nancy, martin, jamie
nancy, martin, jamie twitter
சிறப்புக் களம்

நீதியை தேடி..1994ல் கொலை செய்யப்பட்ட மகள்! 26 ஆண்டுகள் போராடி காதலருக்கு தண்டனை வாங்கி கொடுத்த தந்தை

Prakash J

”அப்பா, நான் அமெரிக்கா பல்கலைக்கழகம் சென்று படித்து தூதரக அதிகாரியாக விரும்புகிறேன்” என்கிறார் 18 வயதான மகள், நான்சி. அதற்கு அவருடைய தந்தை மார்ட்டின் மெஸ்ட்ரே, ”மகளே... உன்னை எங்கும் செல்லவிட மாட்டேன். நீ எங்கள் பக்கத்திலேயே இருக்க வேண்டும்” என அன்புக்கட்டளை இடுகிறார். என்றாலும் அவரது முகத்தைப் பார்த்து மகளின் கனவுக்கு தடை விதிக்காமல் தலையாட்டுகிறார்.

இந்த உரையாடலுக்குச் சொந்தமான தந்தையும், மகளும் கொலம்பியாவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த 1994ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி குடும்பத்துடன் புத்தாண்டைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். அப்போது நான்சியின் காதலர் ஜேமி சாத் அவரது வீட்டுக்கு வர, அவருடன் வெளியில் செல்வதற்கு தந்தையிடம் ஒப்புதல் கேட்கிறார். அவரும், “நான்சி விரைவாகவே வீட்டுக்கு வந்துவிடு; ஜேசி, நான்சியைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்” எனச் சொல்லி அனுப்புகிறார்.

ஆனால், அடுத்த நாள் நான்சி வீட்டுக்கு வராததையடுத்து, அவரைப் பதற்றத்துடன் தேட ஆரம்பிக்கிறார் மார்ட்டின். நான்சி சென்ற இடங்களை எல்லாம் ஓடிஓடிப் போய்ப் பார்க்கிறார். ஆனாலும், நான்சி மட்டும் அவரது கண்ணில்படவே இல்லை. இறுதியில் ஒரு தீர்க்கமான முடிவெடுத்த மார்ட்டின், நான்சியின் காதலர் வீட்டுக்குப் பயணமாகிறார்.

அங்கு தரையில் சிந்திய ரத்தக்கறையைத் துடைத்துக் கொண்டிருந்த ஜேமியின் தாய், “உங்களது மகள் விபத்துக்குள்ளாகி, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறாள். அங்கு போய்ப் பார்க்கவும்” எனச் சொல்ல, மகளின் ரத்தக் கறை என தெரியாமலேயே அதை மிதித்தப்படி பறந்தோடுகிறார் மார்ட்டின். அப்போதுதான் தன் மகளுக்கு என்ன நடந்திருக்கும் என யூகிக்கிறார்.

காதலர் ஜேமி, நான்சியைப் பாலியல் வன்புணர்வு செய்து, அதனால் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என எண்ணுகிறார். அவர், யூகித்தது சரிதான். அப்படியொரு கொடுமைக்கு ஆளாகி குற்றுயிராய்க் கிடந்த நான்சியை, ஜேமி தன் தந்தையின் உதவியுடன் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றிருக்கிறார். இதில் பலத்த காயமுற்ற நான்சி, மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரில் அனுமதிக்கப்படுகிறார். அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் மகளின் கோலத்தைப் பார்த்து மார்ட்டின் குடும்பத்தினர் கண்ணீர் வடிக்கின்றனர்.

மருத்துவரோ, ‘மகள் பிழைக்க வாய்ப்பில்லை’ என உறுதியாய்ச் சொல்ல, அவர்களின் இதயங்களோ சுக்குநூறாய் உடைகிறது. மருத்துவமனையில் அவர்கள் தங்கி இருந்த நாட்கள் எல்லாம் ஆண்டுகளாய்க் கடக்கின்றன. தடுக்கவே முடியாத சூழலை எட்டிவிட்டபிறகு, மருத்துவரால் மட்டும் மாற்றிவிட முடியுமா என்ன? சொன்னபடியே, நான்சி இந்த உலகத்தைப் பிரிந்து செல்கிறார். கண்ணீர்க் குளத்தில் இருக்கும் மார்ட்டின் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

காவல் துறையின் விசாரணை தொடங்குவதற்கு முன்பே, காதலர் ஜேமி வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்கிறார். இந்தச் சூழலில், ’நான்சி, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கலாம்’ என தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், அதை காவல் துறை விசாரணையில் உடைக்கிறது. அதாவது, ’நான்சியின் இடது கையில் துப்பாக்கி வைத்திருந்ததற்கான ஆதாரங்கள் இருந்தபோதும், அவர் வலது கை பழக்கம் உள்ளவர் எனவும், அதனால் அவரே தன்னைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயற்சிக்க வாய்ப்பில்லை’ எனவும் காவல் துறையினர் நிரூபிக்கின்றனர். மேலும், நான்சி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்; அதற்குச் சாட்சியாய் அவரது உடலில் காயங்கள் இருந்தன. தவிர அவரது காலின் வலது பக்கம் துப்பாக்கியால் சுடப்பட்ட காயம் இருந்தது’ என விசாரணையில் தெரிவித்துள்ளது.

