சிறப்புக் களம்

வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்

Veeramani

தமிழக அரசு அதிரடியாக நிறைவேற்றிய, வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா என்பது சாத்தியமா? சட்டசிக்கல்கள் உள்ளதா என்பது பற்றிய விரிவான தொகுப்பு.

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு தொகுப்பில் இருந்து, வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடும், சீர்மரபினருக்கு 7% உள்ஒதுக்கீடும் மற்ற சமூகங்களுக்கு 2.5% ஒதுக்கீடும் வழங்கும் சட்டமசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 41 சாதிகளும், சீர்மரபினர் பட்டியலில் 109 சாதிகளும் உள்ளன.

அரசு கல்வி வேலை வாய்ப்பில், வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக தொடர் போராட்டங்களை நடத்தி வந்தது. வன்னியர்களின் தனி இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றும் அரசியல் கட்சிகளுடன்தான் வருகிற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கப்படும் என்று பாமகவும் அறிவித்திருந்தது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு முன்னதாக, நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளில்,அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்  இடஒதுக்கீடு தொகுப்பு  20 சதவீதத்தை 3 ஆக பிரித்து, வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடும், சீர்மரபினருக்கு 7 சதவீதமும் எஞ்சியவர்களுக்கு 2.5% உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

வன்னியர்களுக்கு 10.5 % உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதன் காரணத்தை விவரிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் பா.ஏகலைவன், “வன்னியர் இட ஒதுக்கீடு என்பது நிச்சயமாக வரவேற்கத்தக்கதுதான், இதற்காக பாமக உள்ளிட்ட பலரும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வந்தனர், 21 பேர் உயிர்த்தியாகம் செய்தனர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலிருந்தே அரசுப்பணிகளில் விகிதாச்சாரமுறையில் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. நீதிக்கட்சி மற்றும் திராவிடக்கட்சிகளின் அடிப்படை முழக்கமே 3 சதவீத பிராமணர்கள் 90 சதவீத அரசுப்பணிகளில் உள்ளனர் என்று சொல்லி மற்ற சாதிகளுக்கு விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு கேட்டு கோரிக்கை வைத்தனர், அதுவே அவர்களின் அடிப்படை அரசியல் முழக்கமாகவும் இருந்தது.

அதன்பின்னர் வெளியான சட்டநாதன் கமிஷன் அறிக்கையில், எந்தெந்த சாதிகளுக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வரையறை செய்தது, அதனை கலைஞர் நடைமுறைக்கு கொண்டுவரவில்லை, அதன்பிறகு எந்த சமூகமும் இது தொடர்பாக கோரிக்கையும் வைக்கவில்லை. ஆனால் அட்டவணை பட்டியலின மக்களுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்திலே அந்தந்த மாநில மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் தமிழகத்தில் 18 சதவீத இட ஒதுக்கீடு பட்டியலின சமூகங்களுக்கு வழங்கப்படுகிறது.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சமூகங்களில் பல சமூகங்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பின் தங்கியுள்ளனர், அதனால் அந்த சாதிகள் தங்களுக்கு விகிதாச்சார இடஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வைத்து வருகிறார்கள். அதுபோலவே மிகவும் பிற்படுத்தபட்டோரில், வன்னியர் சமூகம் அதிக மக்கள்தொகையை கொண்டிருந்தாலும், அவர்களில் கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள். அதனால்தான் 1980களில் இருந்து வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் போராடி வருகிறார், எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில் இந்த கோரிக்கைக்காக 21 பேர் உயிர்த்தியாகம் செய்தனர்.

அதன்பின்னர் இந்த கோரிக்கையை ஏற்றுதான் 1989இல் கலைஞர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினருக்கு 20% ஒதுக்கீடு வழங்கினார். அப்போது ராமதாஸ் கலைஞருக்கு பாராட்டுவிழா நடத்தினாலும், தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி, வன்னியர்களுக்கு விகிதாச்சாரத்துக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கவேண்டும் எனவும் தொடர்ந்து குரலெழுப்பி வந்தார், அதற்கு தற்போது வெற்றி கிடைத்திருக்கிறது” என்கிறார்.

தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த இடஒதுக்கீட்டில் ஏதேனும் சட்டசிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதா?

இந்த இடஒதுக்கீட்டில் எந்த சட்டசிக்கலும் இல்லை. தேர்தலுக்காக அறிவிக்கப்பட்டிருந்தாலும், இது வன்னியர் சமூக மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கை. இரண்டு கமிஷன்களின் அடிப்படையில்தான் இப்போது 10.5% இட ஒதுக்கீடு தற்காலிகமாக வழங்கப்பட்டிருக்கிறது. சாதிவாரியாக ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டிருக்கிறது, அந்த அறிக்கை வந்தபின்னர் 6 மாதத்துக்குள் அந்த விகிதாச்சாரத்துக்கு ஏற்ப வன்னிர்களுக்கான இடஒதுக்கீடு மாற்றியமைக்கப்பட்டு நிரந்தரமாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒருவேளை வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், இந்த இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பு உருவாகுமா?

அதற்கான வாய்ப்பும் இல்லை, ஒருவேளை திமுக ஆட்சியே வந்தாலும், வட தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர் சமூக மக்களின் கோரிக்கையை புறக்கணிக்கவே முடியாது.  அதனால் சட்டரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ இந்த இட ஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

வன்னியருக்கான இட ஒதுக்கீடு போலவே மற்ற சமூகங்களும் தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என கேட்கிறார்களே?

அது நியாயமான கோரிக்கைதான். ஒவ்வொரு சாதிக்கும், அதன் விகிதாச்சாரத்துக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்குவதுதான் சமூகநீதி. இவ்வாறு அவரவர் எண்ணிக்கைக்கேற்ப இட ஒதுக்கீடு வழங்குவதால் எந்த சாதியும் பாதிக்கப்பட போவதில்லை, மாறாக அனைவருக்கும் சமமாக உரிமைகள் கிடைக்கும்.

தேர்தல் நேரத்தில் இது அரசியலுக்காகவே செய்யப்பட்டதாக சொல்கிறார்களே?

இது வழக்கமான ஒன்றுதான், ஏற்கனவே கலைஞர் பட்டியல் சாதிகளுக்குள், அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள் இட ஒதுக்கீட்டினை வழங்கியிருக்கிறார். அதுபோலவே இப்போது இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

பிறமாநிலங்களை சேர்ந்த சாதிகள், தமிழகத்தில் அதிக அளவில் இட ஒதுக்கீடு பெறுவதாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே?

ஆம், இதுதான் முக்கியமான பிரச்சினை. இப்போது தமிழகத்தில் உள்ள இடஒதுக்கீட்டில் அதிக அளவில் பயன்பெறுவது பிறமாநிலங்களை சேர்ந்த சாதியினர்தான், இதனால் தமிழர்களின் வேலைவாய்ப்பு பெரிய அளவில் பறிபோகிறது. ஆனால் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தமிழகத்தை சேர்ந்த பட்டியலின,மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு இங்கு வழங்கப்படுவதுபோல உரிய இடஒதுக்கீடு கொடுப்பதில்லை. அதனால் தமிழகத்தில் தமிழ் சாதிகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கவேண்டும். மற்ற மாநிலங்களை சேர்ந்த சாதிகளுக்கு, அவர்கள் மாநிலத்தில் தமிழ் சாதிகளுக்கு எவ்வாறு இட ஒதுக்கீடு வழங்குகிறார்களோ அதுபோலவே வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வலுவடைந்து வருகிறது.