சுற்றுச்சூழல்

வேட்டங்குடி சரணாலயத்தில் பறவைகள் வரத்து அதிகரிப்பு 

வேட்டங்குடி சரணாலயத்தில் பறவைகள் வரத்து அதிகரிப்பு 

webteam

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வேட்டங்குடி கிராமத்தில் வெளிநாட்டு பறவைகளின் வரத்து அதிகரித்துள்ளது. 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து மதுரை நெடுஞ்சாலையில் சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது வேட்டங்குடி கிராமம். வேட்டங்குடி சரணாலயம் சுமார் 384 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்த ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அமைந்த இந்த இடம் 1977-ஆம் ஆண்டு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. 

இங்குள்ள கொள்ளுகுடிப்பட்டி கண்மாய்க்கு ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான் உட்பட, பல வெளிநாடுகளில் இருந்து உண்ணி கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தை கொத்தி நாரை போன்ற 217 வகையான சுமார் 2 ஆயிரம் வெளிநாட்டுப் பறவைகள் மழைக்காலத்தில் இங்கு வருகின்றன.  சுமார் 60 வருடங்களுக்கும் மேலாக, ஆண்டுக்கு ஒரு முறை நாடு விட்டு நாடு இந்தப் பறவைகள் படையெடுத்து வருகின்றன. 

கடந்த 4 ஆண்டுகளாக போதிய மழை இல்லாமல் கண்மாயில் தண்ணீர் வறண்டு போனதால், பறவைகள் வராமல் வேட்டங்குடி கிராமம் வெறிச்சோடியது. தற்போது மழை பெய்து வரும் நிலையில், பறவைகள் வரத் தொடங்கியுள்ளன. பறவைகளின் அழகைக் காண ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர். 
இந்நிலையில் வேட்டங்குடி சரணாலயத்தை சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.