இவையெல்லாம், ஜேமிக்கு எதிரான ஆதாரமாகத் திரும்ப நான்சி இறந்து 2 ஆண்டுகளுக்குப் பின் (1996) கொலம்பிய நீதிமன்றம் அவருக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் மகளின் மரணத்தை ஜீரணிக்க முடியாத மார்ட்டின் குடும்பம் பிரிகிறது. நான்சியின் தாய், மார்ட்டினை விட்டுப் பிரிய, மகனோ அமெரிக்காவுக்குப் பறக்கிறார். இதனால் அனாதையாகும் மார்ட்டின், நான்சியின் சாவுக்குக் காரணமானவருக்குத் தண்டனையை வாங்கித் தருவதற்காகத் தேடுதல் வேட்டையைத் தனி ஒருவனாய்த் தீவிரப்படுத்துகிறார்.

தன் மகளின் காதலர் ஜேமியைத் தேடி அலைகிறார், மார்ட்டின். அவருக்குத் தெரிந்த தகவல்கள் மூலம் ஜேமி, பிரேசில் இருப்பதாகக் கண்டுபிடிக்கிறார். இதை காவல் துறைக்கும் தெரிவிக்கிறார். இது மட்டுமல்ல, ஜேமி பற்றிய அனைத்து விஷயங்களையும் போலீசாருக்கு தெரிவித்தப்படியே இருக்கிறார். அதன்பயன், பிரேசிலில் ஜேமியை நோட்டமிட்ட போலீசார், அவர் பயன்படுத்திய பொருட்களின் கைரேகையை வைத்து அவரே ஜேமி என தீர்மானிக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்.

26 ஆண்டுகளுக்குப் பிறகு ஜேமியைக் கண்டுபிடித்த சந்தோஷத்தில் தன் மனைவி மற்றும் மகனை அழைத்து அழுது தீர்க்கிறார், மார்ட்டின். இதற்கிடையே, “பிரேசில் நாட்டுச் சட்டப்படி குற்றவழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர், 20 ஆண்டுகளுக்குள் நாடு கடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 26 ஆண்டுகள் (2020ஆம் ஆண்டு) கழிந்துவிட்டதால், ஜேமியை நாடு கடத்த முடியாது” என மார்ட்டினுக்கு வழக்கறிஞர் ஒருவரிடமிருந்து கடிதம் வர நிலைகுலைந்து போகிறார்.

கடவுளை வேண்டி நின்ற அவருக்கு பதில் கிடைக்கிறது. அதாவது, ’உச்ச நீதிமன்றம் அமர்வில் இருந்த அனைத்து நீதிபதிகளும் இந்த முடிவை ஒருமனதாக எடுக்கவில்லை’ என தெரிய வருகிறது. மேலும், ’பிரேசில் நாட்டுச் சட்டத்தின்படி, பிரேசிலில் குற்றம் நடந்தால் நாடு கடத்தப்பட முடியாது. ஆனால் அதே நபர் ஏற்கெனவே மற்றொரு குற்றம் செய்திருந்தால் அந்த விதி பொருந்தாது’ என்று கூறப்படுகிறது. தவிர, ஜேமி இந்த தண்டனையிலிருந்து தப்பிப்பதற்காக தன்னைப் பற்றி பல தவறான ஆவணங்களைத் தயாரித்து வைத்ததும் அவருக்கு எதிராய்த் திரும்புகிறது.

என்றாலும், பிரேசில் நாட்டு உச்ச நீதிமன்றம் ஜேமியை, நாடு கடத்த அனுமதிக்கவில்லை. ஆனாலும், மார்ட்டின் விடாமல் சர்வதேச சட்ட அமைப்பின் உதவியை நாடுகிறார். அந்த அமைப்பின் உதவியுடன் பிரேசில் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய மனுத் தாக்கல் செய்கிறார், மார்ட்டின். இதில், ’மார்ட்டினுக்கு உரிமை உண்டு’ என அவருக்கு சாதகமாய்த் தீர்ப்பு வர, அடுத்து ஜேமி மீதான மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதன் தீர்ப்பில், கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி பிரேசில் உச்சநீதிமன்றம், ஜேமியை நாடு கடத்த ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, தன் மகளின் சாவுக்கு நீதி கிடைத்த சந்தோஷத்தில் அவரின் நினைவுகளுடன் மூழ்கியிருக்கிறார், மார்ட்டின்.