சிறப்புக் களம்

சிம்புட் பறவையென சிறகை விரித்த இந்த 6 மகளிருக்கும் புதிய தலைமுறையின் ‘சக்தி விருதுகள்’!

webteam

உண்மை உடனுக்குடன் என்ற கொள்கை முழக்கத்துடன், செய்திகளை உலகுக்கு உரக்க பறைசாற்றிக் கொண்டிருக்கும் நமது புதிய தலைமுறை தொலைக்காட்சி, சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் ’சக்தி’ என்ற பெயரில் சாதனை படைத்த பெண்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது.

தலைமை, புலமை, துணிவு, கருணை, திறமை, சாதனை ஆகிய 6 தலைப்புகளில் சிறந்து விளங்கும் பெண் ஆளுமைகளை தேர்வு செய்து சக்தி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சக்தி விருது பெற்றவர்கள் குறித்து இங்கு பார்ப்போம்...

வீணா குமாரவேல் (தலைமைக்கான சக்தி விருது)

ஆணுக்குப் பெண் இங்கே இளைப்பில்லை என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கு ஏற்ப அழகு நிலையம் அமைத்து தொழிலில் வெற்றிகண்டவர், வீணா குமாரவேல். `நேச்சுரல்ஸ்’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட அவரது அழகு நிலையம், இன்று 650க்கும் மேற்பட்ட இடங்களில் கிளைபரப்பி நிற்கிறது. தனது நிறுவனத்தை அழகுத்தொழிலின் அடையாளமாக மாற்றியமைக்க அவருடைய அர்ப்பணிப்புள்ள தலைமைப் பண்பே காரணம். அந்த வகையில், திருமிகு வீணா குமாரவேல் அவர்களுக்கு தலைமைக்கான சக்திவிருது வழங்கி பெருமிதம் கொண்டுள்ளது நமது புதிய தலைமுறை.

கல்பனா அரவிந்த் (புலமைக்கான சக்தி விருது)

செயற்கைக் கோளுக்கு இறக்கைகட்டி விண்வெளிக்கு செலுத்துவதில் வானளாவ புகழ்பெற்ற இஸ்ரோவில், ஒரு தனித்த தொழில்நுட்பத் தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார் அறிவியலாளர் கல்பனா அரவிந்த். சென்சார் என்ற உணரிப்பிரிவில் இளம் விஞ்ஞானியாக கால்பதித்த கல்பனா அரவிந்த், இன்று அந்த துறையில் முழுமையான அனுபவம் பெற்ற நிறை நிலாவென உலா வருகிறார். விண்வெளியில் செயற்கைக் கோள்களுக்கான தொட்டில் கட்டுவதற்கு உறுதுணையாக இருக்கும் திருமிகு கல்பனா அரவிந்த் அவர்களுக்கு புலமைக்கான சக்தி விருதினை வழங்கி பெருமிதம் கொண்டது நமது புதிய தலைமுறை.

மருத்துவர் ஜெயந்தி (துணிவுக்கான சக்தி விருது)

மூன்றாம் போராக கொரோனா முன்னெடுத்தபோது அதற்கு எதிராகக் குறு வாளெடுத்து களமாடியவர், மருத்துவர் ஜெயந்தி. தன் இன்னுயிர் பற்றி எள்முனையளவுகூட கவலைப்படாமல் முன்களத்தில் கட்டளைத் தளபதியாய் நின்று வீரமுடன் போராடியவர் மருத்துவர் ஜெயந்தி. ராஜீவ்காந்தி மற்றும் ஓமந்தூரார் என்று இரு பெரும் அரசு மருத்துவமனைகளில் முதல்வர் என்ற பதவியுடன் மனிதகுலம் காக்க அவர் எடுத்த தீர்க்கமான முடிவுகளைப் பார்த்து மருத்தவ உலகம் மலைத்து நின்றது. குடும்பத்தையும் மருத்துவத்தையும் இருகண்கள் போல காத்துவரும் மருத்துவர் ஜெயந்தி அவர்களுக்கு துணிவுக்கான சக்தி விருதினை வழங்கி பெருமிதம் கொண்டது நமது புதியதலைமுறை.

