ஐபிஎல் கூகுள்
சிறப்புக் களம்

ஐபிஎல் போட்டிகளில் முறியடிக்கப்படாமல் இருக்கும் 5 முக்கிய சாதனைகள்!

ஐபிஎல்லில், எண்ணற்ற சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருந்தாலும், அதில் குறிப்பிட்ட சில சாதனைகள், இதுவரை முறியடிக்கப்படாமலேயே உள்ளது. அதுகுறித்து இங்கு பார்ப்போம்...

Prakash J

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா

இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல்லின் 16வது சீசன் இன்று (மார்ச் 31) முதல் தொடங்க இருக்கிறது. இதன் முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் இன்று அகமதாபாத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இது ஒருபுறமிருந்தாலும், மறுபுறம் ஐபிஎல் என்றாலே பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது. ஒவ்வோரு அணியிலும் இறுதிப் பந்து வீசப்படும் வரை திக்... திக்... நிமிடங்களாவே இருக்கும். அப்படியான ஐபிஎல்லில், எண்ணற்ற சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதில் குறிப்பிட்ட சில சாதனைகள், இதுவரை முறியடிக்கப்படாமலேயே உள்ளது. அந்தச் சாதனைகள் குறித்து இங்கு பார்ப்போம்...

1. கிறிஸ் கெய்லின் இரண்டு சாதனைகள்

கிரிக்கெட் உலகில் சிறந்த வீரராகக் கருதப்படும் மேற்கிந்திய தீவு அணிகளின் வீரரான கிறிஸ் கெய்ல், ஐபில் கிரிக்கெட்டில் அதிகபட்ச தனிநபர் எடுத்த ரன்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 2013ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் புனே வாரியர்ஸ் ஆகிய அணிகள் மோதின.

கிறிஸ் கெய்ல்
இதில் முதலில் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் தொடக்க பேட்டரான கிறிஸ் கெய்ல், 66 பந்துகளில் 175 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 13 பவுண்டரிகள் மற்றும் 17 சிக்ஸர்களையும் நொறுக்கி இருந்தார்.

அவருடைய அதிரடியால் ராயல் சேலஞ்சர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் எடுத்தது. அதுமட்டுமின்றி, இந்தப் போட்டியில்தான் அவர் 30 பந்துகளில் சதமடித்தார். இதன்மூலம், டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற சாதனையையும் கெய்ல் படைத்தார். கெய்ல் படைத்த, இந்த இரண்டு சாதனைகளும் இன்னும் எந்தவொரு வீரராலும் முறியடிக்கப்படாமல் உள்ளது. இதை முறியடிப்பது அவ்வளவு எளிதல்ல என்றாலும், டி20யில் எதுவும் நடக்கலாம் என்பதால், இந்த சாதனையும் நடப்பு சீசனில் முறியடிக்கப்படலாம் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

2. கொல்கத்தா அணியின் தொடர் 10 வெற்றிகள்

ஐபிஎல்லின் பிரதான அணிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஒன்று. இந்த அணி, கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனின்போது, இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரும், பாஜக எம்.பியுமான கெளதம் காம்பீரின் தலைமையில் விளையாடியது. அந்த ஆண்டு, கொல்கத்தா அணி தாம் விளையாடிய கடைசி 9 போட்டிகளிலும் வெற்றி கண்டது. அதாவது, எந்தப் போட்டியிலும் தோல்வியைச் சந்திக்காது அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி கண்டதுடன், அந்த ஆண்டு இரண்டாவது முறையாக ஐபிஎல் கோப்பையையும் அந்த அணி தட்டிச் சென்றது.

கெளதம் காம்பீர்

தவிர, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் தன்னுடைய முதல் போட்டியிலும் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணியின் வெற்றி பட்டியல்
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 10 ஆட்டங்களில் வெற்றிபெற்ற ஒரே அணி என்ற மகத்தான சாதனையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தக்கவைத்துள்ளது.

இதுவும் அவ்வளவு எளிதில் முறியடிக்கப்பட வாய்ப்பில்லை எனக் கருதும் ரசிகர்கள், அதுபோன்ற புதிய சாதனைக்காகவும் காத்திருக்கிறார்கள்.

3. ஐபிஎல் சீசனில் விராட் கோலியின் அதிகபட்ச ரன்கள்

இந்திய கிரிக்கெட்டின் ’கிங்’ எனப் போற்றப்படும், முன்னாள் கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் உலகில் எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ளார். அதுபோல் ஐபிஎல் சீசன் ஒன்றில், இவர் நிகழ்த்திய சாதனையும் இதுவரை முறியடிக்கப்படாமல் உள்ளது.

விராட் கோலி
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்லில் பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி, அந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடி 973 ரன்கள் குவித்தார். அதில் 4 சதங்களும் அடக்கம்.

