Model image AI
சிறப்புக் களம்

ஸ்டார்லிங்க் | தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தலா? எலான் மஸ்க் - மத்திய அரசு மோதலின் பின்னணி!

புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகவே ஸ்டார்லிங்குக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

PT WEB

செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்

இந்தியாவில் ஸ்டார்லிங்குக்கு அனுமதி மறுக்கப்படுவதாக எலான் மஸ்க் குற்றம்சாட்டும் நிலையில், தேசியப் பாதுகாப்பு மற்றும் தரவுக் கட்டுப்பாடு காரணமாகவே தாமதம் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கடந்த சில நாட்களாக எலான் மஸ்க்குக்கும் இந்திய அரசுக்கும் இடையே பல மோதல்கள் நிலவி வருகின்றன. ஸ்டார்லிங்க் எனப்படும் செயற்கைக்கோள் இணையச் சேவையை இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனைக்குக் கொண்டுவர 2021 முதல் அவர் முயன்று வருகிறார். இந்த விவகாரம் தற்போது அரசியல் மற்றும் தொழில்துறை வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Starlink India Row: Musk vs Gov

ஸ்டார்லிங்க் என்றால் என்ன?

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இயக்கும் செயற்கைக்கோள் இணைய நெட்வொர்க்கே ஸ்டார்லிங்க் ஆகும். செயற்கைக்கோள்கள் மூலம் இணையம் வழங்கப்படுவதால், கேபிள் அல்லது செல்போன் கோபுர வசதி இல்லாத இடங்களிலும் இதன் சேவை செயல்படும் என்பதே இதன் முக்கிய அம்சமாகும். இந்தியாவின் கடைக்கோடி கிராமப் பகுதிகளுக்கும் இணைய வசதி கிடைக்கும் என ஸ்டார்லிங்க் நிறுவனம் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. ஆனால், இந்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளில் சிலவற்றுடன் சார்ந்துபோகாததே, இந்தியாவில் அதன் நுழைவுக்குத் தடையாக இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது, இறுதிக்கட்டப் பாதுகாப்பு அனுமதிக்காக ஸ்டார்லிங்க் நிறுவனம் காத்திருக்கிறது.

ஸ்டார்லிங்கைத் தொடர்ந்து, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும் தனது செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. அதற்கான இறுதிக்கட்டப் பாதுகாப்பு அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. ஸ்டார்லிங்க் இந்தியாவுக்குள் வந்தால், இந்திய மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு வணிக ரீதியான இழப்பு ஏற்படும் என்றும், அதன் லாபம் குறையும் என்றும் கூறப்படுகிறது.

எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டு

சில தனியார் முதலாளிகளின் நலனுக்காக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஸ்டார்லிங்க் சேவை இந்திய மக்களுக்குக் கிடைக்காமல் தடுத்து வருவதாக எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார். இது இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது. இத்தகைய இணையச் சேவை நிறுவனங்களால் இந்தியாவில் மக்களுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்று கூறிய மஸ்க், இதனால் அம்பானியின் லாபம் குறையலாம் என்றாலும், அவரது நிறுவனம் தொழிலிலிருந்து வெளியேறாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அம்பானியை நேரடியாகக் குறிப்பிட்டு, "பிரதமர் அம்பானி" எனக் கிண்டலாக அழைத்த அவர், ஸ்டார்லிங்க் நிறுவனத்தைப் போட்டியிட அம்பானி அனுமதிப்பாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Gautam Adani

மத்திய அரசின் பதில்

இதற்கு விளக்கம் அளித்த மத்திய அரசு, இந்தியாவின் செயற்கைக்கோள் தகவல் தொடர்புக் கொள்கை மிகவும் நியாயமானது, வெளிப்படையானது, அனைத்து நிறுவனங்களுக்கும் சம வாய்ப்பளிக்கும் பாகுபாடற்றது எனத் தெரிவித்துள்ளது. இதில் யாருக்கும் சிறப்புச் சலுகைகளோ, புறக்கணிப்புகளோ வழங்கப்படுவதில்லை என்றும், பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறுவது ஆதாரமற்றது என்றும் அரசு மறுத்துள்ளது. புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காகவே ஸ்டார்லிங்குக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

