சிறப்புக் களம்

“எல்லா சமூகத்திலும் எல்லா நிறமான பெண்கள் இருக்கிறார்கள்” – நடிகை ரித்விகா பேட்டி!

“எல்லா சமூகத்திலும் எல்லா நிறமான பெண்கள் இருக்கிறார்கள்” – நடிகை ரித்விகா பேட்டி!

sharpana

நடிகை ரித்விகாவை சமூக வலைதளத்தில் சாதிய வன்மத்துடன் கமெண்ட் அடித்த நபருக்கு, ரித்விகா கொடுத்த பதிலடிதான் சமீபத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது. மறுபுறம், அதற்கு பதில் அளித்துதான், தன்னை யார் என்று காண்பித்துக் கொள்ளவேண்டுமா? என்ற விமர்சனமும் எழும்பியிருக்கிறது. விஜய் சேதுபதியின் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’,  அமலா பாலின் ‘கடவர்’ படங்களில் நடித்து முடித்து ரிலீஸுக்காக காத்துக்கொண்டிருக்கும் ரித்விகாவிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்து பேசினோம்,   

இன்ஸ்டாகிராமில் உங்களைக் குறித்து  அப்படியொரு கமெண்ட்டை பார்த்ததும் என்ன தோன்றியது?

அந்த நபருக்கு எப்படியாவது ரிப்ளை பண்ணவேண்டும் என்று நினைத்தேன். இந்த ஒருநபர் மட்டுமல்ல. இப்படி பலபேர் பலமுறை சொல்லியுள்ளார்கள். இப்படியும் ஒரு பிரச்சனை இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தவே ட்விட்டரில் விளக்கம் கொடுத்தேன்.

அதற்காக, ’நான் பட்டியலினப் பெண் இல்லை’ என்று சொல்லித்தான் தெரியப்படுத்த வேண்டுமா?

’நீங்கள் பட்டியலினப் பெண் இல்லை என்பதைக் காட்டத்தானே, அப்படியொரு ட்வீட் போட்டீங்க’ன்னு நிறையபேர் பார்த்துட்டுக்  கேட்டாங்க. நிச்சயமாக இல்லை. ஒருசில விஷயங்களை தெளிவுப்படுத்தவே, அந்தப் பதிவை செய்தேன். கருப்பாக இருப்பவர்கள் எல்லோரும் பட்டியலினத்தவர்கள் என்று  பெரும்பான்மையானோர் முடிவு செய்துவிடுகிறார்கள். உண்மையில் அப்படியெல்லாம் கிடையாது. எல்லா சமூகத்திலும் எல்லா நிறமான பெண்கள் இருக்கிறார்கள். குறிப்பிட்டப் சமூகப் பெண்களை மட்டும் இப்படித்தான் இருப்பார்கள் என்ற அடக்குமுறை எங்கிருந்து வருகிறது? ஆதிக்க சமூகத்திலிருக்கும் ஆண்கள், இதுபோன்ற அடக்குமுறைகளைச் செய்கிறார்கள் என்பதாலேயே ட்வீட் செய்தேன். மற்றபடி நானாக வந்து செய்யவில்லையே?

அப்படி பேசிய நபர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கலாமே?

நான் எதற்கு புகார் அளிக்கவேண்டும்? அதெல்லாம் தேவையில்லை. அந்தளவுக்கு எதுக்கு இப்பிரச்சனையை எடுத்துக்கிட்டுப் போகணும்?

பிக்பாஸ் போட்டியாளர் வனிதா விஜயகுமார் பிரச்சனையை எப்படி பார்க்கிறீர்கள்?

வனிதா வாழ்வில் பிரச்னை வரும்போது, நடுவில் வந்து பேசுபவர்கள் ஒருகட்டத்திற்குமேல் போய்விடுவார்கள். அதனை வனிதா நிலையில் இருந்து பார்த்தால்தான் தெரியும். ஆரம்பத்திலிருந்து வனிதா தனது கஷ்டங்களை அவரேதான் சமாளித்து வருகிறார். வெளியில் இருந்து பார்த்து பேசுபவர்களின் கருத்துகளை நான் எடுத்துகொள்ளமாட்டேன். ஒருவரின் பர்சனல் விஷயத்தில் அடுத்தவர் தலையிடக்கூடாது. வனிதாவுக்கு மட்டுமல்ல. யார் விஷயத்திலும் தலையிடக்கூடாது. இது எல்லோருக்கும் பொதுவான விஷயம். வனிதா செலிபிரட்டியாக இருப்பதால் இப்பிரச்சனை பெரிதாகப் பேசப்படுகிறது. சாதாரண மக்களுக்கும் இதுபோன்று நடந்துகொண்டுதான் இருக்கிறது.

