சிறப்புக் களம்

பெரு நகரமும், திண்ணை வீடுகளும்

webteam

பெருநகரங்களுக்கு ஒரு பெயர் உண்டு அதுதான் "கான்கிரீட் காடுகள்". வானை முட்டும் அடுக்குமாடி குடியிருப்புகளும், பரபரப்பான மனிதர்களும் நிறைந்திருக்கும் பெருநகர் உலகம். பக்கத்து வீட்டுக்காரர்களின் பெயரைக் கூட அறிந்துகொள்ள முடியாத நிலையில் சென்றுக்கொண்டிருக்கும் வாழ்க்கை ஓட்டம். அப்படிப்பட்ட நகரங்களில் கூட 40 ஆண்டுகள் முன்பு திண்ணை வைத்த வீடுகள் இருந்தன. இப்போது நகரங்களில் திண்ணை வைத்த வீடுகளை பார்ப்பது அரிதிலும் அரிதுதான். அப்படிப்பட்ட நகரத்தில் இருக்கும் வீடுகளையும், மறந்துப்போன திண்ணை வீடுகளையும் நினைவுப்படுத்துகிறது ஜெயபுதீன் என்பவர் ஃபேஸ்புக்கில் இட்டுள்ள பதிவு.

ஜெயபுதீன் அண்மையில் "திண்ணை" என்ற தலைப்பில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கவிதை எழுதி இருந்தார். அது, 

"முன்புறம் இடிக்கப்பட்டு திண்ணைகளற்றுப்போன பெருநகரத்துச் சந்துக்குள் இருக்கும் வீடுகள் 
கோழிப்பண்ணையின் சாயலாய் புறாக்கூடுகளின் பிரதிகளாய் நின்று பொருளீட்டுகின்றன.

கேட்கக் காதுகளில்லாத 
முதிய வாய்களும்
பேசிக்கொள்ள சக உதடுகளில்லாத
சபிக்கப்பட்ட காதுகளும்
அரூப உடலெடுத்து 
அமர்ந்துபேச
திண்ணைகளற்ற 
பெருநகர வீதிகளின்
வாகனப் புகைக்குள் அலைகின்றன.

வழிப்போக்கர்களைத் திருடனாய்ப்பார்க்கும் 
கருணையற்ற மனித உலகில் 
காசுக்குக் குடிநீர்வாங்கி 
கார்களைக் கழுவிக்கொள்பவனின் வீட்டில்
விருந்தினருக்கேது அறை..?
பெற்றோரும் திண்ணைகளும் 
சுமை.

பால்காரம்மாவும்
தயிர்க்காரியும்
கீரைவிற்கவரும் பாட்டியும்
பருப்பு மளிகைக் கூடைக்காரரும்
புளிவிற்கவரும் மலையாளத்தானும்
தலைச்சுமையிறக்கி பேரம்பேசிப் பொருள் விற்கிற திண்ணையிருந்த
இடம் 
இன்னொரு குடும்பத்தின்
சன்னல்களற்ற ஒற்றையறை.
வாடகை நாலாயிரம்."

-  ஜெயபுதின், கோவை