சுற்றுச்சூழல்

மரம் வளக்க கற்றுத்தரும் ‘தமிழக மரக் களஞ்சியம்’ அப்

webteam

பொறியியல் படித்தவர்கள்கூட வேளாண்மைக்கு வரும் காலம் இது. மண் மீதும், மரம் மீதும் இளைய தலைமுறையினருக்கு ஒரு விழிப்புணர்வு வளர்ந்து வருகிறது. அந்த விழிப்புணர்வு என்பது தனி நபர்கள் சார்ந்தே உள்ளது. அதை பரவலாக்கினால்தான் அந்த அறிவு அனைவருக்கும் போய்ச் சேரும். அதற்கான முதல் முயற்சியே ‘தமிழக மரக் களஞ்சியம்’ அப். 

அது சரி, இதை வைத்து என்ன செய்யலாம்? விவசாயம் செய்யலாம். பண்ணை வைக்கலாம்? 

அப்படியா? பணம் தருவார்களா? என்று உடனே நீங்கள் மைண்ட் வாய்ஸில் பேசுவது புரிகிறது. பணம் கிடைக்கும், அதற்கு முன்னால் அதற்காக நீங்கள் சரியான புரிதலைக் கொண்டு வேளாண்மை செய்ய வேண்டுமே? பண்ணையம் செய்தால் பணம் தானாகவும் வரும், அரசு மூலமாகவும் வரும். அதற்கான ஒரு அடிப்படை அறிவை வளர்க்க முயற்சிக்கிறது இந்த ‘தமிழக மரக் களஞ்சியம்’ அப். 

மண் சார்ந்த மரம் எது? அது எந்த மண்ணில் வளரும்? எந்தச் சத்தை கொடுத்தால் சரளமாக வளரும்? என்பதை போன்ற பண்ணையம் சார்ந்த கேள்விக்களுக்கு இந்தச் செயலி முழுமையான தகவல் களஞ்சியமாக வடிவமைக்கப்பட்டு, செயல்பாட்டிற்கும் வந்துள்ளது. 

ஆனால் இந்தச் செயலி எதிர்ப்பார்த்த அளவுக்கு அதிகம் பேரை போய்ச் சேரவில்லை.  பெரும்பாலான மக்களுக்கு தாமும் பண்ணையம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. ஆனால் போதிய தகவல் அறிவு கிடைப்பதில்லை. ஆகவே விவசாயிகளுக்கு உள்ள அப் வசதியை போல ஒரு வசதியை தமிழக அரசு ‘தமிழக மரக் களஞ்சியம்’ மூலம் செய்து தந்திருக்கிறது. 

அது சரி, இந்தச் செயலியை டவுன்லோட் செய்துவிட்டால் பண்ணையம் செய்துவிடலாமா? அதுதான் நடக்காது. அதற்காக நீங்கள் அதிகமாக உழைக்க வேண்டும். அதற்கு ஒரு உழவனைப் போல இந்த அப் உங்களுக்கு உதவி செய்யும். அறிவுரைகளை இந்த அப் எந்தத் தடைகளும் இல்லாமல் தட்டிவிடும். அப்புறம் என்ன? பாதி பண்ணையம் முடிந்துவிட்டது. 