பிக்பாஸ்’ நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் கொடுத்து நடிக்க வைக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

இப்படி குற்றம் சாட்டுவதில் உண்மை கிடையாது. பிக்பாஸ் ரியாலிட்டி ஷோதான். சந்தேகமே வேண்டாம். அப்படி ஸ்கிரிப்ட் கொடுத்து நடிக்க வைக்கிறார்கள்… வெறும் ஆக்டிங் என்றால், பிக்பாஸ் போட்டியாளர்களில் பலருக்கு சமூகத்தில் நெகட்டிவ் இமேஜ் கிடைக்கிறதே? போட்டியாளர்கள் யாரும் தனக்கு கெட்டப்பெயர் வரவேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். இத்தனைநாள் சேர்த்து வைத்த பெயர், புகழ் எல்லாம் இழந்து மக்களிடம் அவமானப்படவும் விரும்பமாட்டார்கள். பிக்பாஸில் அவரவர் இஷ்டத்திற்கு விளையாடுகிறார்கள். அவ்வளவுதான்.

உங்களுடன் பிக்பாஸில் இருந்த சினேகன் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துவிட்டார். கமல் உங்களை அழைத்தாரா?

அந்த மாதிரி அழைப்பு வரவில்லை. அது சினேகனின் விருப்பம். அவருக்கும் அந்த விருப்பம் இருந்தது. கமல் சாருடன் நல்ல பரிச்சயம் இருந்ததால் மக்கள் நீதி மய்யத்தில் சேர்ந்துவிட்டார். எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் எல்லாம் இல்லை. 

பெண்கள் சினிமாவில் சந்திக்கும் சவால்கள் என்ன?

சினிமாவில் மட்டுமல்ல. எல்லா ஃபீல்டுலயும் பெண்களுக்கு போட்டிகளும் சவால்களும் இருக்கும். இன்னும் கடின உழைப்பை கொட்ட வேண்டி இருக்கும். எல்லா இடங்களிலும் ஆண்களும் பெண்களும் சவால்களை சந்திக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை ஆண், பெண் சமம். ஒருவர் பெரிய இடத்தில் இருந்தால் கஷ்டப்பட்டுத்தான் வந்திருப்பார். வெற்றி என்பது சும்மா கிடைத்துவிடாது. 

ஓ.பி.சி இட ஒதுக்கீடு குறித்து உங்கள் பார்வை என்ன?

இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது அநீதியானது. ஆளும்கட்சியை எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கிறார்கள். ஒரு குடிமகளாக, இதற்கான கேள்வியை எழுப்பும் உரிமை எனக்கும் உள்ளது.  எதிர்காலத்தில் நம்ம வீட்டுக் குழந்தைகளும் இப்பிரச்சனையை சந்திக்க நேரிடும் என்பதால், எல்லோரும்  குரல்கொடுக்க வேண்டும். அநீதிக்கு எதிரானவர்களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டியது மக்கள் பொறுப்பு. தங்கள் உரிமைகளைத் தட்டிக்கேட்பது ஜனநாயகத்தின் கடமையும்கூட. குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே படிக்கவேண்டும் என்று நினைக்கக்கூடாது. இதனை,  இவர்கள்தான் படிக்கவேண்டும் என்று முடிவு செய்ய நீங்கள் யார்?

ஊரடங்கு எப்படி போகிறது?

ஆரம்பத்தில் வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டும் என்பது கொஞ்சம் பயமாக இருந்தது. இப்போது அதுவே பழகிவிட்டது. ஜிம் எல்லாம் மூடிவிட்டதால், வீட்டில் உடற்பயிற்சிகள் செய்கிறேன். பொதுவாக எல்லோருமே இந்த நேரத்தில் உடம்பை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ளவேண்டும். வீட்டு மாடியிலாவது வாக்கிங் போவது நல்லது. சாப்பாட்டை குறைவாக எடுத்துக்கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்  காய்கறிகள் பழங்களை மக்கள் அதிகமாக சேர்த்துக் கொள்ளவேண்டும்.  நானும் அதனையே பின்பற்றுகிறேன். வெளியில்கூட வாக்கிங் போகமுடியாத நிலையில் மக்கள் இருப்பதால் சாப்பாட்டை குறைவாக எடுத்தால் வெயிட் போடாது.

 -வினி சர்பனா