சுற்றுச்சூழல்

குட்டிகளுடன் ஹாயாக சாலையை கடந்து சென்ற காட்டு யானை கூட்டம்: வாகன ஓட்டிகள் அச்சம்

குட்டிகளுடன் ஹாயாக சாலையை கடந்து சென்ற காட்டு யானை கூட்டம்: வாகன ஓட்டிகள் அச்சம்

kaleelrahman

சத்தியமங்கலம் அருகே காட்டுயானைகள் தனது குட்டிகளுடன் கூட்டமாக தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. 24 மணி நேரமும் இச்சாலையில் வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையை, குட்டிகளுடன் மெதுவாக கடந்து சென்றன. காட்டு யானைகள் சாலையை கடந்து செல்வதைக் கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வாகனங்களை சாலையில் நிறுத்தினர்.

சாலையை கடந்து சென்ற காட்டு யானைகள் சாலையோரம் முகாமிட்டபடி தீவனம் உட்கொண்டன. சிறிதுநேரம் காட்டு யானைகள் சாலையோரம் சுற்றித் திரிந்தபின் வனப்பகுதிக்குள் சென்றன. இதைத் தொடர்ந்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. யானைகள் கூட்டமாக சாலையைக் கடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.