சிறப்புக் களம்

காதலை ரசிக்க காதலித்திருக்க வேண்டுமா என்ன?

காதலை ரசிக்க காதலித்திருக்க வேண்டுமா என்ன?

webteam

இன்றைய தேதிக்கு சமூக வலைதளங்களின் பதிவை, 96க்கு முன்பு 96க்கு பின்பு என்று பிரிக்கலாம். ஆம், 96 படம் வெளியாகி வலைதளவாசிகளை காதல் பொங்க வைத்திருக்கிறது. எல்லோருக்குள்ளும் ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது என்பது தான் இதன் வெளிப்பாடு. சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கும் மற்றொரு விஷயம், நான் பள்ளிப்பருவத்தில் காதலிக்கவில்லை. நான் 96 படத்தை ரசிக்க முடியுமா? என்பது தான். இது சீரியசாக கேட்கப்பட்டு நான் பாய்ஸ் ஸ்கூல்பா, நான் கேள்ஸ் ஸ்கூல்பா என்ற மீம் வரையிலும் காமெடியாக சென்று கொண்டிருக்கிறது. ஆனால் அனைவருமே 96ஐ கொண்டாடி கொண்டிருக்கிறார்கள் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

காதலை ரசிக்க, காதலை கொண்டாட, காதலை உணர நாம் காதலித்திருக்க வேண்டிய அவசியம் உண்டா என்றால் இல்லை என்பதுதானே நிதர்சனம். காதல் என்றால் என்ன என்று நாம் யாரிடம் கேட்க முடியும்? நாம் யாரிடம் கேட்டாலும் அவரவர்களின் அனுபவத்தை, எங்கோ படித்த விஷயத்தைத்தானே நம்மிடம் பகிர்ந்துகொள்ள போகிறார்கள். ஊட்டி மலை உச்சிக்கு சென்றால் காற்று சில்லென்று அடிக்கும், நம் உடலெல்லாம் சிலிர்த்து போகும் என்று நான் உங்களிடம் சொல்லத்தான் முடியும். அதை உணர உங்களால் முடியுமா என்ன? காதலும் அந்த வகை தானே? அதை நீங்கள் தான் உணர முடியும். யார் என்ன விளக்கம் கொடுத்தாலும் நமக்குள் ஒரு காதல் உணர்வு இருக்கத்தான் செய்கிறது.  அது தான் காதலை உணரவும் வைக்கிறது. அது நீங்கள் பாய்ஸ் ஸ்கூலில் படித்தாலும், கேள்ஸ் ஸ்கூலில் படித்தாலும் கூடத்தான். 

விமான நிலையத்தில் பிரிந்து செல்லும் காதலிக்கு காதலன் கொடுக்கும் ஒரு முத்தத்தை இந்த சமூகம் எப்படி பார்க்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? வேண்டுமானால் சமூகத்துக்காக சிலர் வெறுப்பு பேச்சு பேசலாம். ஆனால் அனைவருமே அந்த காதலை உணர்வார்கள். எவ்வளவு சுதந்திரமான ஜோடி இவர்கள் என்றுக்கூட வயது வித்தியாசம் இல்லாமல் பொறாமை கொள்வார்கள். அது தான் நம் அடிமனதில் படிந்துள்ள காதல். கடலில் வீசப்பட்ட கருங்கல்லை போல நம் மனதில் அடியில் அசையாமல் கிடக்கிறது காதல். அதை அசைத்துப்பார்க்க வேண்டுமானால் 96 படம் மாதிரியான, விமான நிலைய காதலர்களின் முத்தம் மாதிரியான ஏதோ ஒன்றை நாம் கடக்க வேண்டி இருக்கிறது. ரசிக்க வேண்டி இருக்கிறது.

யாருக்குத்தான் காதலில்லை. வென்ற காதல், தோற்ற காதல், சொல்லப்படாத ஒரு தலைக்காதல், இருவருக்குமே தெரிந்தும் சொல்லிக்கொள்ளப்படாத காதல், நண்பர்கள் காதலாகி மீண்டும் நண்பர்களான காதல், திருமணமான பிறகும் காதலை பரஸ்பரமாக பரிமாறிக்கொள்ளும் எத்தனையோ ஜோடிகளும் இருக்கத்தானே செய்கிறார்கள். இப்படி எத்தனை எத்தனையோ? அத்தனையும் காதல் தான். காதல் என்றால் என்னவென்றே தெரியாது என்று சொல்கிறார்கள் என்றால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் அல்லது அவர்கள் இன்னும் காதலை சந்திக்கவில்லை என்று தான் அர்த்தமே தவிர அவர்களுக்கு காதல் உணர்வில்லை என்று அர்த்தம் இல்லை.

ஏற்கெனவே சொன்னது போல் அது அடிமனதில் கல்போலக்கிடக்கும். நேரம் வருகையில் அசையத்தொடங்கி அவர்களையும் அசைக்கும். முன்பே சொன்னது போல் எல்லோருக்குள்ளும் ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அது தான் 96 படத்தை ரசிக்க வைக்கிறது. அனுபவக்கதைகளை விடுங்கள். உங்களுக்குள் இருக்கும் அடிமனது கல்லை அசைக்க முயலுங்கள். இல்லை இல்லை. அது உங்களை மீறி அசையும். அது தான் காதல்.

-தாஸ்