இந்தத் தகவல்கள் யாவையும் மேலோட்டமானவைதான். இதன் செயல்பாடு குறித்து முழு விவரங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார் இந்திய வனத்துறை பணி அதிகாரி சுதா ராமன். அவரிடம் இந்தச் செயலி குறித்து பல கேள்விகளை முன் வைத்தோம். அவர் தந்த தகவல்கள் மிக உற்சாகமாகவே இருந்தன. “இந்தச் செயலியை முதலில் மண் சார்ந்த மரங்களை பற்றிய அறிவை பரவலாக்குவதற்காகவே உருவாகி இருக்கிறோம். இந்தச் செயலியை கொண்டு ஒரு விவசாயி அல்லது தனிநபர் யாரேனும் அவர் பண்ணையம் செய்ய உள்ள மண் எது? அதன் தரம் என்ன? வறண்ட பூமியா? காய்ந்த காடா? அல்லது பசுமையான பூமியா? என்பன போன்ற விவரங்களை கொடுத்தால் அந்த மண்ணிற்குத் தக்க அவர் எந்த மரத்தை தேர்ந்தெடுத்து வளர்க்கலாம்? எந்த அளவுக்கு அது பலனளிக்கும்? என்ன வகையான நோய்கள் மரத்தை தாக்கும்? அதில் இருந்து அதனை முன்கூட்டியே தடுக்க என்ன செய்யலாம் என்பன போன்ற தகவல்களை முழுக்க அவர்கள் இதன் மூலம் பெற முடியும். இதுவே இந்தச் செயலியின் சிறப்பு” என்கிறார் இவர்.

மேலும் ஒரு மரம் வளர நீர் மட்டும் கிடைத்துவிட்டால் போதாது. அது ஒரு மரத்தை உயிர்ப்பிழைத்து நிற்க உதவும் ஒரு ஆயுதம் மட்டுமே. ஆனால் ஒரு மண்ணிற்கு சற்றும் சம்பந்தமில்லாத மரத்தை கொண்டு வந்து நட்டால் அது தழைக்காது. உயிர்ப் பெறாது. ஒரு மரம் வளர மண் முக்கியம். அது அந்த நிலம் சார்ந்த மண்ணாக இருக்க வேண்டும். உதாரணமாக ஊட்டியில் குளிர் பிரதேசத்தில் வாழும் குறிஞ்சியைக் கொண்டு வந்து கொளுத்தும் வெயில் பூமியான வேலூரில் நட முடியாது. அப்படி நட்டால் அது பட்டுப் போகும். அந்த அறிவைதான் இந்தச் செயலி செயல்முறையில் உங்களுக்கு கற்று தருகிறது என்று கூறுகிறார் சுதா ராமன். 

மேலும் ஒரு பகுதியில் எந்த அளவுக்கு மழை பொழிவு உள்ளது. அங்கே எத்தனை காலம் வெயில் நிலவுகிறது. இப்படியான தரவுகளையும் ஆராய்ந்து அதற்குப் பின் இந்தச் செயலி பண்ணையம் பழக கற்றுத் தருகிறது என்கிறார் இந்த வனத்துறை அதிகாரி.

வேம்பு எங்கே வளரும்? தைல மரம் எங்கே தழைக்கும்? மூலிகைச் செடிகள் எந்தத் தட்பவெட்ப நிலையில் பூக்கும் என்பன போன்ற அரிய தகவல்களையும் தருகிறது இந்தச் செயலி. ஒட்டு மொத்தமாக உங்கள் செயல்பாட்டை இந்தச் செயலி பாதி செய்து முடித்து விடுகிறது. 

ஒரு மரத்தை வைத்த பிறகு அதை ஆசையாசையாக வளர்ந்து வரும்போது அதற்கான உரிய தட்பவெட்ப சூழல் இல்லை என்று வரும் போது அது நம் கண்முன்னே காய்ந்து கருகிவிடும் இல்லையா? அது எவ்வளவு கொடுமை? ஆகவே நீங்கள் ஆசைப்படுவதற்கு முன்பே அதற்கான அறிவையும் பெருவது முக்கியமில்லையா? அதற்கான தேவையை இந்தச் செயலி செய்து கொடுக்கும் என்றும் அவர் நம்பிக்கைத் தருகிறார். 

அப்ப இந்தச் செயலி பண்ணையம் பண்ண மட்டும்தானா? அதுதான் இல்லை. வீட்டுத் தோட்டத்திற்கான அறிவையும் மாடித்தேட்டம் போட யோசனையையும் இந்தச் செயலியின் மூலம் பெற முடியும் என்பது கூடுதல் சிறப்பு. ஆக, இல்லத்தரசிகள் கருவேப்பிலை செடியை போட வேண்டும் என்றால் கூட இந்தச் செயலியைக் கொண்டு ஆலோசனை பெற்றுக்கொள்ளலாம். 

