ராஜேந்திர சோழன் முகநூல்
சிறப்புக் களம்

தோல்வியறியா வீரன் ராஜேந்திர சோழன்! தந்தை ராஜராஜனை மிஞ்சிய தனயனானது ஏன்? மெய்சிலிர்க்கும் வரலாறு

பூமியை அளந்து பகுத்தல், ஆவணப்படுத்துதல், தொழில் வளர்த்தல், வரிமுறை, வாழ்க்கை முறை, நீர்மேலாண்மை, நில மேலாண்மை, நீதிமுறை, தானம் என முதலாம் ராஜேந்திர சோழனின் பெருமைகள் பலவற்றை பறைச்சாற்று பக்கங்களைப் இந்த தொகுப்பில் படிக்கலாம்.

பாமா

கங்கை கொண்டவனின் ஆயிரமாவது ஆண்டு

முதலாம் ராஜேந்திரசோழன் கங்கைகொண்டதன் ஆயிரமாவது ஆண்டு விழாவும், அவரின் பிறந்தநாளான ஆடிதிருவாதிரையும் ஒருசேர கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ராஜேந்திர சோழன் குறித்து அறியவும், தெரியவும், பிரமிக்கவும், பெருமைப்படவும் பல செய்திகள் இருக்கின்றன.

முதலாம் ராஜேந்திரசோழன்

பிற்காலச்சோழர்களில் ராஜராஜனும், ராஜேந்திரனும் வரலாற்றின் வாசலில் விட்டுச்சென்ற துளிகள், தமிழரின் பெருமைக்குச் சான்று. தமிழ்மண்ணின் மகத்தான மன்னர்களாக கோலோச்சிய தந்தையும், தனயனும் எண்ணிலடங்கா சாதனைகளுக்கும் சொந்தக்காரர்கள். பூமியை அளந்து பகுத்தல், ஆவணப்படுத்துதல், தொழில் வளர்த்தல், வரிமுறை, வாழ்க்கை முறை, நீர்மேலாண்மை, நில மேலாண்மை, நீதிமுறை, தானம் என பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம். இப்போது நாம் முதலாம் ராஜேந்திர சோழனின் பெருமையை பறைசாற்றும் பக்கங்களைப் புரட்டலாம்.

கடல்களை ஆண்ட பேரரசன்

வாணிபம் செய்யும் நோக்கில், ரோமிலிருந்தும், அரபு நாடுகளில் இருந்தும், சீனத்தில் இருந்தும், கிரேக்கத்தில்இருந்தும் கப்பல்கள் வந்து சென்ற வரலாறு கொண்டது தமிழ்மண்.

“ யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளம் கெழு முசிறி “

என்கிறது அகநானூற்று பாடல், அதாவது முசிறி என்ற சேரநாட்டுத் துறைமுகப்பட்டினத்தில் யவனர்களின் மரக்கலங்கள் பொன்னைக் கொண்டு வந்து கொட்டிவிட்டு அதற்கு பதிலாக மிளகு மூட்டைகளை ஏற்றிச் செல்கிறதாம். எனில் கப்பலும், வாணிபமும் புதிதல்ல.

ஆனால், இன்றளவுக்கு எந்த தொழில்நுட்பங்களும் பெரிய அளவில் இல்லாத காலகட்டத்தில், மாபெரும் கப்பல்களை உருவாக்கி, படைகளோடு கடல் கடந்து சென்று போர் செய்து புலிக்கொடி நாட்டியவர் பேரரசன் ராஜேந்திர சோழன். மாவீரர், கல்வியில் சிறந்தவர், கடல் கடந்த நாடுகளிலும் புலிக்கொடியை பறக்கவிட்ட தனித்துவத்துக்கு சொந்தமானவர் சோழப் பேரரசர் ராஜேந்திர சோழன்.

ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் எந்த திருவாதிரை?

எந்த சோழ மன்னரும் செய்யாத இச்செயலை செய்து காட்டி, தொட்டதெல்லாம் வெற்றி என்று வரலாற்றில் தனியிடம் பிடித்த ராஜேந்திர சோழன் பிறந்தது ஆடி திருவாதிரை. சிலகாலம், அவர் பிறந்தது மார்கழி திருவாதிரை என்ற கூற்று கூறப்பட்டு வந்தது. ஆனால்,  ஆடி மாதத்து ஆதிரை நாளில் பிறந்தவன் என்று ராஜேந்திரனின் வாய்மொழி ஆணையைக் குறிப்பிடும் திருவாரூர் கல்வெட்டு சாசனமும், மேல்பாடி கோயில் சாசனமும்,” நாம் பிறந்த ஆடி திருவாதிரை” என்று குறிப்பிடுவதால் ராஜேந்திர சோழன் பிறந்தது ஆடி திருவாதிரை என்று இறுதி செய்யப்பட்டது. ஆடிதிருவாதிரையில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா, ஆயிரம் ஆண்டுகளை கடந்த அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் என கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.

