சிறப்புக் களம்

2017-ல் பெஸ்ட் திரைப்படங்கள் எவை?

2017-ல் பெஸ்ட் திரைப்படங்கள் எவை?

webteam

இந்த ஆண்டு தமிழ் சினிமா மீது பல தாக்குதல்கள். முதல் தாக்குதல்; ஜிஎஸ்டி வரி. இரண்டாவது தாக்குதல்; டிக்கெட் விலை ஏற்றம். மூன்றாவது தாக்குதல்தான் அதிர்ச்சித் தாக்குதல். அது என்ன என்கிறீர்களா? அதான் கத்துவட்டி. அதனால் ஒருவர் தற்கொலையே செய்து கொண்டார்.

மினி பட்ஜெட் படங்கள் எடுப்பதற்கு பணம் ஒரு பிரச்னை இல்லை. ஆனால் அதை திரைக்கு கொண்டு வந்து பெரிய முதலாளிகளோடு போட்டி போடுவதுதான் பெரிய பிரச்னை. படம் நன்றாக இருக்கிறது என்று தெரிந்த பிறகு மக்கள் தியேட்டருக்கு வருவதற்கு முன்பே அந்தப் படத்தை தூக்கி விடுகிறார்கள். அப்படி இருந்தும் இந்தாண்டு குறைந்த முதலீட்டுப் படங்கள் பல பேசப்பட்டுள்ளன. அதிக வசூலை வாரி குவித்துள்ளன. அதான் தற்போதையை தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் என சொல்லும் அளவுக்கு 2017 ஆம் ஆண்டு அமைந்திருந்தது. இந்த ஆண்டு முடிய இன்னும் ஒரு வாரமே மிச்சம். இந்நிலையில் நாம் கடந்து வந்த தமிழ் சினிமா ரேகையை உணர்ச்சி மாற்றாமல் கொஞ்சம் வருடினோம்.

ஆண்ட்ரியா

திரையிடுவதில் பிரச்னை; திரையிட்ட பிறகு எத்தனை நாள்கள் திரையிடுவது என்பது பிரச்னை என பல பிரச்னைகளுக்கு மத்தியில் வெளியானது தரமணி. உயர் வர்க்க வாழ்க்கையை பற்றி பலர் பேசியிருகிறார்கள். ஆனால் அதில் எல்லாம் பிரச்னை தெரிந்தது. ஆனால் வாழ்க்கை வெளிப்படவில்லை. அந்த வகையில் உயர் வர்க்க வாழ்க்கையை மிக அழகாக காட்டியிருந்தார் இயக்குநர் ராம். சுருங்கச் சொன்னால் சராசரி வாழ்க்கைக்குள் ஏற்படும் தனி மனித முரண்களை முன் வைத்த திரைப்படம். காலங்காலமாக உள்ள குடும்ப உறவுகளுக்குள் உலகமயமாக்கலின் பங்கு என்ன? அது செய்யும் வித்தை என்ன? விளைவுகள் என்ன? என வழி போட்டுக்காட்டியது தரமணி. உலகமயமாக்கல் மனித உறவுகளை எவ்வாறு சிதைவுக்குள் தள்ளுகிறது என விளக்க முயற்சித்த திரைப்படம் என்ற அளவில் முக்கியமான திரைப்படம். அதிகம் சம்பாதிக்கும் பெண். சோம்பேறியான ஆண். ஏற்கெனவே திருமணமான ஒரு மனைவி. அவளுக்கு ஒரு காதல் என கதை, கதையில் ஒரு கிளைக்கதை என பல்வேறு திருப்பங்களை கொடுத்திருந்தார் அதன் இயக்குநர் ராம். திரைக்கதையைபோலவே அவர் படத்தை வெளியிடுவதற்கும் இறுதிவரை முட்டி மோதி கொண்டிருந்தார். கதை தேர்வுக்கு தக்க ஆண்ட்ரியா நடிப்பில் அசத்தியிருந்தார். அழகிய நாயகி என்பதை கடந்து அவர் கதைக்கு தக்க கதாப்பாத்திரம் என வாழ்ந்திருந்தார். படம் வெளியாகி அதற்கான அங்கிகாரம் கிடைப்பதற்கு முன்பே திரையரங்கை விட்டு வெளியேறி போய் மறுபடியும் திரைக்கு வந்த திரைப்படம் என பல கோணங்களில் தரமணி இந்தாண்டு பல வித்தியாசங்களை நிகழ்த்திக் காட்டியது.

