சிறப்புக் களம்

அந்த இரவு 8 மணி... பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் 5 ஆண்டு காலமும் தாக்கமும்!

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கையால் இந்தியா சாதித்தது என்ன, சறுக்கியது எப்படி என சற்றே விரிவாக தெரிந்துகொள்வோம்.

2016 நவம்பர் 8-ஆம் தேதி... அன்றைய தினம் வேலைகளுக்கு சென்றவர்கள் வழக்கமாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். 'பிரதமர் மோடி இன்று மாலை 8 மணி அளவில் நாட்டு மக்களிடம் பேசுகிறார்' என முதலில் செய்திகள் வெளியானபோது வழக்கமான செய்திதான் என கடந்து போனார்கள். ஆனால், பிரதமர் தனது உரையில் சொன்ன விஷயம் ஒட்டுமொத்த நாட்டையும் ஒரு நிமிடம் உறையச் செய்தது.

அதுவரை நாட்டு மக்கள் தங்களிடம் இருப்பதிலேயே அதிக மதிப்புள்ளதாக கருதி வந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதுதான் அந்த அறிவிப்பு.

சில மணிநேரங்களுக்கு மக்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என கொஞ்சம் கொஞ்சமாக விளக்கங்கள் கிடைக்கப்பெற, இரவோடு இரவாக வரிசையில் நின்ற மக்கள் அடுத்த சில வாரங்களுக்கு வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் சந்தித்த துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

அத்தனையும் மக்கள் பொறுத்துக் கொண்டதற்கு காரணம், 'இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் நாட்டில் தீவிரவாதம் குறையும், கருப்பு பணமும், கள்ளப் பணமும் முற்றிலுமாக ஒழியும். இதன் பலன்கள் மக்களுக்கு நேரடியாகக் கிடைக்கும்' என்ற பிரதமர் மோடியின் வாக்குறுதிகள்தான்.

இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட சில தினங்களிலேயே புதிய 2000 ரூபாய் நோட்டுகள் நாட்டின் பல பணக்காரர்களின் வீடுகளில் கட்டுக்கட்டாக கண்டறியப்பட்டபோதும், ஒட்டுமொத்தமாக நாட்டிற்கும் நன்மை கிடைக்கும் என்பதற்காக பல்லை கடித்துக்கொண்டு ஒத்துக்கொண்டனர் நாட்டு மக்கள்.

ரிசர்வ் வங்கியின் அறிக்கைபடி, கடந்த 2016-ஆம் ஆண்டு நாட்டில் ஒட்டுமொத்தமாக கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 6.32 லட்சம். அதேவேளையில் கடந்த 4 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக கைப்பற்றப்பட்ட கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை 18.87 லட்சம். இந்தப் புள்ளிவிவரங்களின்படி பார்த்தால் அளவு சற்று குறைந்திருக்கிறது. ஆனால் முழுமையாக ஒழியவில்லை. மேலும் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக உயர்ந்து வருவதாகவும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

தீவிரவாத தாக்குதலை பொறுத்தவரை மத்திய உள்துறை அமைச்சகம் மக்களவையில் வழங்கிய எழுத்துப்பூர்வமான தகவலின்படி 2017-ஆம் ஆண்டு ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் 342 தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையில், பொதுமக்களில் 40 பேரும், 80 பாதுகாப்பு படை வீரர்களும் கொல்லப்பட்டிருந்தனர். 2018-ஆம் ஆண்டு 614 தீவிரவாத சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், 39 பொதுமக்களும், 91 பாதுகாப்பு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர். 2019-ஆம் ஆண்டு நடந்த 594 தீவிரவாத தாக்குதலில் 39 பொதுமக்களும், 80 பாதுகாப்பு படை வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இது நேரடியான தீவிரவாதத் தாக்குதல்தான். எல்லைப் பகுதிகளில் அத்துமீறி தாக்குதல் நடத்தும் சம்பவம் கடந்த 2011-ஆம் ஆண்டு 2140 ஆக இருந்த நிலையில், 2020-ஆம் ஆண்டு 5,113 ஆக அதிகரித்துள்ளது. அதாவது பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகும் தீவிரவாத தாக்குதல் இந்தியாவில் தொடர்ந்து அதிகமாகத்தான் இருந்து வருகிறது.

கருப்பு பணம் ஒழிப்பை பொருத்தவரை பணமதிப்பிழப்பு நடவடிக்கை செய்யப்பட்டதற்கு பிறகு 86 சதவீதமான 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் திரும்பி விட்டதாக கூறும் ரிசர்வ் வங்கி, மீதம் இருக்கக்கூடிய ரூபாய் நோட்டுகள் கருப்புப் பணமாக கணக்கிடப்பட்டு இருப்பதாக சொல்லியதே தவிர, அவை எந்த வகையில் நாட்டிற்கு மீண்டும் வந்தது, எந்த வகையில் நேரடியாக பலனை மக்களுக்கு வழங்கியது என்பது குறித்த தெளிவான விளக்கங்களை இன்னும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைச் சுட்டிக்காட்டி கடந்த ஆண்டு கூட முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் கேள்வி எழுப்பியிருந்தார். 2019-ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்ட கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் மூலம் 1.3 லட்சம் ரூபாய் கருப்பு பணம் மீட்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் அப்போது நிதியமைச்சராக இருந்த பியூஸ் கோயல் கூறியிருந்தார்.

இந்திய பொருளாதாரம் ஆன்லைன் வர்த்தகத்திற்கு திரும்பியது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் முக்கிய வெற்றி என மத்திய அரசு கூறினாலும் கூட, கொரோனா பேரிடர் காலத்தின் கட்டாயம்தான் பெரும்பாலான இந்தியர்களை டிஜிட்டல் வர்த்தகத்திற்கு திருப்பி உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். 2016-ஆம் ஆண்டு 70,466 கோடியாக இருந்த மொத்த ஆன்லைன் வர்த்தக பரிமாற்ற எண்ணிக்கை கடந்த ஆண்டு ரூ.3.4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதுவும் குறிப்பாக 2019-ஆம் ஆண்டும் ரூ.2,02,000 கோடியாக இருந்த மதிப்பு 2020 ஆம் ஆண்டும் ரூ.4,16,000 கோடியாக உயர்ந்தது.

மேற்கூறிய விஷயங்களை சுட்டிக்காட்டிதான் எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நோக்கங்களை தொடர்ந்து மத்திய அரசுக்கு கேள்வியாக எழுப்பி வருகின்றனர்.