முனைவர் சுப்ரஜா தாரிணி (கருணைக்கான சக்தி விருது)

கடையேழு வள்ளல்கள், வள்ளலார் வரிசையில் கருணையின் தோகை விரித்து கடலுயிர் பேணிவருகிறார் முனைவர் சுப்ரஜா தாரிணி. கடல்சார் உயிரினங்களின் உணவுச்சங்கிலி அறுபட்டால், இந்த புவிசார் பூமி தாங்காது என்ற சூழலியல் சூத்திரத்தை மனதில் ஏற்றிய சுப்ரஜா தாரிணி, ஆலிவ் ரெட்லி ஆமைகளைக் காக்க ஆழிக்கரையெங்கும் வேலிகட்டினார். இன்றுவரை ஆழிக்கரையில் இவர் கட்டிய தூளியிலிருந்து துள்ளிப்பாய்ந்த சுமார் 31 லட்சம் ஆலிவ் ரெட்லி ஆமைகள் ஆழ்கடலில் இவரது தாய்மையின் சாட்சிகளாய் நீந்திக்கொண்டிருக்கின்றன. ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்ப’ என்ற கருத்துடன் கடமையாற்றிக் கொண்டிருக்கும் முனைவர் சுப்ரஜா தாரிணி அவர்களுக்கு கருணைக்கான சக்தி விருதினை வழங்கி பெருமிதம் கொண்டது நமது புதிய தலைமுறை.

சுபஜா (திறமைக்கான சக்தி விருது)

தந்தையையும் தாயையும் இழந்து, தன் கண்முன்னே தலைகீழாய் தொங்கிய வானத்தைக்கூட பார்த்து அதிர்ந்துவிடாமல், தனது திறமையின் மீது தீர்க்கமான நம்பிக்கை வைத்தவர் சுபஜா. அவருள் மூட்டிய தனல் பற்றியெறியத் தொடங்க, சக்கரக்கால்களின் சக்தியில் பதுங்கிக்கிடந்த திறமைகள் புதுவெள்ளமாய் பாய்ச்சல் எடுத்தன. அதன் விளைவு, கூடைப்பந்து மட்டுமின்றி தடகளத்திலும் தடம் பதிக்க ஓட்டம், ஈட்டி எறிதல் என்று ஆடுகளத்தில் பல அவதாரம் எடுத்தார். இழந்த வானத்தை மீளப்பெற்ற மகிழ்ச்சியில் சிம்புட் பறவையாய் சிறுகுவிரித்துப் பறந்துகொண்டிருக்கும் திருமிகு சுபஜாவுக்கு திறமைக்கான சக்தி விருதினை வழங்கி பெருமிதம் கொண்டது நமது புதியதலைமுறை.

எழுத்தாளர் சிவசங்கரி (சாதனைக்கான சக்தி விருது)

வாழ்க்கை அனுபவங்களை எழுத்துவழியில் தொடுத்து இலக்கிய வெளியில் கிடத்தும் எழுத்தாளர்களின் வரிசையில் புதுமைகள் செய்தவர் எழுத்தாளர் சிவசங்கரி. களத்தின் போக்கை நேரடியாக ஆய்வு செய்தபின்னரே தனது எழுதுகோலுக்கு வேலை கொடுக்கும் சிவசங்கரி, அத்தோடு நின்றுவிடாமல் போதையிலிருந்து விடுபட்டு மாற்றுப்பாதை அமைக்க உதவும் செயல்பாட்டாளராகவும் திகழ்ந்து வருகிறார். இலக்கியவீதியில் தொடரோட்டம் ஓடிக்கொண்டிருக்கும் திருமிகு சிவசங்கரி அவர்களுக்கு வாழ்நாள் சாதனைக்கான சக்தி விருதினை வழங்கி பெருமிதம் கொண்டது நமது புதிய தலைமுறை.

இவர்களுக்கு விருது அளித்த நிகழ்ச்சி, அதாவது ‘சக்தி விருதுகள் 2023’ மகளிர் தினத்தையொட்டி நாளை மாலை 5 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். தவறாமல் காணுங்கள்!