சிறப்புக் களம்

காட்சி மொழி பேசிய மணிரத்னம்: இசை மொழி பேசிய இளையராஜா

webteam

ஒரு காட்சியின் உணர்வை பார்வையாளனுக்குள் கடத்த வேண்டுமென்றால் வசனங்கள் தேவையில்லை என்பதை திரையில் நிரூபித்துக் காட்டிக்கொண்டிருப்பவர் மணிரத்னம். குறைவான வசனங்களுடன் கூடிய காட்சி மொழியே பார்வையாளனின் மனதில் பதிகிறது. சில நேரங்களில் மணி ரத்னம் படங்களில் நிலவும் அமைதிகூட பார்வையாளர்களை அசைத்து பார்ப்பதும் உண்டு. காட்சி மொழி பேசும் இயக்குநருக்கு கைகொடுப்பது கேமராவும், இசையும்.  அப்படி மணிரத்னம் நினைத்த உணர்வுகளை இசையாக படரவிட்டவர் இளையராஜா.

தளபதி, நாயகன், மெளனராகம், அக்னி நட்சத்திரம், அஞ்சலி என தொடர்ந்த இவர்களின் கூட்டணி கடலும், முழு நிலவும் போலவான கூட்டணி. காட்சிக்கு இசையா? இசைக்கு காட்சியா? என குழம்பும் அளவுக்கு இரண்டும் பின்னிக்கிடக்கும். திரையில் அமைதியை நிலவவிட்டு திடீரென பின்னணியில் இளையராஜாவை உலவவிடுவார் மணிரத்னம். அவ்வளவு நேர அமைதியையும் இளையராஜாவின் இசை மெல்ல விழுங்கி திரையெங்கும் இசை நிரம்பும் அதிசயம் மணிரத்னத்தின் எல்லா படங்களிலும் உண்டு.

இப்பெருமழையில் ஒரு துளியாக இருக்கிறது தளபதி படத்தில் வரும் கோவில் காட்சி. 

முகம் தெரியாத தன் தாயை நினைத்து ஏங்கி கொண்டிருக்கும் மகன், அந்த மகனுக்காக ஏங்கி கொண்டிருக்கும் அந்த தாய். அறிமுகம் இல்லாத இருவரும் பல வருடங்களுக்கு பிறகு ஒரே கோவிலில் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவரின் இணைப்பு புள்ளியான கூட்ஸ் வண்டியின் சத்தம் பின்னணியில் கேட்பதாக அமையும் அந்த காட்சி.

தளபதி படத்தின் இந்த காட்சி பலரின் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. படத்தின் முக்கிய திருப்பமாக இருக்கும் இந்தகாட்சியை மணிரத்னமும், இளையராஜாவும் செதுக்கி இருப்பார்கள். 

கோவில் நாதஸ்வரம், அர்ச்சகரின் மந்திரம் என காட்சி ஒலிகள் மட்டுமே ஒலித்துக்கொண்டிருக்க, கூட்ஸ் வண்டியின் சத்தம் மெல்ல தொடங்கும். 

கூட்ஸ் வண்டியின் தடக் தடக் சத்தத்தை முகம் திருப்பி கலங்க தொடங்கும் கண்களுடன் நோக்குவாள் தாய், அதே ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருப்பார் மகன் ரஜினி. மொத்த உணர்வுகளையும் கூட்ஸ் வண்டி சத்தம் வழியாக கடத்தி கொண்டிருப்பார் மணி ரத்னம். காட்சி ஒலிகளை மெல்லக்கடந்து புல்லாங்குழல் மூலம் இளையராஜா நுழைவார்.

புல்லாங்குழல் மெல்ல இசைக்க தாயின் இடது கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் மட்டும் உருண்டு விழும். திரையில் ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளாத மூன்று கதாபாத்திரங்கள் பார்வையாளர்களின் கண்கள் வழியாக எளிதாக உள்ளிறங்கி இருப்பார்கள். ஆறு கண்களும் கூட்ஸ் வண்டி திசை நோக்கி இருக்கும் அந்த குறிப்பிட்ட ஷாட் கிளாசிக் ரகம்.

படம் முழுக்க இதேபோல எத்தனையோ காட்சிகளை மணிரத்னமும், இளையராஜாவும் கையாண்டு இருப்பார்கள். நாம் சொல்ல விரும்பும் உணர்வுகளை பக்கம் பக்கமாய் வசனம் பேசி பார்வையாளனுக்கு பதிய வைக்க வேண்டுமென்பதே இல்லை. அதை மணிரத்னம் சரியாக கையாள்வார். காதல், பாசம், துரோகம், அரசியல் என அனைத்து உணர்வுகளையும் பார்வையாளனின் வசமே ஒப்படைத்துவிடுகிறார் மணிரத்னம். அது பார்ப்பவர்களுக்கு ஏற்ப பொங்கி வழிந்துகொண்டிருக்கும்.

இசையை என்றுமே உணர்வை கடத்தும் ஊடகமாக பயன்படுத்திக்கொண்டிருக்கும் மணிரத்னம் அவர்களுக்கு தன் முழு பலத்தையும் கொடுத்தவர் இளையராஜா என்றால் அது மறுப்பதற்கில்லை.காட்சி மொழி பேசும் மணிரத்னம். இசை மொழி பேசும் இளையராஜா. இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!