Sperm Whale attack AI
சிறப்புக் களம்

ஒரே மோதலில் மூழ்கிய பிரம்மாண்ட கப்பல்.. ஆழ்கடலின் வேட்டைக்காரன் செய்த சம்பவம்!

ஸ்பெர்ம் திமிங்கலத்தின் உடலில் மிகவும் வியப்பூட்டும் பகுதி, அதன் பெரிய தலை. தலைக்குள் ஸ்பெர்மாசெட்டி (Spermaceti) எனப்படும் எண்ணெய்ப் போன்ற திரவம் உள்ளது. வேட்டைக்காரர்கள் இதனை விந்தணு என நினைத்ததால், இதற்கு Sperm Whale என்ற பெயர் ஏற்பட்டது.

Madhalai Aron
ஒரு பேருந்து மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வந்து மோதினால் எவ்வளவு பெரிய தாக்கம் ஏற்படும்? அதற்கு இணையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு கடல்வாழ் உயிரினம் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? அதுவும், தன்னைவிடப் பல மடங்கு பெரிய கப்பலையே மோதி மூழ்கடிக்கும் ஆற்றல் கொண்ட உயிரினம் என்றால் ஆச்சரியமாக இருக்குமல்லவா?

அந்த உயிரினம்தான் ஸ்பெர்ம் திமிங்கலம் (Sperm Whale). கடலின் ஆழத்தில் வாழும் இந்தப் பிரம்மாண்ட உயிரினத்தின் தலையில் அமைந்துள்ள ஒரு தனித்துவமான கொழுப்பு உறுப்பு, அதன் வாழ்க்கையில் என்ன பங்கு வகிக்கிறது என்பது இன்றும் அறிவியலாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. ஒலியை உருவாக்கவும், உணவைத் தேடவும் உதவும் அதன் தலை அமைப்பு, மற்ற திமிங்கலங்களுடன் மோதும்போது ஒரு தாக்குதல் கருவியாகவும் செயல்படக்கூடும் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஒலியை உருவாக்கவும், உணவைத் தேடவும் உதவும் அதன் தலை அமைப்பு, மற்ற திமிங்கலங்களுடன் மோதும்போது ஒரு தாக்குதல் கருவியாகவும் செயல்படக்கூடும் என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
Sperm Whale

இந்தத் திமிங்கலத்தின் பெயர் உலக இலக்கிய வரலாற்றிலும் இடம்பெற்றுள்ளது. 1820ஆம் ஆண்டு கடலில் நிகழ்ந்த ஓர் உண்மையான கப்பல் விபத்துதான் ஹெர்மன் மெல்வில்லின் புகழ்பெற்ற மொபி டிக் (Moby-Dick) நாவலுக்கு உத்வேகமாக அமைந்தது. அந்த விபத்தின் பின்னணியையும், திமிங்கலத்தின் தலையில் இருக்கும் மர்ம உறுப்பையும், அதன் அசாதாரண உடல் திறன்களையும் பார்ப்போம்.

1820ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி, தென் பசிபிக் பெருங்கடலில் திமிங்கல வேட்டைக்காகச் சென்று கொண்டிருந்தது எசெக்ஸ் (Essex) என்ற அமெரிக்கக் கப்பல். அப்போது 15 வயதுடைய தாமஸ் நிக்கர்சன், திமிங்கல வேட்டைக்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சிறிய படகில் இருந்தார். திமிங்கலம் ஒன்று அந்தப் படகின் பக்கவாட்டில் மோதிச் சேதப்படுத்தியது. படகுக்குள் தண்ணீர் புகத் தொடங்கியதால், நிக்கர்சனும் அவருடன் இருந்தவர்களும் பிரதானக் கப்பலை நோக்கித் திரும்பினர்.

Sperm Whale

அவர்கள் பாதுகாப்பாகக் கப்பலை அடைந்துவிடலாம் என்று நினைத்த தருணத்தில், மற்றொரு பெரிய திமிங்கலம் வேகமாக சென்று கப்பலின் மீது பலமாக மோதியது.