கிளர்ச்சிக் குழுக்கள் பயன்படுத்துவதாக எழுந்த சர்ச்சை

இதற்கு முன்னதாக, மணிப்பூர் போன்ற கலவரப் பகுதிகளில் உள்ள கிளர்ச்சிக் குழுக்கள் ஸ்டார்லிங்கைப் பயன்படுத்துவதாகத் தகவல்கள் பரவின. இதை எலான் மஸ்க் முற்றிலுமாக மறுத்துள்ளார். இந்திய எல்லைக்கு மேலே ஸ்டார்லிங்க் சேவையை வழங்கும் செயற்கைக்கோள் கற்றைகள் முடக்கப்பட்டே உள்ளதால், அங்கிருந்து ஸ்டார்லிங்க் நெட்வொர்க்குடன் இணைவது தொழில்நுட்ப ரீதியாகச் சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Starlink India Row: Musk vs Gov

"இந்தியாவுக்கு ஏன் உகந்ததல்ல?" – க்ரோக் AI பதில்

ஸ்டார்லிங்க் இந்தியாவுக்கு ஏன் உகந்ததல்ல என்பது குறித்து எக்ஸ் தளத்தின் க்ரோக் AI அளித்த பதில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. "ஹே @grok, இந்தியாவில் ஸ்டார்லிங்கை அனுமதிப்பதால் ஏற்படும் தீமைகளைக் கூறு" என்ற கேள்விக்கு, "இந்தியாவில் ஸ்டார்லிங்கை அனுமதிப்பதில் அரசு முக்கியமாகக் கவலைப்படுவது தேசியப் பாதுகாப்பைப் பற்றித்தான். ஸ்டார்லிங்க் ஓர் அமெரிக்க நிறுவனம் என்பதால், அதன் கட்டுப்பாடு வெளிநாட்டிடம் இருக்கும். நெருக்கடி நேரத்தில் இந்த இணையச் சேவையை நிறுத்தவோ, அதைக் கண்காணிக்கவோ இந்தியாவால் முடியாமல் போகலாம். காரணம், செயற்கைக்கோள்கள் ஒன்றோடொன்று இணைந்து தரவை அனுப்புவதால், அது இந்தியாவுக்கு வெளியே உள்ள வழிகளில் செல்லக்கூடும்.

ai grok

மணிப்பூர், அந்தமான் போன்ற முக்கியப் பகுதிகளில் ஏற்கெனவே ஸ்டார்லிங்க் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனால், எல்லைப் பகுதிகளில் அனுமதியின்றி இந்தச் சேவை பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுகிறது. இது தவிர, ஸ்டார்லிங்கின் கட்டணம் உள்ளூர் இணையச் சேவைகளைவிட மிக அதிகம். மேலும், இந்தியர்களின் தரவு ஒரு தனியார் வெளிநாட்டு நிறுவனத்திடம் இருப்பதும் கவலையாகச் சொல்லப்படுகிறது. இருந்தாலும், செயற்கைக்கோள் இணையச் சேவைக்கு உரிமம் கேட்கும் எல்லா நிறுவனங்களும் இதே போன்ற பாதுகாப்புச் சோதனைகளைக் கடக்க வேண்டும்" எனக் க்ரோக் AI கூறியுள்ளது.

செயற்கைக்கோள் இணையச் சேவை ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் தொழில்நுட்பத்தைச் சார்ந்திருப்பதால், தேசியப் பாதுகாப்பு மற்றும் தரவுக் கட்டுப்பாடு தொடர்பான கேள்விகள் எழுகின்றன.

இதுகுறித்துப் ’புதிய தலைமுறை’க்கு விளக்கம் அளித்த டெக் நிபுணர் ஹரிஹரசுதன் தங்கவேலு, ’’இணையச் சேவை தொடங்கிய பிறகு, அதை எவ்வாறு கண்காணிப்பது, இந்தியச் சட்டங்களுக்கு இணங்கச் செயல்படுவதை எவ்வாறு உறுதிப்படுத்துவது, தேவையான சூழ்நிலைகளில் அரசின் கட்டுப்பாட்டை எவ்வாறு செயல்படுத்துவது போன்ற கேள்விகளுக்கு முன்கூட்டியே பதில் தேவைப்படுகிறது’’ எனத் தெரிவித்தார்.

இதனால், ஸ்டார்லிங்கின் அனுமதி விவகாரத்தை ஒரு நிறுவனத்துக்கு எதிரான நடவடிக்கையாக மட்டும் கருத முடியாது என்றும் அவர் விளக்குகிறார். பாதுகாப்பு விதிமுறைகளைப் பூர்த்தி செய்வது அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுவான தேவையாகும் எனவும் தங்கவேலு கூறுகிறார்.