கங்கை கொண்ட சோழபுரம்

இந்நாளில் அக்காலத்தில் விழா கோலாகலங்களுடன் சோழ தேசம் களைகட்டியிருந்தது. பெரும் கப்பற்படை கொண்டு, கடல் கடந்தும் தமிழர் புகழ் ஓங்கச்செய்த ராஜேந்திர சோழன் பிறந்தநாளையொட்டி, ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்த ஆடி திருவாதிரையிலும், அவரின் தலைநகராக விளங்கிய கங்கை கொண்ட சோழபுரம் தலைநிமிர்ந்து நிற்கிறது. தந்தை ராஜராஜனுக்கு தஞ்சாவூர் பெரிய கோயில் எனில், மகன் ராஜேந்திர சோழனுக்கு கங்கை கொண்ட சோழபுரம், காலங்களைக் கடந்து பேர் சொல்லிக்கொண்டிருக்கிறது.

கங்கை கொண்ட சோழபுரம் எனும் பெருமை

தென்நாட்டை ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்த சோழ பேரரசர்கள், ராஜராஜ சோழனும், அவரது மகன் ராஜேந்திர சோழனுமே ஆவர். ராஜராஜன் இட்ட அடித்தளத்தை தனது பேராற்றலால் ராஜேந்திர சோழன் கட்டியெழுப்பினார், சோழ மன்னர்களில் அழகுக்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டப்படுவோரில் ராஜராஜ சோழனின் தந்தை சுந்தர சோழர் முதன்மையானவர். அவருக்குப் பிறகு அழகிற் சிறந்தவராக சொல்லப்பட்டவர் அவரது பேரனான ராஜேந்திர சோழன். கல்வி கேள்விகளில் சிறந்தவராக இருந்ததால் பண்டித சோழன் என்ற பெயர் பெற்றவர் ராஜேந்திர சோழன். இவரது இயற்பெயர் மதுராந்தகன். முடிகொண்ட சோழன், உத்தமசோழன், விக்கிரமசோழன் போன்றவையும் ராஜேந்திரசோழனின் விருதுபெயர்களாகும்.

கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஊரும், கோயிலும் ராஜேந்திர சோழனின் வெற்றிகளின் மேல் கட்டியெழுப்பப்பட்டவை. சோழர்களின் தலைநகரமாக தஞ்சை இருந்த நிலையில், அதனை மாற்றி கங்கை கொண்ட சோழபுரத்தை நிர்மாணித்தார் ராஜேந்திர சோழன். இந்த ஊர், 233 ஆண்டுகாலம் சோழர்களின் தலைநகரமாக இருந்தது.

தஞ்சை பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டில்,

"நாம் கொடுத்தனவும் நம் அக்கன் கொடுத்தனவும் நம் பெண்டுகள் கொடுத்தனவும் கொடுப்பார் கொடுத்தனவும்...இந்தக் கல்லிலே வெட்டியருளுக"

என்று ராஜராஜ சோழன் கட்டளை கல்வெட்டாக செதுக்கப்பட்டிருக்கும். இதன் மூலம், பெரிய கோயிலை கட்டியது ராஜராஜ சோழன் என்பது தெளிவாக தெரியவரும். ஆனால், கங்கை கொண்ட சோழபுரத்தை கட்டியது ராஜேந்திர சோழன்தான் என்பதற்கான கல்வெட்டு, அக்கோயிலில் வெட்டப்படவில்லை. எனில் இக்கோயிலை கட்டியது ராஜேந்திர சோழன்தான் என்பது தெரியவந்தவிதமே எதிர்பாராததுதான்.

ராஜேந்திர சோழனின் எசாலம் செப்பேடுகள்

விழுப்புரம் மாவட்டத்தில் எசாலம் என்ற ஊரில், 1987 ஆம் ஆண்டு கோயில் திருப்பணிக்காகப் பூமியைத் தோண்டியபோது செப்புச்சிலைகளுடன் முதலாம் இராசேந்திர சோழன் வெளியிட்ட செப்பேட்டுத் தொகுதி ஒன்றும் கிடைத்தது.