ஒருமுறை மோதிய பிறகு திமிங்கலம் சுமார் 270 மீட்டர் தொலைவுக்குச் சென்றது. பின்னர் திடீரெனத் திரும்பி, மீண்டும் முழு வேகத்தில் வந்து கப்பலின் முன்பகுதியில் மோதியது. இந்த இரண்டாவது மோதலில் கப்பலின் முன்பகுதி கடுமையாகச் சேதமடைந்தது. தண்ணீர் கப்பலின் உள்ளே புகத் தொடங்கியதால், சிறிது நேரத்தில் எசெக்ஸ் கப்பல் மூழ்கியது.

Sperm Whale

ஒரு மிகப்பெரிய கப்பலை ஒரு திமிங்கலத்தால் எப்படி மூழ்கடிக்க முடிந்தது? அதன் தலையில் அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மை இருக்கிறதா? இந்தக் கேள்விகள்தான் பின்னாளில் ஆய்வாளர்களின் ஆர்வத்தைத் தூண்டின.

இது வெறும் கப்பல் விபத்து அல்ல

கப்பல் மூழ்கியதும், அதிலிருந்த 20 மாலுமிகள் மூன்று சிறிய படகுகளில் ஏறித் தப்பினர். ஆனால், அவர்கள் நிலப்பகுதியிலிருந்து சுமார் 2,100 கிலோமீட்டர் தொலைவில் இருந்தனர். அவர்களிடம் இருந்த உணவும் குடிநீரும் நீண்ட பயணத்திற்குப் போதுமானதாக இல்லை. சிறிய படகுகளில் அத்தனை தூரம் செல்வதும், கடுமையான கடல் சூழலைச் சமாளிப்பதும் மிகவும் கடினமாக இருந்தது.

நாட்கள் செல்லச் செல்ல உணவும் குடிநீரும் தீர்ந்தன. பசியாலும், தாகத்தாலும் மாலுமிகள் பலவீனமடைந்தனர். சிலர் உயிரிழந்தனர். உயிர் பிழைத்தவர்கள், வேறு வழியின்றித் தங்கள் தோழர்களின் உடல்களைக்கூட உணவாகப் பயன்படுத்த வேண்டிய கொடூரமான நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இது வெறும் கப்பல் விபத்து அல்ல; பசி, தாகம், பயம், நம்பிக்கை என அனைத்தையும் சோதித்த ஒரு மனித உயிர்வாழ்வுப் போராட்டம்.
Sperm Whale

மீட்புக்காகக் காத்திருந்த அவர்கள், கடலில் நீண்ட நாட்கள் போராடினர். இறுதியில், உயிர் பிழைத்தவர்கள் மீட்கப்பட்டனர். எசெக்ஸ் கப்பலில் இருந்த 20 பேரில் எட்டுப் பேர் மட்டுமே உயிருடன் திரும்பினர். இது வெறும் கப்பல் விபத்து அல்ல; பசி, தாகம், பயம், நம்பிக்கை என அனைத்தையும் சோதித்த ஒரு மனித உயிர்வாழ்வுப் போராட்டம்.

புகழ்பெற்ற நாவலுக்கு உத்வேகமாக அமைந்த சம்பவம்

இந்தச் சம்பவம் பின்னாளில் எழுத்தாளர் ஹெர்மன் மெல்வில்லின் புகழ்பெற்ற மொபி டிக் நாவலுக்கு உத்வேகமாக அமைந்தது. நாவலில் வரும் வெள்ளைத் திமிங்கலம் கற்பனைக் கதாபாத்திரம் என்றாலும், அதன் பின்னணியில் எசெக்ஸ் கப்பல் விபத்து போன்ற உண்மைச் சம்பவங்கள் இருந்தன.

ஸ்பெர்ம் திமிங்கலத்தின் உடலில் மிகவும் வியப்பூட்டும் பகுதி அதன் தலை. அதன் மொத்த உடல் நீளத்தில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு தலையாக இருக்கும். அந்தத் தலைக்குள் ஸ்பெர்மாசெட்டி (Spermaceti) எனப்படும் எண்ணெய்ப் போன்ற, மெழுகுத் தன்மை கொண்ட பொருளால் நிரம்பிய பெரிய அமைப்பு உள்ளது.