நாம் பார்த்து பார்த்து வளர்க்கும் இந்தச் செடிகள் மடிந்து போகிறது. அதேபோல மரங்கள் பட்டுப் போகிறது. ஆனால் கேட்பாரற்று கிடக்கும் கருவேலம் மரம் மட்டும் எப்படி தாக்குப் பிடித்த வாழ்கிறது என நீங்கள் சந்தேகப்படலாம். இந்தச் சந்தேகம் கொஞ்சம் பழைய சந்தேகம்தான். ஆனாலும் அதற்கும் ஒரு விளக்கத்தை தருகிறார் சுதா ராமன். 

கருவேல மரங்கள் இந்த நாட்டுக்கு சொந்தமானவை இல்லை. அதாவது வறண்ட தேசங்களில் இருந்து கொண்டு வந்து இங்குள்ள கரம்பைக்காடுகளில் விதைக்கப்பட்டது. இந்த மரம் எந்த உஷ்ணத்தை தாங்கும். தகிக்கும் வெப்பத்தில் செத்து கிடக்கும் இந்த மரம் லேசாக ஒரு ஈரப்பதம் காற்றில் கிடைத்தால் அதை உறிஞ்சி உயிர் பெற்றுவிடும். ஆகவே இந்த மரத்தை அழிக்க முடியாமல் அரசு போராடி வருகிறது. அழிக்க அழிக்க முளைக்கும் இந்த ஆபத்தான மரங்கள் மற்ற மரங்களை அதாவது மண்சார்ந்த நம் நாட்டு மரங்களை வளர விடாமல் தடுத்துவிடுகிறது. ஆகவேதான் இதனை நம் மண்ணில் இருந்து அகற்ற பெரிய முனைப்போடு அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்கிறார் இந்த அதிகாரி.

ஆற்றுப்படுகை வாய்கால் ஓரங்களில் தேக்கு மர நடவு திட்டம் என்ற ஒன்றை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆகவே ஆற்றுப்படுகைகளில் மட்டும் தேக்கை நடுவது ஏன்? என்று நாம் முன்வைத்த கேள்விக்கும் இவர் விளக்கம் அளித்தார். “ஆற்றுப்படுகையில் வளரும் தேக்கு மரங்கள் இதர பகுதிகளில் வளரும் தேக்கு மரத்தைவிட அதிக பலன் தருவதாக சில ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. ஆகவே இந்தத் திட்டத்தை அரசு முன்னெடுக்கிறது” என்றார்.  

இந்தச் செயலியை குறித்து இப்போது அதிகம் விழிப்புணர்வை ஏற்படுத்த என்ன காரணம்?

“கஜா புயல் பாதிப்புக்குப் பின் பல பாடங்களை நாம் கற்க நேர்ந்துள்ளது இல்லையா? நம் மண் சார்ந்த மரங்கள் இந்தப் புயலில் தாக்குப் பிடித்து நின்றது தெரிய வந்துள்ளது. உதாரணமாக பனை மரங்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை. ஆக, மக்களிடம் மண்சார்ந்த மரங்களைப் பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்தவே இந்தச் செயலி குறித்து அதிகம் விளக்க முடிவு செய்தோம்” என்கிறார் சுதா ராமன்.

எல்லாம் சரி, இந்தச் செயலி எந்த மொழியில் தகவல்களை விளக்கும். இரு மொழிகளில் விளக்கும். ஒன்று, தமிழ். மற்றொன்று, ஆங்கிலம். தேவைக்கு ஏற்ப மொழியை பயன்படுத்தலாம். கூடவே மண்ணையும் பண்படுத்தலாம் வாங்க!