சிறப்புக் களம்

மீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்!

மீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்!

webteam

இந்தி சினிமாவில் தென்னிந்திய நடிகர்கள் நடிப்பது இப்போது மீண்டும் அதிகமாகி வருகிறது. 

தென்னிந்தியாவில் இருந்து இந்திக்குச் சென்ற ஹீரோயின்கள் அங்கு டாப் இடத்தைப் பிடித்திருக்கிறார்கள். இதற்கு ரேகா, ஹேமமாலினி, ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா ஆகியோரை உதாரணமாகச் சொல்ல முடியும். ஆனால், ஹீரோக்கள்? 

தமிழில் நடித்து வந்த கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் ஆரம்ப காலகட்டத்தில் இந்தியில் கொடி கட்டி பறந்தனர். அவர்களுக்கான வரவேற்பும் அங்கு அதிகரித்திருந்தது. கமல்ஹாசனின் ’சத்மா’, ’யாத்கர்’, ’ராஜ் திலக்’, ’ஏக் துஜே கேலியே’, ’சாகர்’, ‘கிராஃப்தார்’ உட்பட பல படங்கள் அவருக்கு நிலையான இடத்தை பெற்று தந்தன. பிறகு இந்தியில் அவர் அதிகம் கவனம் செலுத்தவில்லை. 

இதே போல ரஜினிகாந்தும் ’அந்தாகானூன்’, ’மேரி அதாலத்’, ’கங்வா’, ‘ஜான் ஜானி ஜனார்தன்’,  ’பகவான் தாதா’ ‘சால்பாஸ்’ உட்பட சில படங்களில் நடித்து தனி மார்க்கெட்டை உருவாக்கி இருந்தார். பிறகு தமிழில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அவர் நடித்த தமிழ்ப் படங்கள் இப்போது இந்தியில் டப் செய்யப்பட்டு அங்கு வெளியாகின்றன.

மணிரத்தினத்தின் ’ராவண்’, ’டேவிட்’ ஆகிய இந்தி படங்களில் நடித்தார் விக்ரம். சூர்யா, ராம் கோபால் வர்மாவின் ’ரத்த சரித்திரா’ படம் மூலம் இந்திக்குப் போனார். பிருத்விராஜ், ’அய்யா’, அவுரங்கசீப், நாம் ஷபானா ஆகிய இந்தி படங்களில் நடித்தார். துல்கர் சல்மான், தனது முதல் இந்தி படமான ’கர்வான்’ ரிலீஸை எதிர்நோக்கி இருக்கிறார். அடுத்து ’ஸோயா பேக்டர்’ என்ற இந்தி படத்தில் நடித்துவருகிறார். 

மோகன்லால், மம்மூட்டி, சிரஞ்சீவி, நாகார்ஜூனா, வெங்கடேஷ் ஆகியோர் பல நேரடி இந்தி படங்களில் நடித்துள்ளனர். ஆனால் அதைத் தொடரவில்லை. தெலுங்கில் சிறந்த இடத்தைப் பிடித்திருந்த சித்தார்த், ’ரங் தே பசந்தி’ மூலம் இந்தியில் பரபரப்பானார். அடுத்து ’ஸ்டிரைக்கர்’ என்ற படத்தில் நடித்தார். பிறகு தமிழ், தெலுங்குக்கு திரும்பிவிட்டார். 

தனுஷ், ஆனந்த் எல்.ராயின் ‘ராஜ்னா’, பால்கியின் ’ஷமிதாப்’ ஆகிய இந்தி படங்களில் நடித்தார். பிறகு அங்கு கவனம் செலுத்தவில்லை. ராம் சரண் தேஜா, பிரியங்கா சோப்ராவுடன் ’ஸாஞ்சீர்’ என்ற படத்தில் நடித்தார். எதிர்பார்த்தபடி ஓடவில்லை என்பதால் இந்தி கனவை ஓரங்கட்டி வைத்துவிட்டார். இந்நிலையில், தென்னிந்திய நடிகர்கள் இந்தி சினிமாவில் மீண்டும் நடிக்கும் போக்கு சமீபத்தில் அதிகரித்துள்ளது.

(கர்வான் படப்பிடிப்பில் இர்பான் கான்,மிதிலா பால்கருடன் துல்கர் சல்மான்)

’பாகுபலி’க்குப் பிறகு ராணாவும் இந்திய நடிகராகிவிட்டார். அதற்கு முன்பே சில இந்தி படங்களில் அவர் நடித்திருந்தாலும் இப்போது அங்கு அறியப்படுகிற ஹீரோ. பிரபுசாலமன் இயக்கும் ‘ஹாத்தி மேரே சாத்தி’யில் நடித்துவருகிறார் அவர். இந்தி, தமிழ், தெலுங்கிலும் உருவாகிறது இது. அதோடு அவரது சமீபத்திய படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு வருகின்றன.

இதுபற்றி ராணாவின் தந்தையும் தெலுங்கு தயாரிப்பாளருமான சுரேஷ் பாபு கூறும்போது, ’ஒரே மாதிரியான கேரக்டரில் நடிக்காமல் அல்லது ஒரே இன்டஸ்ட்ரியில் நடிக்காமல் மற்ற மொழிகளில் வாய்ப்பு கிடைத்தால் நடிக்கலாம். அது நல்லது என்று என் மகனிடம் கூறியிருக்கிறேன். அவனும் நடித்துவருகிறான்’ என்கிறார்.

இதே போலவே, பிரபாஸும்! பாகுபலிக்கு பிறகு பிரபாஸும் வட இந்தியாவில் அனைவருக்கும் தெரிந்த நடிகராக மாறியிருக்கிறார் அவர். இதன் காரணமாக அவர் நடிக்கும் ’சாஹோ’ இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழியில் உருவாகிறது. 
மகேஷ்பாபுக்கு பல இந்தி பட வாய்ப்புகள் வந்தது. அதை நிராகரித்துவிட்டார் அவர். 

அஜீத், சந்தோஷ் சிவனின் ’அசோகா’ படத்தில் ஷாரூக் கானுடன் நடித்தார். பிறகு ஸ்ரீதேவியின் ’இங்கிலீஷ் விங்லீஷ்’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். பிறகு வாய்ப்புகள் வந்தும் இந்திக்குச் செல்லவில்லை. 

(பிரம்மாஸ்த்ரா படப்பிடிப்பில் நாகார்ஜுனா)

15 வருடங்களுக்கு நாகர்ஜூனா, இப்போது இந்தி படத்தில் நடிக்கிறார். அமிதாப் பச்சன், ரன்பீர், அலியா நடிக்கும் ’பிரம்மாஸ்த்ரா’ படத்தில் முக்கிய வேடம் அவருக்கு. 

இதுபற்றி நாகார்ஜுனா கூறும்போது, ‘தமிழ், இந்தி, தெலுங்குன்னு எந்த படத்தையும் பிரித்துப் பார்க்கிறதில்லை நான். கதை நல்லா இருந்தா மொழி பற்றி கவலை இல்லை எனக்கு. உடனே சம்மதிச்சுருவேன். ஆனா சரியான கதையை தேர்ந்தெடுக்கிறது முக்கியம். சமூக வலைத்த ளங்கள் வந்த பிறகு உலகம் சுருங்கிவிட்டது. அதனால மொழி ஒரு பிரச்னையில்லை’ என்கிறார்.

சரிதானே!