சுற்றுச்சூழல்

கோவை: குளத்துக்குள் புகுந்து உற்சாக ஆட்டம் போட்ட காட்டு யானைகள்

கோவை: குளத்துக்குள் புகுந்து உற்சாக ஆட்டம் போட்ட காட்டு யானைகள்

kaleelrahman

கோவை ஆலாந்தூரை அருகே முட்டத்துவயல் குளத்திற்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகளை மூன்று மணிநேர முயற்சிக்குப்பின் வனத்துறையினர் மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பினர்.

போலுவாம்பட்டி வனப்பகுதியில் இருந்து நேற்று நள்ளிரவு வெளியேவந்த இரண்டு ஆண் காட்டு யானைகள் வழிமாறி பழங்குடியினர் கிராமத்தில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்து அங்கிருந்து ஆலாந்தூர் அருகே முட்டத்துவயல் பகுதிக்கு வந்தன. இதையடுத்து இரு யானைகளும் அங்கிருந்த குளத்திற்குள் இறங்கின.

அதிகாலை குளத்திற்கு வந்த மக்கள் யானைகளைக் கண்டு வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். குளத்தில் கழிவுகள் கலக்காமல் சுத்தமாக இருந்ததோடு சேறும் இல்லாததால் யானைகள் சிக்குவதற்கு வாய்ப்பில்லை என்பதை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

குளத்து நீரில் உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்த யானைகளை வனத்துக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். தொடர்ந்து 3மணி நேரமாக ஒரே இடத்தில் இருந்த இரண்டு யானைகளையும் வனத்துறையினர் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டினர்.