சிறப்புக் களம்

'அம்மா வழியில் அதிமுக' - சசிகலாவின் புதுமுழக்கம்: ஆடுபுலி ஆட்டத்தின் அடுத்த ப்ளான் என்ன?

Veeramani

கடந்த சில நாட்களாக தொண்டர்களுடன் சசிகலா பேசும் ஆடியோக்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கி வருகின்றன. சசிகலாவின் அடுத்தகட்ட திட்டம் என்ன? 

ஒதுங்கிக்கொண்ட சசிகலா… ஆட்சியை இழந்த அதிமுக: ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இப்போதுவரை 5 ஆண்டுகளாக அதிமுகவில் தொடரும் ஆடுபுலி ஆட்டம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. 2021 பிப்ரவரியில் நான்கு ஆண்டு சிறை தண்டனையை நிறைவு செய்து விடுதலையானார் சசிகலா. அவர் வந்தபின்னர் பல அதிரடிகள் இருக்கும் என கணித்த நிலையில், சிறிய சலசலப்புகளை மட்டுமே உருவாக்கிவிட்டு அரசியலிலிருந்து ஒதுங்குவதாக தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.

இந்தச் சூழலில்தான் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தது. ஆட்சியை இழந்தபோதும் 66 தொகுதிகளில் வென்று வலுவான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது அதிமுக. ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கிய சூழலிலும் தனது கொங்கு மண்டல எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் எதிர்க்கட்சி தலைவரானார் எடப்பாடி பழனிசாமி. இந்த சட்டமன்றத் தேர்தலில் அமமுக அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்ததுடன் 2.5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது தினகரனையும் சோர்வடைய செய்தது.

ஆடியோ மூலமாக அடுத்த ஆட்டத்தை ஆரம்பிக்கும் சசிகலா:

கடந்த ஒரு வாரமாக சசிகலா அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் சிலருடன் பேசும் ஆடியோ வெளிவந்தவண்ணம் உள்ளது. அந்த ஆடியோவில், “எடப்பாடி பழனிசாமி இப்படி செய்வார் என எதிர்பார்க்கவில்லை, அதிமுகவின் தோல்வியை சரிசெய்துவிடலாம், விரைவில் நான் வருகிறேன், 30 ஆண்டுகளாக காப்பாற்றிய கட்சியை விட்டுவிடமாட்டேன்” என்பது போன்ற சாராம்சத்துடன் தொடர்ந்து பேசி வருகிறார்.

இதனால் சசிகலா மீண்டும் அதிமுகவில் என்ட்ரி ஆவார் என்று அவரின் ஆதரவாளர்கள் மற்றும் அமமுகவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். அதிமுகவில் உள்ள சிலரும் சசிகலாவுக்கு ஆதரவாக அறிக்கைகள் வெளியிடத் தொடங்கியுள்ளனர். இதனிடையே ஓபிஎஸ்ஸும் சசிகலாவுடன் பேசிக்கொண்டு இருக்கிறார்கள், இவர்கள் இருவரும் இணைந்து எடப்பாடிக்கு ‘ஸ்கெட்ச்’ தயாரிப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழலில் சென்னையில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட இபிஎஸ், சசிகலாவால் அதிமுகவில் எதுவும் செய்யமுடியாது என்று தெளிவாக கூறினார். ஆனால், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கலந்துகொள்ளாதது பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

சசிகலாவின் ப்ளான் என்ன?

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கொங்கு மண்டலத்தில் மட்டுமே வலுவான வெற்றியை பதிவு செய்தது. மற்றபடி சென்னை மண்டலம், டெல்டா மண்டலத்தில் அதிமுக வாஷ் அவுட்டானது. வடமண்டலம், தென்மண்டலத்திலும் கட்சி பலத்த தோல்வியை சந்தித்தது அதிமுகவினரை சோர்வடைய செய்திருக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை கொங்கு மண்டலமும், தென்மண்டலமும் எப்போதும் பக்கபலமாக இருக்கும். தற்போது எடப்பாடி பழனிசாமி பல வியூகங்களை வகுத்து கொங்கு மண்டலத்தை தக்கவைத்துள்ளார். ஆனால் மற்ற அனைத்து மண்டலங்களிலுமே அதிமுக கலகலத்து போயுள்ளது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். தென்மண்டலம் மற்றும் டெல்டா மண்டலங்களில் அமமுக ஏற்படுத்தும் தாக்கங்கள் அதிமுகவின் தோல்விக்கு காரணமாகிறது. இந்தச் சூழலில்தான் அதிமுகவில் உள்ள பல முன்னாள் அமைச்சர்களும் சசிகலாவுடன் பேசிவருவதாக கூறப்படுகிறது.

