சுற்றுச்சூழல்

சென்னையில் புதிய பாலம்... இடமாற்றம் செய்யப்படவுள்ள 35 மரங்கள்!

webteam

சென்னை ராஜீவ்காந்தி சாலையில் மேம்பாலம் கட்டப்பட உள்ளதால் அங்குள்ள 35 மரங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட உள்ளன.

சாலை, மேம்பாலம் போன்ற கட்டுமானங்களுக்காக மரங்கள் வெட்டப்படுவது வழக்கமாகவே உள்ளது. ஆனால் வெளிநாடுகளில் மரங்களை வெட்டாமல் வேரோடு எடுத்து வேறு இடத்திற்கு மாற்றுவார்கள். அதேபோல இந்தியாவிலும் மாற்றம் செய்தால் மரங்கள் அழிவதைத் தடுக்கலாம் என இயற்கை ஆர்வலர்கள் தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் அப்படி ஒரு முன்னெடுப்பை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் கையில் எடுத்துள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி சாலையில் மேம்பாலம் கட்டப்பட உள்ளதால், டைடல் பார்க் முதல் இந்திரா நகர் வரை உள்ள கிட்டத்தட்ட 35 மரங்களை வேறு இடத்திற்கு மாற்ற தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இது குறித்து தி இந்து நாளிதழுக்கு பேசிய அதிகாரி ஒருவர், 14 வருடங்களுக்கு முன்பு நட்ட மரங்களாக இவை உள்ளன. தற்போது பாலம் வரவுள்ளதால் இந்த மரங்களை எல்லாம் இடமாற்றம் செய்யவுள்ளோம். இங்கு நிறுவனங்கள் வந்த போது நாங்கள் 135 மரங்களை இடமாற்றினோம்.

அனைத்தும் தற்போது சிறப்பாக உள்ளன. அதேபோல கிடைக்கும் இடங்களிலும் மரங்களை நட்டு வளர்த்து வருகிறோம்.தற்போது இந்த 35 மரங்களும் சென்ட்ரல் பாலிடெக்னிக் பகுதிக்குள் இடமாற்றம் செய்யப்படவுள்ளது. இந்த பணிக்காக ரூ.3.2 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது தேவையற்ற மரக்கிளைகளை வெட்டி வருகிறோம். இடமாற்றம் செய்யும் போது அதிக எடை இல்லாமல் இருப்பதே முக்கியம். அதனால்தான் மரக்கிளைகள் வெட்டப்படுகின்றன. இந்த வேலை 15 நாட்களுக்குள் முடிவடையும் என தெரிவித்துள்ளார்.

மரம் இடமாற்றம் செய்யப்படவுள்ளது குறித்து பேசிய அப்பகுதிவாசி கீதா, நான் நிச்சயம் இந்த மரங்களை எல்லாம் மிஸ் செய்வேன். இந்த மரங்கள் எல்லாம் அழகான இடங்களாக இருக்கும். மரங்களை வெட்டாமல், இடமாற்றம் செய்வது எனக்கு பெரிய மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் சமீபத்தில் வெளியான ஓர் ஆய்வின் முடிவை நினைவுகூறவேண்டும். அதன்படி, சென்னை மாநகரில் மக்கள் நெருக்கத்துக்கும், மரங்களின் எண்ணிக்கைக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருப்பது தெரியவந்தது. அதாவது, சென்னை மாநகரில் கிட்டத்தட்ட 1 கோடி பேர் வசிக்கின்றனர். இத்தனை மக்களும் ஆரோக்கியமாக வாழ்வதற்கான சுத்தமான காற்று கிடைக்க, 15 லட்சம் மரங்கள் இருப்பது அவசியம். ஆனால், இப்போது இருப்பதோ வெறும் 2.75 லட்சம் மரங்கள் மட்டுமே.

Source: The Hindu