சிறப்புக் களம்

“ஆசிரியர் பற்றாக்குறையை சரிசெய்தால்தான் சமூக இடைவெளி சாத்தியமாகும்” - நடிகர் சூர்யா

“ஆசிரியர் பற்றாக்குறையை சரிசெய்தால்தான் சமூக இடைவெளி சாத்தியமாகும்” - நடிகர் சூர்யா

webteam

“பள்ளிக்கட்டமைப்பை மேம்படுத்தி, ஆசிரியர் பற்றாக்குறையை சரிசெய்தால்தான், பள்ளிகளில் சமூக இடைவெளி சாத்தியமாகும். அரசு முதலில் கவனம் செலுத்தவேண்டிய விஷயங்களில் ஒன்றாக இது இருக்கிறது” என்ற கருத்தை முன்வைக்கிறார் நடிகர் சூர்யா.

அகரம் பவுண்டேஷன் சார்பில் வெளிவரும் ‘யாதும்’ பத்திரிகையில் அதன் நிறுவனர் நடிகர் சூர்யா, “பள்ளிகளில் சமூக இடைவெளி சாத்தியமா?” என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  அதன் முழுவடிவத்தை புதிய தலைமுறை இணையதள வாசகர்களுக்காக வழங்குகிறோம்.

குழந்தைகள் பொதுவாக விடுமுறைக்கு ஏங்குவார்கள். ஆனால், அவர்களுக்கே சலிப்பு ஏற்படும் அளவுக்கு மிக நீண்ட விடுமுறை இப்போது கொரோனா நோய்த்தொற்று அபாயத்தால் கிடைத்திருக்கிறது. இந்தக் கட்டாய விடுமுறைக்காலத்தால் பல லட்சம் மாணவர்களின் கல்விச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு விதிகள் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் தளர்த்தப்படும் இன்றைய சூழலில், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இன்னொரு பக்கம் 'பள்ளிகளை மீண்டும் திறக்கும்போது என்னவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவைப்படும்' என்பது பற்றி தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சில வழிகாட்டு நெறிகளை உருவாக்கிவருகிறது.

இனிவரும் நாட்களில் நோய்த்தொற்று அதிகரிக்குமா, குறையுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்களுக்கே நிச்சயமாகத் தெரியாத சூழலில், குழந்தைகள் விஷயத்தில் எந்த ஆபத்தான முடிவையும் எடுக்கமுடியாது. இந்த நாட்களின் வகுப்பறை இழப்புகளை ஈடுசெய்யும் விதமாக பாடங்களைக் குறைப்பது குறித்தும், தேர்வுகளைத் தவிர்ப்பது குறித்தும் முடிவெடுக்க ஆலோசனைக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. ஆனால் இதையெல்லாம் தாண்டி ஒரே ஒரு கேள்விக்கு விடை காணமுடியவில்லை.

‘கொரோனா வைரஸ் இன்னும் சில காலம் நம் மத்தியில்தான் இருக்கும். சமூக இடைவெளியைக் கடைபிடித்து, அத்துடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும்’ என்று சொல்கிறார்கள். இந்தச் சூழலில் பள்ளிகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது சாத்தியமா என்பதே அந்தக் கேள்வி.

மாணவர்களை இடைவெளி விட்டு உட்காரவைப்பது, ஷிப்ட் முறையில் பளளிகளை நடத்துவது, தொலைக்காட்சிக்கல்வி, ஆன்லைன் வகுப்புகள் என்று பல விஷயங்களைப் பரிசீலிக்கிறார்கள். இதையெல்லாம் செய்வதற்கான வாய்ப்புகள் நம் பள்ளிகளில் இருக்கின்றனவா?

சமூக இடைவெளி விட்டு மாணவர்களை அமரவைப்பதற்கு ஏற்ற கட்டிட வசதி வேண்டும். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையிடம் இருக்கும் புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 53 ஆயிரத்து 533 பள்ளிகள் ஒற்றை வகுப்பறையில் இயங்குகின்றன. இங்கெல்லாம் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், ஒரே ஹாலில் உட்காரவைக்கப்படுகின்றனர்.

‘35 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருக்கவேண்டும்’ என்பது வரையறை. ஆனால், இந்தியா முழுக்க 19 சதவிகித பள்ளிகளில் இதைவிட அதிகமான மாணவர்கள் ஒவ்வொரு வகுப்பிலும் உள்ளனர். ஆசிரியர் பற்றாக்குறையால்,  பல பள்ளிகளில் இரண்டு வகுப்புகளை ஒன்றாக இணைத்துவைத்து பாடம் நடத்துகின்றனர்.

