இன்று சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த புலிகள் தினத்தின் அவசியம் என்ன? புலிகளை காக்க வேண்டிய தேவை என்னவாக இருக்கிறது?
2010-ஆம் ஆண்டு ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் புலிகள் பாதுகாப்பு குறித்து நடைபெற்ற உச்சி மாநாட்டில் புலிகளை பாதுகாக்கவும், அவற்றின் எண்ணிக்கையை உயர்த்தவும் சர்வதேச நாடுகள் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தை நினைவுபடுத்தும் விதமாகவும், புலிகளை பாதுகாக்கவும், புலிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் ஜூலை 29-ஆம்தேதி சர்வதேச புலிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. "அவை வாழ்வது நமது கையில்" என்பது இந்த ஆண்டுக்கான புலிகள் தின கருப்பொருளாக கடைபிடிக்கப்படுகிறது.
பொதுவாக பலமான ஆண் புலிகள் தனக்கான ஒரு எல்லையை வகுத்து அதற்குள் வாழக்கூடியவை. அந்த எல்லைக்குள் பலவீனமான ஆண் புலி வசிக்க முடியாது. அப்படி பலமான புலியால் அடித்து விரட்டப்படும் பலவீனப்பட்ட புலிகள் வனத்தை விட்டு வெளியேறி மக்கள் வசிக்கக்கூடிய பகுதிக்குள் நுழைகின்றன.
அப்படி நுழையக்கூடிய புலிகள் வேறு வழி இன்றி இரைக்காக கால்நடைகளை கொல்ல துவங்குகின்றன. ஒரு கட்டத்தில் மனிதர்களை தாக்க துவங்கி ஆட்கொல்லி புலியாக மாறி விடுகின்றன. இப்படி பல சூழல்களால் வனத்தை விட்டு வெளியேறிய புலிகளே அதிக அளவில் உயிரிழந்திருக்கின்றன.