சிறப்புக் களம்

ஆரோக்கியத்தை கெடுக்கும் 10 பழக்க வழக்கங்கள் - இவற்றை மாற்ற ட்ரை பண்ணுங்க!

Sinekadhara

நிறையப்பேர் காலை எழுந்தவுடன் உணவை மறந்து வேலைக்கு பறந்துவிடுவர். காலை உணவு மிகவும் அவசியம் என பலமுறை கேட்டிருந்தாலும் அதில் கவனம் செலுத்த முடிவதில்லை. ஒருநாளைக்கு 5-6 வேளைக்கு உணவை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லது. குறிப்பாக புரதச்சத்துமிக்க காலை உணவு மிகமிக அவசியம்.

காபி திக்காக இருக்க சிறிது காபி சிரப் அல்லது வைப்டு க்ரீமை சேர்த்து அருந்தும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. சுவைக்காக காபியில் எதை சேர்த்தாலும் அது கலோரிகளின் அளவை அதிகரிக்கும். அதேபோல் அளவுக்கதிகமாக காபி அருந்தவேண்டாம். அதற்குபதிலாக நிறைய தண்ணீர் குடிக்கவும்.

மதிய உணவு இடைவேளையில் அவசரம் அவசரமாக சாப்பிடுவதை பலரும் பழக்கமாக கொண்டிருப்பர். ஆனால் உணவை அப்படியே விழுங்காமல் நன்கு சுவைத்து மென்று சாப்பிடுவதே சிறந்தது.

ஸ்டைலாக காட்டிக்கொள்ள விதவிதமாக ஷூக்கள் மற்றும் செருப்புகள் அணிவதை சிலர் வழக்கமாக கொண்டிருப்பர். குறிப்பாக பெண்களுக்கு இந்த பழக்கம் இருக்கும். கால்களுக்கு பொருந்தாத ஷூக்களை பயன்படுத்தும்போது வலி ஏற்படுவது மட்டுமல்லாமல் உடல்வாகையே மாற்றிவிடும் என்பதை மறக்கவேண்டாம்.

இரவு நேரத்தில் பல் துலக்கும் பழக்கம் நம்மில் எத்தனை பேரிடம் இருக்கிறது? இரவில் உணவு சாப்பிட்டுவிட்டு பல் துலக்காமல் அப்படியே படுக்கைக்கு செல்லுவது வாய் ஆரோக்கியத்தை கெடுத்துவிடும். அதேபோல் 3- 4 மாதங்களுக்கு ஒருமுறை டூத் பிரஷ்ஷை மாற்றிவிடவேண்டும்.

போதிய தூக்கமின்மை உடல் எடை அதிகரிக்க வழிவகுத்துவிடும். இரவில் சரியாக உறங்காவிட்டால் உடலின் வளர்சிதை மாற்றத்தில் மாறுதல்களை ஏற்படுத்தி அதிக உணவு உண்ணுதல் மற்றும் உடற்பருமனுக்கு வழிவகுத்துவிடும். மேலும் உடல் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இளைஞர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் விடுமுறை நாட்களில் அதிக நேரம் தூங்குவதை தவிர்க்கவேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் body building-இல் இளைஞர்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர். ஆனால் கார்டியோ பயிற்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஓடுதல், குதித்தல் தொடர்புடைய பயிற்சிகளையும் மேற்கொள்வது அவசியம்.

Streching பயிற்சிகள் செய்வது முதுகுவலியை குறைக்கும். ஆனால் காலை தூங்கி எழுந்தவுடன் படுக்கையிலேயே செய்யக்கூடாது. பல் துலக்கி, முகம் கழுவி காபி குடித்துவிட்டு பிறகு இந்த பயிற்சியை செய்வதே நல்ல பலனை தரும்.

சிறுநீரை அடக்கிவைப்பது பல்வேறு தீங்குகளுக்கு வழிவகுக்கும். இது சிறுநீர்ப்பாதையில் தொற்றுக்களை உருவாக்கும். மேலும் காபி, ஆல்கஹால், காரமான உணவுகள், காற்றடைக்கப்பட்ட பானங்கள், சாக்லேட் மற்றும் டீ போன்ற சிறுநீரக பாதையில் எரிச்சலை உண்டுபண்ணும் உணவுகளை குறைந்த அளவு எடுத்துக்கொள்ளலாம் அல்லது தவிர்த்துவிடலாம்.

லேப்டாப் மற்றும் ஹேண்ட் பேக்குகளை ஒரே தோளில் மாட்டிச்செல்வது தோள்ப்பட்டை வலிக்கு வழிவகுத்துவிடும். எனவே தினமும் தோள் மற்றும் கைகள் என மாற்றிமாற்றி கொண்டுசெல்வது நல்லது.