அரசு ஆரம்பப்பள்ளிகளில் 17.6 சதவிகித ஆசிரியர் பணியிடங்களும், உயர்நிலைப்பள்ளிகளில் 15.7 சதவிகித ஆசிரியர் பணியிடங்களும்,  காலியாக இருப்பதாக அரசு தரும் புள்ளிவிவரமே சொல்கிறது. இதுதவிர, இந்தியாவில் ஒரு லட்சத்து எட்டாயிரம் பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக இருக்கின்றன. இந்த சூழலில், ஷிப்ட் முறையில் பள்ளியை நடத்துவதோ, மாணவர்களை இடைவெளிவிட்டு அமரவைப்பதோ கடினமான ஒன்றாகவே இருக்கும்.

தினமும் ஏழு மணி நேரம் வரை குழந்தைகள் பள்ளியில் இருப்பார்கள். அவர்களுக்குத் தரப்படும் சத்துணவு, பாதுகாப்பான கரங்களால் சமைக்கப்பட்டிருக்கவேண்டும். பள்ளியில் குழந்தைகள் சுகாதாரத்தைக் கடைபிடிக்க அடிக்கடி கைகழுவ வேண்டியிருக்கும். அவர்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும். ஒரே ஓர் இடத்தில் இருக்கும் தண்ணீரை எல்லோரும் பகிர்ந்து குடிக்கும்போது, நோய்த்தொற்று பரவ அதுவே காரணமாகிவிடும்.

இந்தியாவில் சுமார் 45 சதவிகித பள்ளிகளில் கைகழுவும் வசதிகள் இல்லை. 52 சதவிகித பள்ளிகளில் மட்டுமே பாதுகாப்பான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் போதுமான அளவில் உள்ளன. இந்த வசதிக்குறைவு, குழந்தைகளை நெருக்கடிக்கு உள்ளாக்கும்.

பெற்றோரை அடுத்து பிள்ளைகள் அதிக நேரத்தைச் செலவிடுவது ஆசிரியர்களுடன்தான். எனவே, ஆசிரியர்கள் சுகாதார வழிமுறைகளைக் கடைபிடித்து பாதுகாப்பாக இருக்கவேண்டும். 50 வயது தாண்டியவர்கள் கொரோனா வைரஸ் தொற்றில் அதிகம் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளனர். இந்தியாவில் சுமார் 6 லட்சம் ஆசிரியர்கள் 55  வயதைத் தாண்டியவர்கள். பள்ளிகள் திறக்கப்படும்போது இவர்கள் மிகுந்த நெருக்கடியை சந்திப்பார்கள். தங்களைப் பாதுகாப்பாக பராமரித்துக்கொள்ள ஆசிரியர்களுக்கு தனி கழிப்பறை வசதிகள் பல பள்ளிகளில் இருப்பதில்லை.

பள்ளிகள் திறக்கப்படும்போது, பாடம் நடத்துவதைப்போலவே பிள்ளைகளுக்கு சுகாதார விழிப்புணர்வு தருவதும் ஆசிரியர்களின் கடமையாக மாறப்போகிறது. கொரோனா நோய்ப் பரவல் குறித்து விளக்கி, குழந்தைகளின் உடல்நலனையும் மனநலனையும் பாதுகாக்கவேண்டிய ஆலோசகர்களாகவும் அவர்கள் மாறவேண்டிய நிலை உள்ளது. ஆனால், ‘வாட்டர் எய்ட்’ என்ற அமைப்பு நடத்திய ஆய்வு, “56 சதவிகித ஆசிரியர்கள் அடிப்படை சுகாதாரம் பற்றி அறிந்திருக்கவில்லை. அவர்களுக்குப் பயிற்சி தேவைப்படுகிறது” என்பதை உணர்த்தியுள்ளது.

இந்தக் கொரோனா நாட்கள், ‘பள்ளிக் கட்டமைப்புக்கு நாம் செலவிடும் தொகை குறைவு’ என்பதை மீண்டும் உணர்த்தியுள்ளன. இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் பள்ளிக்கல்விக்கு செலவிடப்படும் தொகை 2.8 சதவிகிதம் மட்டுமே. நடுத்தர வளர்ச்சி கொண்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது, இது மிகவும் குறைவு. கடந்த ஆறு ஆண்டுகளாக இதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு குறைந்துகொண்டே வந்திருக்கிறது.

பள்ளிக்கட்டமைப்பை மேம்படுத்தி, ஆசிரியர் பற்றாக்குறையை சரிசெய்தால்தான், பள்ளிகளில் சமூக இடைவெளி சாத்தியமாகும். அரசு முதலில் கவனம் செலுத்தவேண்டிய விஷயங்களில் ஒன்றாக இது இருக்கிறது.

நன்றி: யாதும், தரு மீடியா (பி) லிட்