சிறப்புக் களம்

''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல!''

''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல!''

webteam

இன்று உலக பூமி தினம். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்22ம் தேதி உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது. நாம் வாழும் பூமியைக் காக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவே பூமி தினம் கொண்டாடப்படுகிறது. பூமி போல பல கிரகங்கள் இருக்கலாம். ஆனால் உயிர்கள் வாழ வேண்டுமென்றால் பல சாதக சூழல்கள் வேண்டும். அனைத்தும் பெற்ற ஒரே இடமாக பூமி மட்டுமெ இருக்கிறது. பூமி போல வேறு எதுவும் கிடைத்துவிடாதா என்ற ஆசையில் தான் உலக ஆராய்ச்சியாளர்கள் பல ஆய்வுகளை செய்துகொண்டிருக்கிறார்கள். அதே வேளையில் கையில் இருக்கும் பூமியும் நழுவிக்கொண்டு இருப்பதை நாம் உணரவில்லை என்றுதான் தோன்றுகிறது.

பூமியின் ஆரோக்யத்துக்கு பெரிய அச்சுறுத்தல் வெப்பமயமாதல். வெப்பமயமாதலால் வானிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. வானிலை மாற்றங்களால் மழை பொழிவில் மாற்றம் ஏற்படுகிறது. கடல் மட்டம் உயர்கிறது. காடுகளின் தன்மை மாறுகின்றன. காடுகளின் தன்மை மாறுவதால் காட்டு விலங்குகள் தடம் மாறுகின்றன. மொத்த பூமியும் தன் நிலையை மாற்றி சுழன்று கொண்டிருக்கிறது. இத்தனை பிரச்னைக்கும் காரணமான வெப்பமயமாதலுக்கு என்ன காரணம்? யார் காரணம்? வேறு யாருமில்லை நாம் தான்.

வனங்களை பயன்பாடற்ற வெறும் இடமாக மனிதன் நினைக்கத்தொடங்கிய நாள் முதலே இந்த பூமியை நாம் அழிக்கத்தொடங்கி விட்டோம். செடியும், கொடியும், மரமும் மண்டிகிடக்கும் வனங்கள் தான் இந்த பூமியின் பாதுகாவலன். வனங்கள் அழிக்கப்பட்டு கான்கிரீட் கட்டிடங்கள் முளைக்கின்றன. மனித தேவைக்காக உருவாக்கப்படும் சாலைகளும், பாலங்களும் வனங்களை சூறையாடுகின்றன. ஊருக்குள்ளும் இயற்கை அழிக்கப்பட்டு கட்டிடங்கள் எழுகின்றன. மறுக்க முடியாத தேவை என்றாலும் அழிக்கப்படும் இயற்கைக்கு இணையான உருவாக்கம் என்பது இல்லாமல் போகிறது. நாம் நட்டு வளர்க்கும் மரங்கள் தான் இந்த பூமியை காக்கபோகிறது என்பதை நாம் உணர வேண்டும்.

அதிகரிக்கும் தொழிற்சாலைகளும், அது வெளியேற்றும் புகையும் காற்றின் தன்மையை மாற்றுகின்றது. காற்றில் கார்பன் டை ஆக்சைடு அதிகம் கலக்க காரணமாக தொழிற்சாலை புகையே உள்ளது. மரங்கள் குறைவும், கார்பன் டை ஆக்சைடு அதிகரிப்பும் பூமியையும், வாழும் உயிரினங்களையும் அச்சுறுத்துகின்றன.

பூமியின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து இருக்கும் கடல் மட்டம் உயர்வது மற்றொரு அச்சுறுத்தல். புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் அதிகம் உருகுகின்றன. வெப்பமயமாதல் இதே வேகத்தில் சென்றால் இந்த நூற்றாண்டின் முடிவுக்குள் அண்டார்டிகாவின் மொத்தப் பனியும் உருகும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அப்படியானால் கடல்மட்ட அளவு 210 அடிவரை உயரும் என்றும் இதனால் பல கோடி மக்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற வேண்டி வரும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாம் தனித்தனியாக தங்கிக் கொள்ள வீடு வைத்திருக்கிறோம். அதே போல் உயிரினங்கள் அனைத்தும் கூட்டுக்குடும்பமாய் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெரிய வீடு தான் பூமி. பல உயிரினங்கள் வாழும் இந்த கூட்டுக்குடும்பத்தில் மனிதன் மட்டுமே பூமியை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்துக்கொண்டு இருக்கிறான் என்பது மறுக்கமுடியாத உண்மை. இயற்கையை காப்பாற்ற மனிதன் கைகோர்த்து நிற்க வேண்டிய நிலைமை உருவாகி இருக்கிறது. மனிதர்கள் ஒன்றை மட்டும் நினவில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்த பூமி மனிதர்களுக்கானது மட்டுமல்ல.