14 ஆம் நுற்றாண்டில் அந்நிய படையெடுப்புகளின்போது, இந்த ஐம்பொன் சிலைகளும், செப்பேடுகளும் கொள்ளையடிக்கப்படலாம், அழிக்கப்படலாம் என்ற அச்சத்தில் அவற்றை பாதுகாக்க, பள்ளம் தோண்டி, ஆற்றுமணல் பரப்பி, அதில் சிலைகள், செப்பேடுகளை வைத்து மக்கள் பாதுகாத்ததாக மூத்த தொல்லியல் அறிஞர் ச. கிருஷ்ணமூர்த்தி தெரிவிக்கிறார்.  எசாலத்தில், திருவிராமீசுவரம் என்றழைக்கப்படும் சிவன்கோயிலில் கண்டெடுக்கப்பட்டஇந்த செப்பேடு மூலமாகத்தான், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலை கட்டியெழுப்பியவர் ராஜேந்திர சோழன் என்பது தெரியவந்தது.

ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் உள்ள ராஜராஜ சதுர்வேதி மங்கலத்தில், எய்தார் என்ற இந்த ஊர் இருந்தது.  நன்னாடு மற்றும் ஏர்ப்பாக்கம் என்ற ஊர்களை ஒன்றாக்கி, விக்கிரமசோழநல்லூர் என்று பெயரிடப்பட்டு இந்த நிலத்தை இறையிலியாக, அதாவது தானமாக குருவுக்கு வழங்கியுள்ளார் ராஜேந்திரன். விக்கிரமசோழன் என்பதும் ராஜேந்திரனின் விருதுபெயர்களில் ஒன்றாகும்.

குருவுக்காக ஊரை தானம் செய்த ராஜேந்திர சோழன்

எசாலம் என்று இப்போது அழைக்கப்படும் இந்த ஊர், அக்காலத்தில் எய்தார் என்று அழைக்கப்பட்டுள்ளது. இங்கு ராஜேந்திர சோழனின் குருவான சர்வசிவபண்டிதர், திருவிராமீசுவரம் கோயிலை எழுப்பியுள்ளார். இந்த ஊருக்கு இருமுறை ராஜேந்திரன் நிலதானம் வழங்கியுள்ளதாக குறிப்பிடும்  தொல்லியல் அறிஞர் ச. கிருஷ்ணமூர்த்தி, ஒருமுறை பிரமணர்களுக்காகவும், ஒருமுறை தனது குரு கட்டிய கோயிலுக்காக   ஊரையே தானமாக அளித்துள்ளதாகவும் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார்  .

மூத்த தொல்லியல் அறிஞர் ச. கிருஷ்ணமூர்த்தி

வடமொழியில் உள்ள அந்த குறிப்பின்படி,

'"ராஜேந்த்ரோ வ்யதித ஸ கங்கை கோண்டசோலபுர்யாம் ஸத்குணநிதி அத்மனா க்ருதயாம்தந்நாமாவரபவனம் மஹேச்வரஸ்யபக்த்யா தத்பதயுக பாரிஜாத ப்ரிங்க "

என்று செப்பேட்டில் குறிப்பிட்டுள்ளது. நற்குணங்களின் தொகுதியான ராசேந்திரசோழன் தன்னால் நிர்மாணிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரத்தில் அதே பெயரில் சிவனுக்கு ஒரு கோயில் கட்டியதாகவும், இதன் மூலம், சிவபெருமானின் திருவடியாகிய பாரிஜாதத்தில் வண்டாகத் திகழ்ந்ததாகவும் செப்பேட்டில் எழுதப்பட்டுள்ளது.

எசாலம் செப்பேடு பதினைந்து இதழ்களுடன் செப்பு வளையம் கோர்க்கப்பட்ட நிலையில் உள்ளது. வளையத்தில் சோழ முத்திரையும் உள்ளது. இந்த செப்பேடு மிகப்பெரிய திருப்பமாக கருதப்படுகிறது.

தந்தையை மிஞ்சிய தனயன்

ராஜேந்திர சோழனைப் பொறுத்தவரை, தந்தையை மிஞ்சிய தனயனாகவே பார்க்கப்படுகிறார். தந்தை ராஜராஜசோழன் மன்னராக முடிசூடிக்கொண்டபோது, 16 வயது இளங்காளையாக இருந்தவர் ராஜேந்திரன். தந்தை கட்டியாண்ட சோழ மண்ணை, தனது பலத்தால் பெருக்கி, வலுப்படுத்திய மாவீரர்.

