மதகில் நடப்பட்ட வரலாற்று ஆதாரம்
மதகில் நடப்பட்ட வரலாற்று ஆதாரம் PT
சிறப்புக் களம்

ஹைதராபாத் அருகே கண்டுபிடிக்கப்பட்ட 1,000 ஆண்டுகள் பழமையான ஜெயின் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள்!

Jayashree A

ஹைதராபாத் அருகே 1,000 ஆண்டுகள் பழமையான ஜெயின் தளமானது கண்டுபிடிக்கப்பட்டது

ஹைதராபாத் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள எனிகேபள்ளி என்ற கிராமத்தில் தொட்டியின் மதகுகளில் இருந்த இரண்டு சதுர தூண்களை ஆராய்சி செய்ததில், அதில் ஒரு தூணில் நான்கு சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்களும் மற்றொரு தூணில் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்படி இக்கிராமத்தின் அருகில் ஒரு சமண மடம் இருந்ததைக் காட்டுகிறது என்கிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்களான சிவநாகி ரெட்டி, மற்றும் ஸ்ரீநாத் ரெட்டி ஆகியோர்.

கண்டுபிடிக்கப்பட்ட இவ்விரு தூண்களும் சுமார் 9-10 நூற்றாண்டை சேர்ந்தது எனவும், இதில் ஒரு தூணில் ஆதிநாதர், நேமிநாதர், பார்ஸ்வநாதர் மற்றும் வர்த்தமான மகாவீரர் ஆகியோரின் உருவங்கள் தியானத்தில் அமர்ந்துள்ளது போன்று பொறிக்கப்பட்டுள்ளது என்றும் மற்றொரு தூணில் கல்வெட்டுகள் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதில் ஒரு தூணானது கிரானைட்டால் செய்யப்பட்டதாகவும் மற்றொரு தூண் கருப்பு பசால்ட் வகையை சார்ந்ததெனவும் கூறுகின்றனர். கல்வெட்டுகளில் தெலுங்கு மற்றும் கன்னட எழுத்துகள் காணப்படுவதாக கூறுகிறார்கள்.

இவ்வெழுத்துக்களை தெளிவாக புரிந்துக்கொள்ள இயலவில்லை என்றாலும், இக்கல்வெட்டில் காணப்பட்ட எழுத்துக்கள் சிலுக்குரு கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள ஜானினா பசதி என்ற மடத்தை குறிக்கின்றது என்கிறார்கள். இம்மடம் ராஸ்ட்ரகூட மற்றும் வெமுலவாடா சாளுக்கியர் காலத்தில் அதாவது கி.பி.9-10ம் நூற்றாண்டுகளில் முக்கியமான ஜைன மடமாக திகழ்திருக்கலாம் என்றும் ஆராய்சியாளர்கள் கூறுகிறார்கள்.

கண்டுபிடிக்கப்பட்ட தூணை பற்றி சிவனாகி ரெட்டி கூறுகையில், “ஜைன தீர்த்தங்கரர் சிலைகள் தாங்கிய தூணானது 100 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளூர் பாழடைந்த ஜெயின் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்டு மதகில் பொருத்தப்பட்டிருக்கலாம்.” என்கிறார்.

இருப்பினும் சமண சிற்பத் தூண்கள் மற்றும் கல்வெட்டுகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, கிராம மக்கள் அவற்றை பாதுகாக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாதாத்ரி மாவட்டத்தில் உள்ள கொளனுபாகா கிராமத்தில் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான புகழ்பெற்ற ஜெயின் ஆலயம் உள்ளது என்பது கூடுதல் தகவல்.