அந்த தொடரில் பெங்களூரு அணியை, இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றபோதும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கோப்பையை முதல்முறையாகக் கைப்பற்றியது. மற்றொரு பக்கம், விராட் கோலியின் இந்த சாதனையும் இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஏற்கெனவே 196 போட்டிகளில் 6 ஆயிரம் ரன்கள் குவித்து, குறைந்த இன்னிங்ஸில் 6 ஆயிரம் ரன்களை எட்டியவர் என்ற மகத்தான சாதனையுடன் இருக்கும் விராட் கோலி, ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலிலும் அவரே முதல் இடத்தில் உள்ளார். இதுவரை, 223 போட்டிகளில் விளையாடி, 6,624 ரன்கள் எடுத்துள்ளார் கோலி.

4. ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் 37 ரன்கள்

கிரிக்கெட் உலகில் ஒரு ஓவரில் 37 ரன்கள் எடுப்பதெல்லாம் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனெனில் ஒரு ஓவருக்கு 6 பந்துகள் மட்டுமே வீசப்படும். அந்த 6 பந்துகளையும் ஒரு பேட்டர் சிக்ஸ்ர்களாக அடித்தால்கூட, மொத்தம் 36 ரன்கள்தான் வரும். ஆனால், இதில் ஒரு நோ பால் சேர்ந்ததுதான் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனையாக உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில்கூட நடக்காத இந்த அதிசயம், 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனின்போது நிகழ்ந்தேறியது. இதையும் பெங்களூரு அணியில் அங்கம் வகித்த மேற்கிந்திய வீரரான கிறிஸ் கெய்லே படைத்துள்ளார்.

கிறிஸ் கெய்ல், ரவீந்திர ஜடேஜா
2011-ல் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணிக்கு எதிராக விளையாடிய கெய்ல், பிரசாந்த் பரமேஸ்வரன் ஓவரில் மட்டும் 37 ரன்களை (6, 6+nb(1), 4, 4, 6, 6, 4) எடுத்தார். அதாவது, இந்த ஓவரில் 4 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 36 ரன்களை விளாசினார். அந்த ஓவரில் ஒரு நோ பால் என்பதால் அதற்கும் ஒரு ரன் கிடைக்க, ஒரு ஓவரில் ஆர்சிபி அணிக்கு 37 ரன்கள் கிடைத்தது. ஆக, ஐபிஎல் போட்டி தொடரில் ஒரு ஓவரில் அடிக்கப்பட்ட அதிக ரன்கள் இதுதான்.

ஆனால், கிரிக்கெட்டில் எந்த சாதனையும் நிரந்தரமல்ல என்பதற்கு உதாரணமாய், இந்தச் சாதனையை சென்னை அணி வீரரான ரவீந்திர ஜடேஜா சமன் செய்தார்.

ஹர்சல் படேல், ரவீந்திர ஜடேஜா

அதன்படி ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி மற்றும் 2 ரன்களுடன் 36 ரன்களை விளாசினார் ஜடேஜா. ஒரு நோ பால் என்பதால் அதற்கும் ஒரு ரன் கிடைத்தது. எனவே கடைசி ஓவரில் மட்டும் சிஎஸ்கே அணிக்கு 37 ரன்கள் கிடைத்தது. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் படேல் வீசிய ஒரு ஓவரில் 37 ரன்கள் எடுத்தார். அந்த ஓவரில் முதல் 4 பந்திலும் 4 சிக்ஸர்கள் விளாசினார்.

அதில் 4வது பந்து நோ பால்; அந்த ரீ பாலில் 2 ரன் அடித்தார் ஜடேஜா. எனவே முதல் 4 பந்தில் 27 ரன்களை வழங்கிய ஹர்ஷல் படேல், கடைசி 2 பந்தில் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் கொடுக்க, மொத்தமாக அந்த ஓவரில் 37 ரன்களை (6, 6, 6, 6+(1)nb(2), 6, 4) வழங்கினார். அந்த வகையில், கெய்லின் சாதனை ஜடேஜாவால் சமன் செய்யப்பட்டபோதும், அது முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

5. ஐபிஎல்லில் பார்ட்னர்ஷிப்பின் அதிகபட்ச ரன்கள்

ஐபிஎல் சீசன் ஒன்றில் விராட் கோலி மற்றும் ஏ.பி.டி.வில்லியர்ஸ் இணை எடுத்த ரன்களே அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன் சாதனையாக உள்ளது.

விராட் கோலி, டி.வில்லியர்ஸ்
2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில், குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கிய பெங்களூரு அணியில் விராட் கோலி மற்றும் ஏ.பி.டி.வில்லியர்ஸ் இணை 2வது விக்கெட்டுக்கு அதிகபட்சமாக 229 ரன்கள் எடுத்தது. இது, ஐபிஎல் வரலாற்றில் இதுவரை முறியடிக்கப்படாத சாதனையாக உள்ளது.

இந்தப் போட்டியில் விராட் கோலி 55 பந்துகளில் 5 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் விளாசி 109 ரன்கள் எடுத்தார். டி.வில்லியர்ஸ் 52 பந்துகளில் 129 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆக, மேற்கண்ட 5 சாதனைகளும் இதுவரை நிகழ்த்தப்படாமல் உள்ளது. இதுதவிர, இன்னும் பல முறியடிக்கப்படாத சாதனைகளும் உள்ளன.