ராஜராஜசோழன்

தனது 20 வயதில் இளவரசனாக பதவியேற்ற ராஜேந்திர சோழன், மன்னர் ராஜராஜசோழனுக்கு கட்டுப்படாமல் இருந்த பாண்டியர், சேரர்களை வென்று அவர்களை அடங்கியிருக்கச் செய்தார். ராஜேந்திர சோழன், கி.பி.1012 ஆம் ஆண்டு, முடி சூட்டப்பட்டு பேரரசனானார்.

ராஜேந்திர சோழன்

இவரது ஆட்சிக்காலம் கி.பி.1012 முதல் கி.பி. 1044 வரை நீண்டது. ராஜேந்திர சோழனின் அந்திமக்காலமான 1044 ஆம்ஆண்டுகாலம் பற்றிய குறிப்புகள் திருவிந்தளூர் செப்பேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தொல்லியல்அறிஞர் கிருஷ்ணமூர்த்தி தெரிவிக்கிறார். கரந்தை செப்பேடுகள், திருவாலங்காட்டு செப்பேடுகள், திருஇந்தளூர் செப்பேடுகள் மற்றும் எசாலம் செப்பேடுகள் ராஜேந்திர சோழன் ஆட்சிகாலத்தின் முக்கிய செப்பேடுகளாக இருக்கின்றன என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

கிருஷ்ண மூர்த்தி

கிழக்குதிசை நாடுகளில் கோலோச்சிய ராஜேந்திர சோழன்

"திருமன்னி வளர இருநில மடந்தையும்போற்சயப் பாவையுஞ் சீர்த்தனிச் செல்வியுஞ்தன்பெருந் தேவிய ராகி இன்புற"

இப்படித் தொடங்குகிறது பேரரசன் ராஜேந்திர சோழனின் மெய்க்கீர்த்தி. தனது காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை உள்ளிட்ட போர்ப்படைகளால், தென்நாட்டை ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்தவர். நாட்டின் வடபகுதிகளை மட்டுமின்றி கடல் கடந்து கிழக்குத்திசை நாடுகளையும் வென்றவர். வடக்கே கங்கை கரை வரையிலும், தெற்கே இலங்கை முழுவதும், மேற்கே மேலைக்கடற்கரை முதல் கிழக்கே மலேயா, சிங்கப்பூர், இப்போதைய மியான்மர், சுமத்ரா, ஜாவா நிக்கோபார் முதலிய நாடுகளை வெற்றிகொண்டு, சோழரின் புலிக்கொடியை பறக்கவிட்ட பேரரசன் ராஜேந்திர சோழன். இதனால்தான் கங்கை கொண்டான், கடாரம் கொண்டான் உள்ளிட்ட விருதுபெயர்கள் இவருக்கு வழங்கப் பெறுகின்றன. ராஜேந்திர சோழனைப்போல கப்பல்படையை  கொண்டிருந்தவர் யாருமில்லை என்கிறார் மூத்த தொல்லியல் அறிஞர் ர. பூங்குன்றன். இந்த கடற்படையை போர்தொடுத்து நாடுகளை கைப்பற்றும் ஆசையில் அல்லாமல், பெரும்பாலும், வணிகர்களை காக்கவும், வாணிபம் தடையின்றி செழிக்கவுமே ராஜேந்திர சோழன் மேற்கொண்டதாக பூங்குன்றன் தெரிவிக்கிறார்.