Starlink India Row: Musk vs Gov

ஸ்டார்லிங்க் மற்றும் தேசியப் பாதுகாப்பு: ஏன் கவலை எழுகிறது?

மேலும் அவர், “வழக்கமான தொலைத்தொடர்பு இணைப்புகள் மூலம் இணையத்தைப் பயன்படுத்தும்போது, பயனரின் இணைப்பு மற்றும் தகவல் பரிமாற்றம் தொடர்பான விவரங்களைச் சட்டப்படி கண்காணிக்கவும், தேவையான விசாரணைகளை மேற்கொள்ளவும் குறிப்பிட்ட நடைமுறைகள் உள்ளன. பயனரின் அடையாளத்தைச் சரிபார்ப்பது, இணைய இணைப்புகளைப் பதிவு செய்வது, சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு உரிய தகவல்களை வழங்குவது போன்ற அம்சங்களும் இதில் அடங்குகின்றன.

ஆனால், செயற்கைக்கோள் இணைய இணைப்புகள் வழக்கமான தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பிலிருந்து வேறுபட்ட முறையில் செயல்படுகின்றன. அவற்றின் தகவல் போக்குவரத்து எந்த வழியாகச் செல்கிறது, பயனரின் அடையாளம் எவ்வாறு சரிபார்க்கப்படுகிறது, எந்தத் தரவுகள் எங்கு சேமிக்கப்படுகின்றன, இந்திய அரசு எந்த அளவுக்குக் கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறை அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும் என்பவை குறித்துத் தெளிவு பெறும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஸ்டார்லிங்க் போன்ற சேவைகள் முறையான பாதுகாப்பு மற்றும் அடையாளச் சரிபார்ப்பு நடைமுறைகளுடன் செயல்படாவிட்டால், அவற்றைத் தவறான நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதற்கான அபாயம் ஏற்படலாம் என்பதே இங்குள்ள கவலை” என்கிறார் தங்கவேலு.

ஒரு பகுதியில் கலவரம் அல்லது வேறு பாதுகாப்புப் பிரச்னை ஏற்படும்போது, குறிப்பிட்ட பகுதிகளில் இணையச் சேவையைத் தற்காலிகமாக முடக்குவது சில நேரங்களில் அரசால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும். ஆனால், மாற்று இணைப்புகள் மூலம் இணையத்தைப் பயன்படுத்த முடிந்தால், அந்தக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்துவது சிக்கலாகலாம். குறிப்பாக, அரசின் ஒழுங்குமுறை அதிகாரத்துக்கு உட்படாத வகையில் ஒரு சேவை செயல்பட்டால், அது சட்ட அமலாக்கத்துக்கும் பாதுகாப்பு அமைப்புகளுக்கும் சவாலாக அமையலாம். இந்தக் காரணங்களால், செயற்கைக்கோள் இணையச் சேவைகளின் தொழில்நுட்ப வசதிகளுடன் அவற்றைச் சரியான முறையில் ஒழுங்குபடுத்துவதற்கான வழிமுறைகளும் அவசியமாகின்றன.

thailand

சைபர் மோசடிகள், கடத்தல் மற்றும் சட்டவிரோதப் பயன்பாடு

மியான்மர், தாய்லாந்து உள்ளிட்ட சில பகுதிகளில், ஆட்களைக் கடத்தி சட்டவிரோத மையங்களில் அடைத்து வைத்து, அவர்களைச் சைபர் மோசடிகளில் ஈடுபடுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இத்தகைய மையங்கள் மூலம் நிதி மோசடிகள் உள்ளிட்ட குற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் இணைய இணைப்பைப் பெறுவதற்காகச் செயற்கைக்கோள் இணைய உபகரணங்களைப் பயன்படுத்தக்கூடும் என்று ஹரிஹரசுதன் தங்கவேலு எச்சரிக்கிறார்.

மேலும், சட்டவிரோத ஆயுதக் குழுக்கள், கடத்தல் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் கும்பல்கள் போன்ற அமைப்புகள், தங்களது தகவல் தொடர்புக்காக மாற்று இணைய வசதிகளைப் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சமும் உள்ளது. இந்தியாவின் அந்தமான் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையின்போது, சிலரிடம் ஸ்டார்லிங்க் உபகரணங்கள் இருந்ததாகக் கூறப்படும் சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். அதே நேரத்தில், இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையைச் சட்டவிரோதக் குழுக்கள் பயன்படுத்துவதாக வெளியான தகவல்களை எலான் மஸ்க் மறுத்துள்ளார்.

