சுற்றுச்சூழல்

நெல்லை: வார விடுமுறை நாளை பனைமர விதை நடு நாளாக மாற்றிய தன்னார்வ இளைஞர்கள்

webteam

நேற்றைய தினம் கிடைத்த வார விடுமுறை நாளை, பனைமர விதை நடு நாளாக மாற்றியுள்ளனர் நெல்லையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள்.

நெல்லை டவுண் பகுதியில் ‘கருணைக் கதிர் டிரஸ்ட்’ என்ற பெயரில் தன்னார்வ அமைப்பொன்று, வெளிநிறுவனங்களில் வேலை பார்த்துக்கொண்டே பொது சேவையில் ஈடுபடும் 30 இளைஞர்களின் கூட்டு முயற்சியில் உருவாகி செயல்படுகிறது. இவர்கள் கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை தாக்கத்தின் போது உணவின்றி தவித்த சாலையோரம் வாழும் ஆதரவற்ற மக்களுக்கு நாள்தோறும் உணவு சமைத்து வழங்கினர். தயிர்சாதம், சாம்பார் சாதம் என்றில்லாமல் ஒவ்வொரு நாளும் அறுசுவை உணவு தயாரித்து சாலையோர மக்களுக்கு நேரில் சென்று வழங்கி வந்தனர்.

முழுக்க முழுக்க இளைஞர்களை கொண்டு இயங்கும் இந்த அமைப்பு இந்த வாரம் முதல் ஞாயிற்றுக் கிழமைகளை பயனுள்ளதாக மாற்ற முடிவு செய்து, குளக்கரைகளில் பனை மர விதைகளை நட்டு பராமரிக்கும் பணியை தொடங்கியுள்ளனர். அதன்படி நெல்லை பழைய பேட்டையில் உள்ள பம்பன் குளத்தின் கரையில் 2,000 பனை மர விதைகளை நடும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்காக மண்ணை துளை போடும் இயந்திரம், பாலித்தீன் பைகளில் சேகரித்த பனை மர விதைகள் ஆகியவற்றை கொண்டு வந்து, வரிசையாக விதைகளை நடும் பணியில் இளைஞர்கள் ஈடுபட்டனர். தங்களின் விடுமுறை நாளை வேலை நாளாக மாற்றிய இளைஞர்களின் இம்முயற்சியை கண்ட பொதுமக்கள், “இது மிக நல்ல முன்னெடுப்பு. இளைஞர்களின் இந்த முயற்சி, மிகவும் வரவேற்புக்குரியது” என பாராட்டி சென்றனர்

முதற்கட்டமாக 300 விதைகளை இளைஞர்கள் நட்டுள்ளனர். அடுத்தடுத்த வாரங்களில் இன்று பம்பன் குளத்திந் கரையை சுற்றிலும் 2000 பனை மர விதைகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நல்ல நிகழ்வை கேள்விப்பட்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் பணி புரியும் பேராசிரியர் திருமகள், தன் மாணவர்களையும் அழைத்து வந்து குழுவினருக்கு கூடுதல் ஒத்துழைப்பை வழங்கினார்.

இவரின் உதவியால் நடும் விதைகளின் எண்ணிக்கை அதிகமானது. பணிகள் எளிதானது. இந்தப் பேராசிரியர், தான் வசிக்கும் காந்திநகரில் கடந்த ஆறு வருடங்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டு பராமரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.