சுற்றுச்சூழல்

கருப்பைமாற்று அறுவை சிகிச்சை சக்சஸ்! டாக்டர்கள் ஹேப்பி

கருப்பைமாற்று அறுவை சிகிச்சை சக்சஸ்! டாக்டர்கள் ஹேப்பி

Rasus

கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பெண்கள் நலமாக இருப்பதாகவும், இயல்பான உணவுகளை சாப்பிடத் தொடங்கி விட்டதாகவும், புனேவில் உள்ள கேலக்சி கேர் லேபரோஸ்கோபி நிறுவனம் தெரிவித்துள்ளது.

புனேவில் உள்ள கேலக்சி கேர் லேபரோஸ்கோபி நிறுவனத்தில், கருப்பை இல்லாத பிறவி நோயால் பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்கு, மே-18, 19 ஆகிய நாட்களில் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது 72 மணிநேரம் கழித்து, அப்பெண்கள் இயல்பான உணவை சாப்பிடுவதாகவும், அவர்களது கருப்பையில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், 21 பெண்கள், கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்குப் பதிவு செய்திருப்பதாகவும் கேலக்ஸி கேர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருப்பை மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொள்ளும் பெண், செயற்கை முறைப்படி தான் கருத்தரிக்க முடியும். கணவரின் உயிரணுக்களை சேகரித்து வைத்து, கருமுட்டை சரியான வளர்ச்சிக்கு பின் உயிரணுக்கள் செலுத்தப்படும். இதற்காக அந்தப் பெண் குறிப்பிட்ட மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும். பெண் கருத்தரித்து குழந்தை பிறந்தவுடன் தற்போது மாற்றப்பட்ட கருப்பையை அகற்றிவிடலாம். பிறகு அந்த மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு கருப்பைக்கு ரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா என்பதை பல டாப்ளர் சோதனைகள் மற்றும் சோனாக்ராஃபி சோதனைகள் மூலம் பரிசோதித்து, 3 வாரங்கள் கழித்தே அறுவை சிகிச்சை வெற்றியடைந்ததா, இல்லையா என்று கூற முடியும் என முன்பு மருத்துவர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.