மூத்த தொல்லியல் அறிஞர் ர. பூங்குன்றன்

தோல்வியறியா வீரனின் வெற்றி முழக்கம்

போர்திறன் மட்டுமல்ல, படையெடுத்து சென்ற ஒவ்வொரு போரிலும் வெற்றி மட்டுமே பெற்ற மாவீரர் ராஜேந்திர சோழன். தோல்வியறியா இந்த வீரன் கல்வியிலும், பக்தியிலும் சிறந்தவராக இருந்திருக்கிறார். எந்த சோழ மன்னரிடமும் இல்லாத அளவுக்கு கடற்படையைக் கொண்டவர், இன்று போல நவீன தொழில்நுட்பங்கள் இல்லாத அந்த காலகட்டத்தில் மாபெரும் கப்பற்படையை உருவாக்கி, மிகச்சிறந்த போர் பயிற்சி கொண்ட வீரர்களுடன் கடல் கடந்து சென்று கொடி நாட்டிய ராஜேந்திர சோழன், தனதுதந்தையைப்போலவே, வரலாற்றின் பக்கங்களின் நிலைத்த புகழுக்குரியவராக இருக்கிறார். ஒவ்வொரு நாட்டையும் வென்று திரும்பும்போதெல்லாம் வெற்றியின் நினைவாக ராஜேந்திர சோழன் பல சிலைகளை இங்கு கொண்டுவந்துள்ளார்.  குறிப்பாக கங்கைக்கரை போரை வெற்றிகொண்டதன் நினைவாக, மகிஷாசுரமர்த்தினி சிலை, நுளம்பப் போர் வெற்றியின் நினைவாக, கணக்க விநாயகர் சிலை என சிலைகள் கங்கைகொண்ட சோழபுரத்திலும், பிற கோயில்களிலும் இடம்பெற்றுள்ளன. இவற்றில், மகிஷாசுரமர்த்தினியின் சிலைஅதி அற்புத கலைப்படைப்பாக காட்சியளிக்கிறது.

வெற்றிபெற்ற நாடுகளை ஒட்டுமொத்தமாக அழித்து தங்கள் ஆளுகையின் கீழ் கொண்டுவரும் போக்கும் சோழர்களிடத்தில் இல்லை. குறிப்பாக, கடல்கடந்து வெற்றிபெற்ற போதும், அங்கு, தங்கள் ஆட்சியை ஏற்றுக்கொள்ளும் உள்நாட்டு மன்னர்களையோ, தங்கள் தளபதிகளையோ ஆட்சியில் அமர்த்தும் போக்கையே ராஜேந்திர சோழன் கடைபிடித்துள்ளார். நாடு பிடிக்கும் ஆசையைவிட, வாணிபம் தடையற நடக்கவும், வாணிபம் செய்வோருக்கு எந்த சிக்கலும், பிரச்னையும் ஏற்படாமல் இருக்கவுமே பெரும்பாலும் கடல்கடந்த போர்களை மேற்கொண்டார் ராஜேந்திரன். 

வெற்றியை நீரால் நிரப்பிய ராஜேந்திர சோழன்

தஞ்சையைப் போல கங்கை கொண்ட சோழபுரம் நீர்வளம் மிக்கதல்ல. இங்கு சோழகங்கம் என்ற பெரிய ஏரியை உருவாக்கிய ராஜேந்திர சோழன், அங்கும் நீர்மேலாண்மையை சிறப்புறச் செய்தார். இந்த சோழகங்கம் என்ற ஏரி இப்போதிருப்பதை விட குறைந்தபட்சம் இருமடங்கு பெரியதாகவும் கடல்போல காட்சியளித்ததாகவும் கருதப்படுகிறது. இந்த சோழகங்கம் ஏரி, ஒரு வெற்றியின் நினைவாக எழுப்பப்பட்ட நீர்த் தூண் என்று சுட்டப்படுகிறது. வடக்கில் வெற்றி பெற்று திரும்பும்போது தோல்வியுற்ற மன்னர்களின் தலைமேல், கங்கை நீர் நிரம்பிய பொற்குடங்களை ஏந்திவரச்செய்து, அந்த தண்ணீர் இந்த சோழகங்கத்தில் நிரப்பப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

தனது அரண்மனையை 1200 ஏக்கரில்உருவாக்கிய ராஜேந்திரன், அந்த அரண்மனையில், நீர் வரத்து வாய்க்கால்களும், அந்த அரண்மனையைச் சுற்றி உள்ள உட்கோட்டை பகுதியிலும் எந்த நேரமும் தண்ணீர் இருக்கும் வகையில்,  அகழிகளை உருவாக்கியதோடு,  அங்குள்ள அ னைத்து நீர்நிலைகளும் சிறுசிறு குளங்களாக வெட்டப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 

 நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்த சோழர்கள், குறைந்த அளவு தண்ணீரைக்  கொண்டு பாசனம் செய்யும் முறைகளையும் கடைபிடித்ததாக கூறுகிறார் தொல்லியல் ஆய்வாளர், முனைவர் ர. பூங்குன்றன். சோழகங்கத்திற்கு இரு ஆறுகளில் இருந்து நீர்வரத்து கால்வாய்களை வெட்டியதோடு, இந்த ஏரி நிரம்பினால் அடுத்தடுத்த ஏரிகளில் அந்த தண்ணீர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டதாக பூங்குன்றன் தெரிவிக்கிறார்.