இந்தப் பொருள் சாதாரண எண்ணெய் அல்ல. திமிங்கலத்தின் தலையில் உள்ள சிக்கலான அமைப்புகள் ஒலி உருவாக்கம் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆழ்கடலில் இரையைத் தேடுவதற்கும் மற்ற திமிங்கலங்களுடன் தொடர்புகொள்வதற்கும் ஒலி மிகவும் அவசியம்.

Sperm Whale

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, திமிங்கல வேட்டைக்காரர்கள் இந்தப் பொருளை அதிகளவில் சேகரித்தனர். இது விளக்கெரிக்கவும், மெழுகுவர்த்திகள் மற்றும் சோப்புகள் தயாரிக்கவும் பயன்பட்டது. ஆரம்பகால வேட்டைக்காரர்கள் இந்தப் பொருளை விந்தணு என்று தவறாக நினைத்ததால், இந்த உயிரினத்திற்கு Sperm Whale என்ற பெயர் ஏற்பட்டது.

ஆனால், இந்த உறுப்பின் முழுமையான செயல்பாடு என்ன என்பது இன்றும் ஆராயப்பட்டு வருகிறது. இதன் ஒரு முக்கியப் பணி ஒலியை உருவாக்குவதற்கும், ஒலியை நீருக்குள் செலுத்துவதற்கும் உதவுவதாகும். அதே நேரத்தில், திமிங்கலங்கள் ஒன்றுக்கொன்று மோதும்போது அதன் தலை எவ்வாறு செயல்படுகிறது என்பதும் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

திமிங்கலத்தின் இயற்கையான ஆயுதம்

2002ஆம் ஆண்டு, பரிணாம உயிரியலாளர் டேவ் கேரியர் மற்றும் அவரது குழுவினர் ஸ்பெர்ம் திமிங்கலத்தின் தலையைப் பற்றிய ஓர் ஆய்வை வெளியிட்டனர். இந்தத் திமிங்கலத்தின் தலை, மற்ற திமிங்கலங்களுடன் மோதிச் சண்டையிடுவதற்கான இயற்கையான ஆயுதமாக இருக்கலாம் என்பது அவர்களது கருத்து. மான், செம்மறியாடு போன்ற விலங்குகள் தலையைப் பயன்படுத்தி மோதிக்கொள்வதைப்போல, ஆண் ஸ்பெர்ம் திமிங்கலங்களும் தங்களுக்குள் போட்டியிடும்போது மோதிக்கொள்ளக்கூடும். அவற்றின் பிரம்மாண்டமான தலை இத்தகைய மோதல்களில் முக்கியப் பங்கு வகிக்கலாம்.

சமீபத்திய ஆய்வுகளில், ஸ்பெர்ம் திமிங்கலங்கள் ஒன்றுக்கொன்று தலையால் மோதிக்கொள்வது நேரடியாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளது. அவற்றின் தலைக்குள் உள்ள மென்மையான திசுக்கள் மற்றும் கொழுப்பு அமைப்புகள் மோதலின்போது ஏற்படும் தாக்கத்தைத் தாங்குவதில் பங்கு வகிக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Sperm Whale

ஸ்பெர்ம் திமிங்கலங்களின் மோதல் குறித்த ஆய்வுகளில், ஓர் இளம் ஆண் திமிங்கலம் வினாடிக்கு சுமார் 4.5 மீட்டர் வேகத்தில் மற்றொரு திமிங்கலத்தை நோக்கிச் சென்று மோதியபோது, அதன் தாக்க விசை சுமார் 460 கிலோநியூட்டன் எனக் கணிக்கப்பட்டது. இதே வேகத்தில் ஒரு பெரிய, முழுமையாக வளர்ந்த திமிங்கலம் மோதினால், அதன் தாக்க விசை சுமார் 1,200 கிலோ நியூட்டனாக இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இந்தியாவில் UPI பயன்பாடு! 10 ஆண்டுகளில் நிகழ்ந்த பிரமாண்ட வளர்ச்சி #DataStory

ஸ்பெர்ம் திமிங்கலத்தின் தனித்துவமான உடல் அளவு

இது மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் செல்லும் பேருந்து மோதுவதைப் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வாளர்கள் விளக்குகின்றனர். இத்தகைய மோதல் மரக்கப்பலின் கட்டமைப்பைச் சேதப்படுத்தக்கூடும். இருப்பினும், இந்த விசை ஒரு கணக்கீட்டு மதிப்பீடுதான். ஒவ்வொரு மோதலிலும் ஒரே அளவிலான விசை ஏற்படும் என்று கூற முடியாது. திமிங்கலத்தின் எடை, வேகம், மோதும் கோணம், கப்பலின் கட்டமைப்பு போன்ற பல காரணிகள் சேதத்தின் அளவைத் தீர்மானிக்கும்.

