அ.தி.மு.கவின் முதல்வர் வேட்பாளர் சர்ச்சை… கனிமொழி எம்.பியின் இந்தி மொழித்திணிப்பு குற்றச்சாட்டு, முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலைதான் ரஜினி கட்சி வேட்பாளரா? என, கடந்த ஒருவாரமாக தமிழகத்தை பரபரப்பாகிக்கொண்டிருக்கும் பிரச்சனைகள் இவை. எப்போதும், ஊடகங்களில் ரஜினி குறித்து கருத்து சொல்லும், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரும் ரஜினிக்கு நெருங்கியவருமான தமிழருவி மணியன், இப்போது கப்சிப் மணியன் ஆகிவிட்டார். என்னதான் செய்துகொண்டிருக்கிறார் என்பதை அறிய அவரது கப்சிப்பை கலைத்தோம். எடுத்தவுடனேயே “நான் யாரிடமும் பேசுவதில்லை. ரஜினி கட்சி ஆரம்பித்தால்தான் பேசுவேன்” என்று ‘பேசியவரிடம்’ சில கேள்விகளை முன்வைத்தோம்…
நீண்ட நாட்களாக அமைதி காத்துவருவதுபோல் தெரிகிறதே?
உண்மைதான். ரஜினி சார் கட்சியை தொடங்கும்வரை நான் அமைதியாகத்தான் இருப்பேன். அவர், கட்சி ஆரம்பிக்கும்போது பேசுவேன். அதுவரை, வாயையேத் திறக்கமாட்டேன். ஏனென்றால், அவரை முழுமையாக ஆதரிக்கும் நிலையில் இருக்கிறேன். ரஜினி சார் கட்சி தொடங்கியதும் எந்தவொரு பிரச்சனையைப் பற்றி பேசுவதற்குமுன், அவரிடம் விவாதித்துவிட்டுப் பேசுவேன். அதன்பிறகு, அவருடைய கருத்தும் என் கருத்தும் சேர்ந்து ஒன்றாக வரும். அதுவரை, குருவிக்கூடு அடைந்தமாதிரி கொரோனா சூழலால் வீடு அடைந்துக்கிடக்கிறேன். ரஜினி சாரை நான்கு மாதமாக, நான் நேரில் பார்க்கவே இல்லை. மற்றபடி வீட்டில் அமைதி காத்தாலும், தேசிய கல்விக்கொள்கையிலிருந்து அனைத்து பிரச்சனைகளையும் தொடர்ச்சியாக பார்த்து ஆராய்ந்துகொண்டுதான் இருக்கிறேன். எப்போதும் அப்டேட்டாகத்தான் இருப்பேன். எனக்கென்று தனிக்கருத்து உண்டு. இந்த, 50 வருடம் அப்படித்தான் அரசியல் வாழ்க்கை நடத்திகொண்டிருக்கிறேன்.
’கட்சி ஆரம்பிக்காமல் இழுத்தடித்துக்கொண்ண்ண்ண்டே இருக்கிறாரே’ என்ற மன வருத்தம் ரஜினிமீது இருக்கிறதா?
அதெல்லாம் ஒன்னுமே கிடையாது. எந்த வருத்தமும் இல்லை;ஏமாற்றமும் இல்லை. நான், நான்கு மாத காலமாக ரஜினி சாரை பார்க்கவில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதேமாதிரி உண்மை நானும் அவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்கிறோம் என்பதும். ஐந்து நாட்களுக்கு முன்புகூட அவரும் நானும் தொலைபேசியில் பேசிக்கொண்டோம். அடிக்கடி அவரும் தொடர்புகொள்வார். நானும் தொடர்புகொள்வேன். ஆனால், எதையும் வெளிப்படையாக சொல்லக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை. வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு ரஜினி கட்டாயம் வருவார். நிச்சயம் களத்தில் இருப்பார்; அடுத்த ஆட்சி மாற்றம் அவரால்தான் உருவாகும். அவர்தான், முதல்வராக வந்து உட்காருவார்.
ஆனால், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலைதான் முதல்வர் வேட்பாளர் என்கிறார்களே?
அதுகுறித்தெல்லாம் இப்போதைக்கு பேசவேண்டாம்.
கொரோனா ஊரடங்கு எப்படி போய்க்கொண்டிருக்கிறது?