வெறும் கொங்கு மண்டல செல்வாக்கை மட்டுமே வைத்துக்கொண்டு அதிமுகவை வழிநடத்தினால் அதிமுக ஒரு சமூகத்திற்கான கட்சியாக கட்டமைக்கப்படும் வாய்ப்புள்ளது. எனவே பழையபடி அதிமுகவை அனைத்து தரப்புக்குமான இயக்கமாக மாற்றவேண்டும் என எடப்பாடி பழனிசாமியின் மீது அதிருப்தியில் உள்ள பல முக்கிய தலைவர்களும், அதிமுகவின் நலன்விரும்பிகளும் பேசத்தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்த அனைத்து விவரங்களையும் தெரிந்த பின்னர்தான் சசிகலா அடுத்தகட்ட ஆட்டத்தை தொடங்கியுள்ளார். அதாவது, எடப்பாடி பழனிசாமி முழுக்க முழுக்க நம்பியிருப்பது கொங்கு மண்டலத்தைத்தான், எனவே மற்ற அனைத்து பகுதி அதிமுகவின் முக்கியப் புள்ளிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார் சசிகலா என சொல்லப்படுகிறது.

அம்மா வழியில் அதிமுக: சசிகலாவின் புது ரூட்..!

ஜெயலலிதா தலைமையில் உள்ளவரை அதிமுகவை அனைத்து மண்டலத்துக்குமான கட்சியாகவே கட்டமைத்தார், வாய்ப்புகளையும் வழங்கினார். தற்போது குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே கட்சியை குறுக்கினால் காலப்போக்கில் அதிமுக வலுவிழந்துபோகும். எனவே "அம்மா வழியில் மீண்டும் அனைத்து சமூகங்களும், அனைத்து பகுதிகளுக்கும் சமமான வாய்ப்புகளுடன் அதிமுகவை உருவாக்கும்" என்று பலருடன் பேசத் தொடங்கியிருக்கிறாராம் சசிகலா.

இந்தக் குரலுக்கு ஓபிஎஸ் உள்ளிட்ட பல தென்மாவட்ட தலைவர்களும், டெல்டா தலைகளும் ஓகே சொல்லிவிட்டதாக சசிகலா தரப்பு சொல்கிறது. வடமண்டலத்திலும் சிலருடன் சசிகலா தரப்பு பேசி வருவதாகவும் சொல்லப்படுகிறது, படிப்படியாக அனைத்து மட்டங்களிலும் இபிஎஸ்ஸுக்கு எதிரான கருத்தை வலுப்படுத்தி பின்னர் அவரை பணிய வைக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றனர். சசிகலாவின் இணைப்புக்கு இபிஎஸ், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் உள்ளிட்ட சிலர்தான் தடையாக உள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் அவர்களை சரிகட்டும் இறுதி அஸ்திரத்தையும் சசிகலா தயார் செய்துவருகிறார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். 

'அதிமுக என்ற பெயருக்கும், இரட்டை இலை சின்னத்துக்கும்தான் மவுசு. எனவே ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, தினகரன் உள்ளிட்ட அனைவரும் இணைந்தால் மட்டுமே வருங்காலங்களில் வலுமிக்க இயக்கமாக அதிமுக மாறும். அதற்கான வேலைகளைத்தான் சசிகலா செய்ய ஆரம்பித்துள்ளார்' என்கிறார்கள் அதிமுக மற்றும் அமமுகவின் மூத்த நிர்வாகிகள் சிலர்.

இது தொடர்பாக பேசிய மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன், “தற்போதைய அதிமுகவை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் என நான்கு தரப்புமே காய்களை நகர்த்த தொடங்கியுள்ளனர். இதற்கான பல ரகசிய வேலைகளும் நடந்துவருவதாக சொல்லப்படுகிறது, இதில் யாரோடு யார் சேர்ந்து, யாரை வீழ்த்துகிறார்கள் என்பதுதான் வியூகம். ஆனால் வெளிப்படையாக இபிஎஸ், ஒபிஎஸ் பிளவு தெரிகிறது. இதில் சசிகலாவும் தனது நகர்வுகளை தொடங்கிவிட்டார். இதில் யாரின் கை ஓங்கபோகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்” என்கிறார்    

வீரமணி சுந்தரசோழன்