சிறப்புக் களம்

"“60 அரியர் வைத்திருப்பவருக்கு பிஇ பட்டமா? ஒரு வரைமுறை கிடையாதா? " உயர்கல்வி நிபுணர்

webteam

அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் தமிழக உயர்கல்வித்துறைக்கும் இடையில் அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக பெரும் போர் நடந்துவருகிறது. அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அரியர் தேர்வுகளை ரத்து செய்யக்கூடாது எனத் தெரிவித்துள்ளது. பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வை ரத்து செய்த முடிவு சரியானதா என்ற கேள்வியை அண்ணா பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு முன்னாள் இயக்குநர் பி.வி. நவநீதகிருஷ்ணனிடம் முன்வைத்தோம்.

"தேர்வு இல்லையென்றால் எந்த அமைப்பும் தரம் குறைந்துவிட வாய்ப்பிருக்கிறது. அரியர் தேர்வுகளை ரத்து செய்வதால், இந்த விளைவு ஏற்படலாம். பொறியியல் கல்வியைப் பொறுத்தவரையில் ஏஐசிடிஇக்கு அதில் உடன்பாடு இல்லை. அரியர் தேர்வு எழுதாமல் பிஇ பட்டம் பெறும் ஒரு மாணவரால் மேற்கொண்டு பணிக்கோ, மேற்படிப்புக்கோ எந்த அடிப்படையில் சேரமுடியும். அவரது தரம் சந்தேககத்திற்கு உரியதாக ஆகிவிடும்.

இது போட்டி உலகம் நினைவிருக்கட்டும். முறையாகப் பயின்று தேர்வு எழுதி உயர்வகுப்பில் தேறிய மாணவரின் மனநிலை எப்படி இருக்கும். மாணவரின் மனநிலை இதனால் பாதிக்கப்படாதா? கோவிட் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 9 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு முறையான வகுப்புகள் நடத்தப்படாமல் இருக்கும்போது, ஒரே முறை அரியர் தேர்வை எழுதுவோருக்கு ஆபத்து அதிகமாகவா போகிறது.

பி.வி. நவநீதகிருஷ்ணன் 

அரியர் தேர்வை ஒழிப்பது என்றால், அதற்கொரு வரைமுறை கிடையாதா? ஒரு பொறியியல் மாணவர் 60 அரியர் வைத்திருக்கிறார். அவருக்கு பிஇ பட்டம் கொடுத்துவிட்டால், அவர் எப்படி பொறியாளராக பரிணமிக்க முடியும். சாய்ஸ் பேஸ்டு கிரெடிட் சிஸ்டம் எனப்படும் விருப்ப அடிப்படை மதிப்பீட்டுத் திட்டத்தில் இது நடக்க வாய்ப்பில்லை.

கடந்த ஆண்டுகளில் அதிபட்ச காலஅவகாசமான ஏழு ஆண்டுகளில் பிஇ முடிக்காதவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தால், அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கக்கூடாதா என்று கேள்விகள் எழும். அப்படி வாய்ப்பும் அளித்து விலக்கும் அளித்தால் தேறிவிடுவார்கள்.

அரியர் தேர்வுகளை ஒழித்தால் அதற்கு விதிமுறைகள் தேவை. அதிகபட்சம் 1 முதல் 2 அரியர் தேர்வுகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கலாம். மற்றும் கடைசி முறையில் பெயிலான தேர்வில் மதிப்பெண்களைப் பரிசோதித்து 5 அல்லது 10 மதிப்பெண்கள் வரை கூட்டும்போது தேறும் நிலை இருந்தால் அதற்கு மட்டும் விலக்கு அளிக்கலாம். பொறியியல் கல்வி ஏற்கெனவே பொலிவை இழந்துவரும் நிலையில், இந்த அரியர் தேர்வுகளை ரத்து செய்வது மேலும் அதை பலவீனமாக்கும்" என்றார்.