எனது மனைவிக்கு கடந்த ஜனவரியில்தான் இருதய வால்வு அறுவை சிகிச்சை நடந்தது. கொரோனாவால் இருதய பிரச்சனை உள்ளவர்களுக்கும் கிட்னி பிரச்சனை உள்ளவர்களுக்கும்தான் ஆபத்து அதிகம். அதனால், கடந்த நான்கு மாதமாக நானும் மனைவியும் வீட்டு வாசலைக்கூட தொடவில்லை. ஆனால், கொரோனா பரவல் இன்னும் இரண்டு மாதத்தில் குறைந்துவிடும். சார்ஸ் என்ற கிருமி சீனாவிலிருந்து பரவி வந்தது. இப்போது, அந்த சார்ஸ் இல்லைன்னு சொல்ல முடியுமா? இன்னும் அந்த வைரஸ் இருக்கிறது. எங்கேயாவது ஒளிந்திருக்கும். எல்லா வைரஸூம் நம்மைவிட்டு போவது கிடையாது. வைரஸ் என்றாலே உச்சத்திற்கு சென்று, அதுவே பின்பு குறைந்துவிடும். அப்படித்தான் கொரோனாவும். செப்டம்பர் வரை இருக்கும். அதற்குள் தடுப்பூசி போட்டுவிடுவார்கள். அடுத்த புத்தாண்டு என்பது எல்லோருக்கும் மிக நல்ல ஆண்டாக அமையும். கொரோனாவால் முடங்கி இருந்தாலும் வாக்கிங் எல்லாம் வீட்டின் உள்ளேயே போய்க்கொண்டிருக்கிறோம். கடந்த, 1966 ஆம் ஆண்டிலிருந்து 1969 ஆம் ஆண்டுவரை பிரசிடென்சி கல்லூரியில் படிக்கும்போதிலிருந்து யோகாசனம் செய்து வருகிறேன். இப்போது, எனக்கு வயது 71 ஆகிறது. எந்த உடல்நலப் பிரச்சனைகளும் இல்லாமல் நலமோடு இருக்கிறேன் என்றால், அதற்கு நான் செய்யும் ஆசனங்கள்தான் காரணம். அதன்பிறகு தொடர்ச்சியாக வாசிப்பு… வாசிப்பு மட்டும்தான். ஒரு நாளைக்கு குறைந்தது 10 மணிநேரமாவது வாசிக்கிறேன். இப்போது, இந்துமத வாழ்வை புரியவைக்கும் பிரம்ம சூத்திரம், பகவத் கீதை படித்து முடித்துமுடித்தேன். மேலும், ஜெயகாந்தன் நூல்களின் கடுமையான வாசிப்பாளன் நான். அவருடைய எல்லா நாவல்களின் சிறுகதைகளையும் மொத்தமாக படித்து முடித்துவிட்டேன். தஸ்தயேவ்ஸ்கி உளவியல் ரீதியான பிரச்சனைகளை சிறப்பாக எழுதுவதில் வல்லவர். அவர்மாதிரி யாரும் கிடையாது. அவரின், குற்றமும் தண்டனையும், தி இடியட், கரம்சோவ் சகோதரர்கள் ஆகிய மூன்றும் அற்புதமான படைப்புகள். இவையெல்லாம் படித்து முடித்துவிட்டு டால்ஸ்டாயின் அன்னா கரீனினாவை தர்மராஜன் என்பவர் அழகான தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். அதை மறுவாசிப்பு செய்தேன். இந்தப் புத்தகங்களையெல்லாம் அனைவரும் அவசியம் படிக்கவேண்டும்.
மீண்டும் தமிழகத்தில் இந்தி பிரச்சனை எழுந்திருக்கிறதே?
இந்தி திணிப்பு என்பது கூடவே கூடாது. எந்த திணிப்பாக இருந்தாலும் உணவு மாதிரிதான். விரும்பாத ஒன்றை திணித்தால் வெளிவந்துவிடும். அதனால், இந்தி என்றில்லை மனித இனத்திற்கு எதை வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டாலும், அது வெளியேற்றப்படும். மாணவப் பருவத்திலிருந்து இந்தி திணிப்புக்காக கடுமையாக போராடியதை ’ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கை வரலாறு’ எனது புத்தகத்திலேயே குறிப்பிட்டுள்ளேன். என்னைப் பொறுத்தவரையில் ’வாழிய செந்தமிழ்;வாழ்க நற்றமிழ்; வாழிய பாரத மணித்திருநாடு. முதலில் என்னுடைய மொழிதான் முக்கியம். அதற்கடுத்து தமிழ் மொழி பேசும் எனது இனம் முக்கியம். ஆனால், இது இரண்டைச் சொல்லி நான் தனித்தமிழ்நாடு போகமாட்டேன். சாகும்வரை இந்தியனாகத்தான் இருப்பேன். அதனால், நல்லத் தமிழகனாக நல்ல இந்தியனாக காலம்முழுக்க இருப்பேன்.
தி.மு.க எம்.பி கனிமொழியின் இந்தி திணிப்பு தொடர்பான விமானநிலைய சர்ச்சையை எப்படி பார்க்கிறீர்கள்?
கனிமொழிக்கு நல்லா இந்தி தெரியும். கலைஞரை வட இந்தியத் தலைவர்கள் சந்திக்க வருவார்கள். பெரும்பாலானவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. அதனால், கனிமொழிதான் மொழிபெயர்ப்பார். என்னை மாதிரி மனிதர்கள் இந்தி படிக்காமல் போனதற்கு திமுக உருவாக்கிய இந்தி எதிர்ப்பு போராட்டம்தான் காரணம். ஆனால், தமிழகத்தின் மொத்தப் பேரையும் இந்தி படிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அவர்கள் வீட்டில் மட்டும் எல்லோரையும் இந்தி படிக்க வைக்கிறார்கள். முரசொலி மாறன் குடும்பத்திலிருந்து கலைஞர் குடும்பம் வரை அனைவரும் இந்தி படிக்கிறார்கள். கனிமொழியும் முரசொலிமாறன் குடும்பத்திலுள்ளவர்களுக்கும் நல்லா இந்தி தெரியும்; நல்லா இந்தி பேசுவாங்க. மற்றபடி எனக்கு விமானநிலைய பிரச்சனையெல்லாம் ஒன்றும் தெரியாது. அதற்குள் நான் செல்ல விரும்பவில்லை.
கனிமொழி இந்தியை மொழிபெயர்த்துக் கொடுக்கும்போது நீங்கள் அருகில் இருந்து பார்த்தீர்களா?
நான் ஏன் போய் பார்க்கப்போறேன்? ஆனால், சந்தேகத்திற்கு இடமில்லாமல் கேள்விப்பட்டிருக்கேன். வட இந்தியாவிலிருந்து வரக்கூடிய தேசியத் தலைவர்களுக்கு கலைஞர் சொல்லக்கூடிய கருத்துக்களை புரிந்துகொள்ளவும் அவர்கள் பேசுவதை இவர் தெரிந்துகொள்ளவும் இடையில் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர்தான் கனிமொழி.
- வினி சர்பனா