இந்தியாவில் இயங்கும் எந்தவொரு இணையச் சேவையும் நாட்டின் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்கு இணங்க வேண்டும் என்று ஹரிஹரசுதன் வலியுறுத்துகிறார். ஒருமுறை போதுமான பாதுகாப்பு நடைமுறைகள் இல்லாமல் ஓர் இணையச் சேவையை அனுமதித்துவிட்டால், பின்னர் அதைக் கட்டுப்படுத்துவது சிக்கலாகலாம். இதனால்தான், சேவையைத் தொடங்குவதற்கு முன்பே அதன் செயல்பாட்டு நடைமுறைகள் குறித்துத் தெளிவான விதிமுறைகள் தேவைப்படுகின்றன என்பது அவரது பார்வை.

ஸ்டார்லிங்க் விலை: கிராமங்களுக்கு ஏற்றதா?

மற்ற நாடுகளில் ஸ்டார்லிங்கின் மாதக் கட்டணம் சுமார் ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை இருக்கலாம் என நேர்காணலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் சுமார் ரூ.300-க்கு மொபைல் டேட்டாவும், சுமார் ரூ.700 மாதக் கட்டணத்தில் வீட்டு பிராட்பேண்டும் கிடைக்கும் நிலையில், இந்த விலை அனைவருக்கும் ஏற்றதா என்ற கேள்வி எழுகிறது.

starlink

தொலைதூரக் கிராமங்களில் இணைய வசதி இல்லாதவர்களுக்கு ஸ்டார்லிங்க் உதவலாம். ஆனால், மாதந்தோறும் அதிகக் கட்டணம் செலுத்துவதும், உபகரணங்களை வாங்குவதும் அவர்களுக்குச் சாத்தியமா என்பதையும் கவனிக்க வேண்டும். தொழில்நுட்பம் இருப்பதால் மட்டுமே ஒரு சேவை பரவலாகப் பயன்படாது; விலையும், மக்களின் வாங்கும் திறனும் முக்கியம்.

இந்தியச் சந்தை மீது மஸ்க்குக்கு ஏன் ஆர்வம்?

பாதுகாப்பு மட்டுமின்றி, மிகப்பெரிய வணிக வாய்ப்பும் இதன் பின்னணியில் இருப்பதாக ஹரிஹரசுதன் தங்கவேலு கூறுகிறார். மக்கள்தொகையில் முன்னணியில் உள்ள இந்தியாவில், பல்வேறு வருமான நிலைகளைக் கொண்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்; தவணை முறையில் விலையுயர்ந்த கைப்பேசிகள் வாங்கும் சந்தையும் வளர்ந்துள்ளது. இங்கு ஒரு சேவை வெற்றிபெற்றால், மிகப்பெரிய வாடிக்கையாளர் தளம் கிடைக்கும். கூகுள், ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் விரிவடைவதும் இதையே காட்டுகிறது.

Elon Musk

சீனாவில் உள்ளூர் நிறுவனங்கள் வலுவாக உள்ளன; சில வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளும் உள்ளன. இந்தியாவில் அந்த நிலை இல்லை என அவர் சுட்டிக்காட்டுகிறார். டிக்டாக் போன்ற தளங்களும், டிஜேஐ போன்ற சீன ட்ரோன் நிறுவனங்களும் வெவ்வேறு நாடுகளில் பாதுகாப்பு விவாதங்களை எதிர்கொள்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகளாகக் கூறுகிறார். வெளிநாட்டு நிறுவனங்கள் நுழையும்போது தொழில்நுட்பம் மட்டுமல்லாமல், உள்ளூர் நிறுவனங்களின் போட்டி, தேசியப் பாதுகாப்பு, பொருளாதார நலன்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பது அவரது விளக்கம்.

எனவே, ஸ்டார்லிங்க் இந்தியாவுக்கு வர விரும்புவது இணையச் சேவைக்காக மட்டுமல்ல; பெரிய வாடிக்கையாளர் தளம் கொண்ட சந்தையில் நீண்டகால வணிக வாய்ப்பைப் பெறவும் இருக்கலாம் என்பது அவரது மதிப்பீடு.