உலக தொழிலாளர்கள் இன்று அனுபவிக்கும் 8 மணி நேர வேலை உரிமைக்கு பின்னால் நூறு ஆண்டுகள் போராட்டமும், பல நூறு உயிர்த்தியாகங்களும் உள்ளது. இந்த உரிமைக்காகவும், தியாகத்திற்காகவும் உருவானதே மே தினம்.
உலகத்தொழிலாளர்கள் இன்று அனுபவிக்கும் அத்தனை உரிமைகளுக்கும் பின்னால் பல்லாயிரக்கணக்கான போராளிகளின் இரத்தம் தோய்ந்த சிவப்பு வரலாறு உள்ளது. தொழில் வளர்ச்சியின் காரணமாக 18 ஆம் நூற்றாண்டில் பல நாடுகளும் மிக வேகமாக வளர ஆரம்பித்தன. வளர்ச்சி தொடங்கிய அதே காலகட்டத்தில் உழைப்பாளர்கள் மீதான சுரண்டலும் தொடங்கியது. ஆம், 18 ஆம் நூற்றாண்டு வரை உலகின் அனைத்து நாடுகளின் தொழிலாளர்களும் தினமும் 12 முதல் 18 மணிநேரம் கட்டாயமாக வேலை செய்யவேண்டிய சூழல் இருந்தது.
அதிக நேர பணியை கண்டித்து 1830 களில் பல நாடுகளிலும் போராட்டங்கள் முளைவிட தொடங்கியது. இந்த காலகட்டத்தில் முதன் முதலாக இங்கிலாந்தில் ‘சாசன இயக்கம்’ ஆறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தியது, இதில் முக்கியமான கோரிக்கை 10 மணிநேர பணி கோரிக்கையாகும். அதன்பின்னர் 1834 இல் பிரான்சில் நெசவுத்தொழிலாளர்கள் தங்களுக்கான 15 மணி நேர பணியை குறைக்க ‘ஜனநாயம் அல்லது மரணம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து போராடினார்கள்.
அதன்பின்னர் உலக நாடுகள் பலவற்றிலும் பணிநேரத்தை குறைக்க தொடர் போராட்டங்கள் நடந்து வந்தது. ஆனால் அவையனைத்தும் தோல்வியில்தான் முடிந்தது. இந்த சூழலில்தான் ஆஸ்திரேலியாவில் 1856இல் கட்டிடத்தொழிலாளர்கள் 8 மணிநேர வேலை கோரிக்கையை முன்வைத்து கடுமையாக போராடி அதில் வெற்றியும் பெற்றனர். இதனை உத்வேகமாக கொண்டு ரஷ்யா மற்றும் அமெரிக்காவிலும் பணிநேர குறைப்பு போராட்டங்கள் ஊக்கம்பெற்று போராட தொடங்கினார்கள். இந்த பணிநேர குறைப்பு போராட்டங்களே ரஷ்ய புரட்சிக்கும் வித்திட்டது.
அமெரிக்காவிலும் 1930கள் முதலே தொழிலாளர் போரட்டங்கள் நடந்தாலும், 1870 களுக்கு பின்னர் அது வீரியமடைந்தது. இந்த சூழலில் 1886 இல் ‘அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு’ மே 1 ஆம் தேதி 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து நாடு தழுவிய வேலை நிறுத்ததுக்கு அறைகூவல் விடுத்தது. இந்த போரட்டமே மே தினம் உருவாக ஆரம்ப விதை. இந்த போராட்டத்தில் அமெரிக்கா முழுவதும் 3,50, 000 தொழிலாளர்கள் பங்கேற்றனர். ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனை தொடர்ந்து மே 3 ஆம் தேதி சிகாகோவில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற கண்டன போராட்டமும் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பல தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த கூட்டத்தை ஒருங்கிணைத்த தொழிலாளர் தலைவர்கள் 7 பேர் தூக்கிலிடப்பட்டனர். இவர்களின் இறுதி ஊர்வலத்தில் அமெரிக்காவில் 5 இலட்சம் பேர் பங்கேற்று பெரும் எழுச்சி உருவானது.
இதனை தொடர்ந்து 1889ஆம் ஆண்டு ஜூலை 14 ஆம் தேதி பாரீசில் நடைபெற்ற ‘உலக தொழிலாளர்கள் பாராளுமன்றத்தில்’ காரல் மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் உள்ளிட்ட 18 நாடுகளை சேர்ந்த 400 பேர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில்தான் மே 1 ஆம் தேதியை உலக உழைப்பாளர் தினமாகவும், மே தினமாகவும் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது. இந்தியாவில் 1923 ஆம் ஆண்டில் சென்னையில் தான் முதன்முதலாக உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்ட்து, சிங்காரவேலர் இந்த மே தினத்தை முன்னெடுத்தார்.
-வீரமணி சுந்தரசோழன்