர் கடைசி கட்டத்தில் விமர்சனங்களுடன் விடை பெறுவர். ஆனால் ஏபி டிவில்லியர்ஸ் இதிலும் வித்தியாசம். புகழின் உச்சத்தில் இருக்கும்போதே குட் பை சொல்லியிருக்கிறார்.