ஸ்பெர்ம் திமிங்கலத்தின் உடல் அளவும் அதன் தனித்துவமான அம்சங்களில் ஒன்று. வளர்ந்த ஆண் திமிங்கலங்கள் சுமார் 16–18 மீட்டர் நீளம் வரை வளரக்கூடும்.
Sperm Whale

ஸ்பெர்ம் திமிங்கலத்தின் உடல் அளவும் அதன் தனித்துவமான அம்சங்களில் ஒன்று. வளர்ந்த ஆண் திமிங்கலங்கள் சுமார் 16–18 மீட்டர் நீளம் வரை வளரக்கூடும். பெண் திமிங்கலங்கள் பொதுவாக, 11–13 மீட்டர் நீளம் கொண்டிருக்கும். ஆண்கள் சுமார் 45 டன் அல்லது அதற்கும் அதிகமாகவும், பெண்கள் சுமார் 15 டன் அளவிலும் இருக்கலாம். விலங்குகளில் மிக அதிக எடையுள்ள மூளையைக் கொண்ட உயிரினமாக ஸ்பெர்ம் திமிங்கலம் அறியப்படுகிறது. அதன் மூளையின் எடை சுமார் 7–9 கிலோ கிராம் வரை இருக்கலாம். தலையின் இடதுபுறத்தில் ஒரே ஒரு மூச்சுத்துளை உள்ளது. இதனால் அது மூச்சை வெளியிடும்போது காற்று முன்னோக்கியும் இடதுபுறமாகவும் தெறிப்பதைக் காணலாம். அதன் கீழ்த் தாடையின் இருபுறங்களிலும் 20–26 பெரிய பற்கள் உள்ளன. சுமார் 60 ஆண்டுகள் வரை வாழக்கூடும்.

இரையை அறிந்துகொள்ளும் திமிங்கலம்

ஸ்பெர்ம் திமிங்கலங்கள் உணவு தேடுவதற்காக அடிக்கடி 600–1,000 மீட்டர் ஆழத்திற்குச் செல்கின்றன. சில நேரங்களில் இதைவிட அதிக ஆழத்திற்கும் செல்லக்கூடும். ஒரு முறை நீருக்கடியில் சென்றால், சுமார் 45–90 நிமிடங்கள் வரை மூச்சை அடக்கி இருக்க முடியும். அவற்றின் முக்கிய உணவு கணவாய் மீன்கள் (Squid). ஆழ்கடலில் வாழும் பெரிய கணவாய் மீன்கள், ஆக்டோபஸ் மற்றும் சில மீன் இனங்களையும் அவை உணவாக உட்கொள்கின்றன.

Sperm Whale

ஆழ்கடலில் சூரிய ஒளி குறைவாக இருப்பதால், பார்வையை மட்டுமே நம்பி இரையைக் கண்டுபிடிப்பது கடினம். இதற்காக ஸ்பெர்ம் திமிங்கலம் எதிரொலி உணர்தல் (Echolocation) என்ற முறையைப் பயன்படுத்துகிறது. அது சிறப்பு ஒலிகளை நீருக்குள் அனுப்புகிறது. அந்த ஒலிகள் இரையின் மீது பட்டு எதிரொலியாகத் திரும்புகின்றன. அந்த எதிரொலியை வைத்து இரை எங்கே இருக்கிறது, எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதைத் திமிங்கலம் அறிந்துகொள்கிறது.

மனிதர்கள் இருட்டில் டார்ச் விளக்கைப் பயன்படுத்துவதுபோல, இந்தத் திமிங்கலம் ஒலியைப் பயன்படுத்தி ஆழ்கடலில் இரையைத் தேடுகிறது. அதன் தலையில் உள்ள சிறப்பு அமைப்புகள் இந்தச் செயலுக்கு உதவுகின்றன.