அதிதி பாலன்

‘அருவி’ இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் வெளியான திரைப்படம். இறுதியில் வெளியானால் என்ன? அறுதியிட்டு சொல்லக் கூடிய நல்ல படம். சமூக வலைதளங்களை வைரலாக்கிய அளவிலும் அதிகம் பேர் அதனை பாராட்டி குவித்த அளவிலும் ‘அருவி’ தனித்து தெரிந்திருக்கிறாள். இயல்பான கிராம வாழ்க்கை, திடீரென ஏற்படும் இடப்பெயர்வு, ஊடகத்துறையின் போலி முகம், பெண்கள் மீதான வன்முறை, மூன்றாம் பாலின மீதான அலட்சிய பார்வை என தமிழ்ச்சூலை விவாதத்திற்கு உட்படுத்திய அளவில் ‘அருவி’ தன் அசைக்க முடியாத இறுப்பை தக்க வைத்துள்ளது. எந்த அளவுக்கு சமூக ஊடகங்கள் இதனை கொண்டாடி தீர்த்ததோ அதே அளவுக்கு சில எதிர்ப்புகளையும் சம்பாத்திருக்கிறது. ‘அஸ்மா’ எனும் எகிப்திய படத்தோடு ‘அருவி’யை சேர்ந்து அசைபோட்டு சர்ச்சையிட்டவர்கள் அதிகம். ஆயிரம் விவாதத்தை எழுப்பினாலும் ‘அருவி’ இந்த ஆண்டில் தனித்துவமானவள். தவிக்க முடியாதவள். தமிழ் சினிமாவின் முதன் அறிமுகத்திலேயே அதிதி பாலன் அவரது முகத்தை அழுத்தமாக பதிய வைத்திருக்கிறார். கதாநாயன் இல்லை. தடாலடி காட்சிகள் இல்லை. வம்படியான வசனங்கள் இல்லை. தேவையற்ற கருத்து திணிப்புக்கள் இல்லை. இப்படி பல வகைகளில் ஈர்ப்பை எகிற வைத்திருக்கிறார் இதன் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன்.

வைபவ்

வழக்கமான காதல் திரைப்படம்தான் ‘மேயாதமான்’. அதுவும் ஒருதலை காதல். வெங்கட் பிரபுவின் ஃபேவரைட் ஹீரோ என்ற அளவில் மட்டுமே வைபவ்வை தமிழ் சினிமாவுக்கு தெரியும். ஆனால் அந்த அடையாளத்தை உடைத்து கொண்டு வந்து இவரை நிறுத்தியது ‘மேயாதமான்’. இவரின் தங்கையாக வந்த இந்துஜா மிக இயல்பாக ரசிகர்களை கவர்ந்திருந்தார். போதையில் புலம்புவது, ஷேக்ஸ்பியர் கவிதைகளை உளறுவது என தமிழ் சினிமா இதழ்ந்துவிட்டு தவிக்கும் ‘இதயம் முரளி’யை அப்படியே அசப்பில் கொண்டு வந்திருந்தார் வைபவ். நாலு நடிகர்களில் ஒருவர் என்ற அடையாளத்தை கடந்து தனித்த ஒரு நடிகனாக தன்னால் நடிக்க முடியும் என நிரூபித்துக் காட்டிய வகையில் வைபவ் இந்தாண்டின் முக்கிய முகம்.

(திரை நீளும்)