அழிந்து வரும் வன விலங்குகளை பாதுகாக்கவும், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இன்று சர்வதேச வன உயிரின தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலகம் முழுவதும் நவீனமயமாக்கலின் விளைவாக அழிக்கப்பட்டு வருவது பெரும்பாலும் வனப்பகுதிகளே. இதனால் குறைந்து வருவது வனப்பரப்பு மட்டுமல்ல. அந்த வனத்தில் வசித்து வந்த உயிரினங்களும்தான். அண்மையில் கோவை மாவட்டத்தில் காட்டுயானை சின்னத்தம்பி எதிர்கொண்ட போராட்டம் நாம் கண் முன்னே கண்ட உதாரணம்.
வன உயிரினங்களுக்கு நேரிடும் பாதிப்புகள் மற்றும் அழிவுகள் காரணமாக, சூழல் சங்கிலி அறுபட்டு, இயற்கையே மூச்சுமுட்டி தவித்து வருகிறது. பருவநிலை மாற்றத்திற்கும் இதுவே காரணமாக அமைகிறது. எனவே, வன உயிரினங்களை பாதுகாக்கவும், அவற்றுக்கான உணவு, பாதுகாப்பு ,வாழ்விடத்தை உறுதி செய்யும் நோக்கில், ஆண்டுதோறும் மார்ச் 3 ஆம் தேதி சர்வதேச வன உயிரின தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 2013 - ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி கூடிய ஐநா பொதுச்சபையில், இந்த தினம் உறுதிசெய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்த உடன்படிக்கையில் 183 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு தலைப்பின் கீழ் சர்வதேச வன உயிரின தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நீர்வாழ் உயிரினங்கள், அவற்றை நம்பி வாழும் மீனவர்கள் பாதுகாப்பு என்ற தலைப்பில் இன்று சர்வதேச வன உயிரின தினம் கடைபிடிக்கப்படுகிறது.