சுற்றுச்சூழல்

வண்டலூர் பூங்காவில் அடுத்தடுத்து உயிரிழக்கும் நெருப்புக் கோழிகள்: என்னதான் காரணம்?

வண்டலூர் பூங்காவில் அடுத்தடுத்து உயிரிழக்கும் நெருப்புக் கோழிகள்: என்னதான் காரணம்?

JustinDurai
வண்டலூர் பூங்காவில் 39 நெருப்புக் கோழிகள் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் இதுவரை 9 கோழிகள் உயிரிழந்திருகின்றன.
சென்னையை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு குரங்கு, சிங்கம், புலி, யானை, மான், நெருப்பு கோழி, பாம்பு மற்றும் பல்வேறு அரிய வகை விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பூங்காவில் இருந்த நெருப்புக் கோழிகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றன. பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 39 நெருப்புக் கோழிகளில், கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி அன்று 5 நெருப்பு கோழிகளும், 28ஆம் தேதி 2 நெருப்புக் கோழிகளும், 29-ஆம் தேதி ஒரு நெருப்புக் கோழியும், நேற்று புதன்கிழமை ஒரு நெருப்புக் கோழியும் என இதுவரை 9 நெருப்புக் கோழிகள் உயிரிழந்திருக்கின்றன. மேலும் 2 நெருப்புக் கோழிகள் நோய்வாய்ப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, அவற்றை பராமரிக்கும் ஊழியர்கள் கூறுகையில், நெருப்புக் கோழிகள் உட்கார்ந்த நிலையில், திடீரென சாய்ந்து, வாயிலிருந்து ரத்தம் வடிந்த நிலையில் இறந்து விடுவதாக தெரிவித்தனர். இறந்த நெருப்புக் கோழிகளை பிரேத பரிசோதனை செய்தபோது அவைகளுக்கு நிமோனியா இருப்பது தெரியவந்தது, ஆனால் இறக்குமளவுக்கு அது காரணமாக இருக்காது என்று கால்நடை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே நெருப்புக் கோழிகள் இறப்புக்கான காரணத்தை கண்டறிய போபாலில் உள்ள ஆராய்ச்சி நிலையத்திற்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பூங்காவில் உள்ள மற்ற பறவையினங்கள் முழு ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் நெருப்புக் கோழிகள் மட்டும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உயிரியல் பூங்கா இயக்குனர் கருணா பிரியா தெரிவித்துள்ளார்.