சுற்றுச்சூழல்

நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டம் வாபஸ் - தமிழக அரசு அறிவிப்பு

நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டம் வாபஸ் - தமிழக அரசு அறிவிப்பு

Sinekadhara

நாகையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டத்தை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறை எரிவாயு, கச்சா எடுத்தல் போன்ற பேரழிவை ஏற்படுத்துகிற திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி வந்தது. இதனை எதிர்த்து தொடர்ந்து தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் 10 ஆண்டுகாலம் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனை ஏற்று அனுமதிக்கப்பட்ட திட்டங்களை மத்திய மாநில அரசுகள் திரும்பப் பெற்றன. காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த 2020ம் ஆண்டு தமிழக அரசு அறிவித்து உரிய அரசாணைகள் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேரழிவு திட்டங்களுக்கு அனுமதி பெற்ற நிறுவனங்கள் வெளியேறின.

இந்நிலையில் நாகப்பட்டினம் அருகே நரிமணம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கம் செய்யும் பணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனுடைய துணை தொழிற்சாலைகள் ஏற்படுத்துகிற உள்நோக்கத்தோடு சிட்கோ என்று சொல்லக்கூடிய சிறு தொழில்கள் மேம்பாட்டு கழகம் தொழிற்பூங்கா அமைக்க அறிவிப்பு செய்யப்பட்டு அதற்கான பணிகளில் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனைப் பயன்படுத்தி திருமருகல் ஒன்றிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதி பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அதற்கான வரைவுத் திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தப் புள்ளியை சிறு குறுந் தொழில்கள் நிறுவனம் கோரியிருந்தது.

இதனை அறிந்த தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் போராட்டக் குழு அமைத்து, வரும் நவம்பர் 16-ம் தேதி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்குபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தை அப்பகுதியில் நடத்தவுள்ளதாக அறிவித்தது. இதனையடுத்து போராட்டக் குழுவினரோடு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் அறிவிப்பாணையை அந்நிறுவனம் திரும்பப்பெறும் இதற்கான நடவடிக்கையை தமிழக முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார்; எனவே போராட்டம் நடத்த தேவையில்லை என்று கூறியிருந்தார். ஆட்சியர் உத்தராவதம் அளித்ததையடுத்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்திற்கான அனைத்து நடவடிக்கைகளையும் திரும்பப் பெறுவதாகவும், அதற்கான ஒப்பந்தப்புள்ளி கோருவதை திரும்பப் பெறுவதாகவும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனம் அறிவிப்பாணை வெளியிட்டு பத்திரிகையில் விளம்பரப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ’’இந்நடவடிக்கையானது விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். தொடர்ந்து தமிழக அரசு காவிரி டெல்டா பாதுகாப்பு மண்டலத்தில் பேரழிவு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கமாட்டோம் என்பதை உறுதியாக ஏற்று தமிழக முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.