இதையும் படிக்க: CO₂ உமிழ்வில் முன்னணியில் இருக்கும் நாடுகள்.. காலநிலை மாற்றத்துக்கு யார் காரணம்? #DataStory

ஸ்பெர்ம் திமிங்கலங்கள் வேட்டையாடப்பட்டது ஏன்?

பெண் ஸ்பெர்ம் திமிங்கலங்களும் அவற்றின் குட்டிகளும் பொதுவாகக் கூட்டமாக வாழ்கின்றன. இவை உணவு தேடுவதிலும், குட்டிகளைப் பாதுகாப்பதிலும் ஒன்றுக்கொன்று உதவுகின்றன. வளர்ந்த ஆண் திமிங்கலங்கள் பெரும்பாலும் தனியாகவோ அல்லது ஆண்களின் சிறிய குழுக்களாகவோ பயணம் செய்கின்றன.

18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் ஸ்பெர்ம் திமிங்கலங்களின் எண்ணெய்க்கு அதிகத் தேவை இருந்தது. இதனால் அவை பெருமளவில் வேட்டையாடப்பட்டன. 20ஆம் நூற்றாண்டிலும் வணிக நோக்கிலான வேட்டை தொடர்ந்ததால், உலகெங்கும் அவற்றின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்தது.

Sperm Whale

திமிங்கல வேட்டைக்கு இடைக்காலத் தடை

1986ஆம் ஆண்டு சர்வதேச திமிங்கல ஆணையம் வணிக நோக்கிலான திமிங்கல வேட்டைக்கு இடைக்காலத் தடையை அமல்படுத்தியது. இருப்பினும், இந்த உயிரினங்கள் இன்றும் பல்வேறு ஆபத்துகளை எதிர்கொள்கின்றன. திமிங்கல வேட்டைக்கு முன்பு, 11 லட்சம் என மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், தற்போது சுமார் 3 லட்சம் மட்டுமே இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

திமிங்கலங்களுக்குப் பாதிப்பு

கப்பல்களுடன் மோதுதல், மீன்பிடி வலைகளில் சிக்குதல், கடலில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் ஒலி மாசுபாடு ஆகியவை அவற்றின் வாழ்க்கையைப் பாதிக்கின்றன. குறிப்பாக, ஒலியை நம்பி வாழும் திமிங்கலங்களுக்கு கடலுக்குள் ஏற்படும் அதிகப்படியான சத்தம் உணவு தேடுவதிலும் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்வதிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

ஸ்பெர்ம் திமிங்கலத்தின் கதை ஒரு கப்பலை மூழ்கடித்த சம்பவத்துடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை. அதன் பிரம்மாண்டமான தலை, ஸ்பெர்மாசெட்டி உறுப்பு, ஆழ்கடலில் இரையைத் தேடும் திறன், மற்ற திமிங்கலங்களுடன் மோதும் நடத்தை எனப் பல வியப்பூட்டும் அம்சங்கள் இதில் உள்ளன.

Sperm Whale

200 ஆண்டுகளுக்கு முன்பு எசெக்ஸ் கப்பலில் உயிர் பிழைத்தவர்களின் துயரமான அனுபவம், உலக இலக்கியத்தில் புகழ்பெற்ற ஒரு நாவல் உருவாக உத்வேகமாக அமைந்தது. அதே சம்பவம், திமிங்கலங்களின் உடல் அமைப்பையும் நடத்தையையும் புரிந்துகொள்வதற்கான அறிவியல் ஆர்வத்தையும் தொடர்ந்து தூண்டுகிறது.

கடலின் ஆழத்தில் இன்னும் பல மர்மங்களைத் தன்னுள் வைத்திருக்கும் ஸ்பெர்ம் திமிங்கலம், இயற்கையின் வியப்பூட்டும் படைப்புகளில் ஒன்று. அதை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு அறிவியல் ஆய்வுகள் அவசியம்; அதைவிட முக்கியமாக, அதன் வாழிடங்களைப் பாதுகாப்பதும் இந்த அரிய உயிரினத்தை அழிவிலிருந்து காப்பதும் நமது பொறுப்பாகும்.

இதையும்படிக்க: அழிவின் விளிம்பில் 49,500 உயிர்கள்.. அதிகம் பாதிக்கப்பட்டது எவை? எச்சரிக்கும் IUCN Red List!