வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதிக்குள் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. இந்நிலையில் அந்த சமயத்தில் 'லா நினா நிகழ்வால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் அதனால் தமிழகத்தில் அதி கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. இது குறித்து விரிவாக பார்க்கலாம்..
தமிழகத்தில் ஒரு வாரத்திற்குப் பல மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியே இதற்குக் காரணமாகும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் நாட்களில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் எனவும், மழை காரணமாக வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி பசிபிக் பெருங்கடலில், மத்திய மற்றும் கிழக்கு பூமத்தியரேகை பகுதியில், கடலின் மேற்பரப்பில் இருக்கும் வெப்பநிலை சாதாரண அளவை விடக் குறைந்து குளிர்ந்து காணப்படுவது, 'லா நினா' நிகழ்வு என்று கூறப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் இந்த லா நினா நிகழ்வு ஏற்படுவதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்..
பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் இந்த லா நினா நிகழ்வால், வறண்ட காற்று மேற்கு நோக்கி வீசும். இதனால் பருவக்காற்று ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா நாடுகளை கடந்து, வங்கக்கடல் வரை வீச வாய்ப்பு உள்ளது. இவ்வாறு வீசும் காற்று, நீராவியை எடுத்து வரும் போது, அதிக மழை மேகங்கள் உருவாகி அவை, வங்கக்கடலில் நுழையும் போது, தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை தீவிரமடையும். அதனால் லா நினா நிகழ்வால், வடகிழக்கு பருவமழை காலத்தில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்..
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை, வரும் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதிக்குள் தொடங்க வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.. அதுவும் இந்த ஆண்டு வழக்கத்தை விட, கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் ப்ரதீப்ஜான் கூறியிருந்தார்.. இந்நிலையில், தீபாவளிக்கு பின் வங்கக்கடலில், வடகிழக்கு பருவமழையின் தாக்கம் தீவிரமடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.