காணக்கிடைக்காத அற்புத கலைப்படைப்பு

சோழர் கட்டடக்கலைக்குச் சான்றாகவும், அற்புதமான சிற்பக்கலைக்கு உதாரணமாகவும் விளங்கும் கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் ஒவ்வொரு பகுதியும் காணக்கிடைக்காத அற்புத காட்சியாகவே நம் கண்முன் விரியும். 1855 ம் ஆண்டு தென்னிந்திய கெசட்டில் குறிப்பிட்டுள்ள வரியை இங்கே பார்க்கலாம், கங்கை கொண்ட சோழபுரம், பழங்கால பாபிலோனை ஒத்தது என்கிறார் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி 1832 ல், கொள்ளிடம் அணைக்கட்டு கட்டப்பட்டபோது, இக்கோயிலின் உட்சுற்று பிரகார கற்கள், வெளிச்சுற்று கற்கள் உடைக்கப்பட்டு, அணைக்கட்டு கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்டன. இத்தனைக்கும் பிறகும் கட்டடக்கலையின் அற்புதமாக கம்பீரமாக நிற்கிறது கங்கைகொண்ட சோழபுரம். விமானம் 100 அடி சதுரமான வடிவிலானது. ஒன்பது அடுக்குகளைக் கொண்டது. முதல் இரண்டு அடுக்குகள் ஒன்றன் பின்ஒன்றாக இருக்கின்றன. அடுத்து வரும் அடுக்குகள் மேலே செல்ல சிறுத்துவரும். விமானத்தின் உயரம் 170 அடியாக இருக்கிறது.

கங்கை கொண்ட சோழபுரத்தில் அதிட்டானப்பகுதி சதுரமானதாகவும், மேலே செல்ல குறுகியும், சிவலிங்க வடிவில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறும், நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் முருகன், இங்குள்ள சிற்பங்களின் அழகு மிகவும் நேர்த்தியானது என்கிறார். அதேபோல, இங்குள்ள நந்திக்கு பிரதோஷ நாட்களில் மட்டுமின்றி பிற நாட்களிலும் அபிஷேகம் கிடையாது. காரணம், இந்த நந்தி ஒரு சுதைச் சிற்பம் என்று குறிப்பிடும் பேராசிரியர் முருகன், சிம்மக்கிணறு பிற்காலத்தில் எழுப்பப்பட்டதாக தெரிவிக்கிறார்.

நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் முருகன்

இங்கு சண்டேஸ்வரருக்கு சிவபெருமான்உமையுடன் இருந்து முடிசூட்டும் காட்சி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தை ராஜேந்திர சோழன் என தவறாக கருதுவோர் உண்டு. ஆனால், கோயிலில் சிறிய வடிவில் கஜலட்சுமி சிலையின் மேல்பகுதியில், சிவலிங்கத்தை தொழும் வகையில், ராஜேந்திர சோழனின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. தலையில் கொண்டையோடு, எளிய தோற்றத்தில் வழிபடும் ராஜேந்திரசோழனின் திருஉருவம், அவரது பக்திக்குச் சான்றாக இருக்கிறது.

தமிழ் மண்ணின் பெருமைமிக்க பேரரசன்

தமிழர் வரலாற்றில் காலங்களை கடந்தும், பேரிடர்களைக் கடந்து தனித்துவத்துடன் நிற்கும் பெருமை மிகு சின்னங்களாக தஞ்சை பெரியகோயிலும், கங்கைகொண்ட சோழபுரம் கோயிலும் நிலைத்திருக்கின்றன.

தஞ்சை பெரியகோயிலும், கங்கைகொண்ட சோழபுரம்

இதனால்தான் இவ்விரு கோயில்களையும் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களாக அறிவித்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் அழிவிலா புகழொடு உலகம் முழுவதும் தமிழர் பெருமையை சிறப்புறக் கூறிக் கொண்டிருக்கின்றன. இவ்விரு கோயில்களும், காலத்தால் அழியாத  கலைப்படைப்பாகவும், ராஜராஜன், ராஜேந்திர சோழனின் ஆட்சி சிறப்பையும் நாட்டை செங்கோல் பிறழாமல் ஆட்சி செய்த முறையையும், காலம் முழுவதும்  பறைசாற்றும்..