சுற்றுச்சூழல்

காற்று மாசு எதிரொலி: நகருக்குள் டிரக்குகள் நுழைவதற்கான தடையை நீட்டித்துள்ளது டெல்லி அரசு!

EllusamyKarthik

தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள காரணத்தினால் பள்ளிகள் உட்பட பல்வேறு நிறுவனங்களின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசியம் இல்லாத பொருட்களை ஏற்றி வரும் கனரக டிரக்குகள் நகருக்குள் நுழைவதற்கான தடையை மேலும் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது டெல்லி அரசு. 

அதே போல வரும் 26-ஆம் தேதி வரையில் அரசு ஊழியர்கள் ‘ஒர்க் ஃப்ரம் ஹோம்’ பாணியில் வீட்டில் இருந்தபடி பணியை தொடரவும் சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் கற்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும் கட்டுமான பணிகள் மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்கிறதா என்பதை சுற்றுச்சூழல் துறை தெளிவாக விளக்கவில்லை என சொல்லப்பட்டுள்ளது. சாலையில் வாகன இயக்கத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர அதிக வாய்ப்புள்ளதாகவும் மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏனெனில் வாகன புகை வெளியிடும் மாசு காரணமாக காற்றின் தன்மை மேலும் மாசுபடும் என அவர் தெரிவித்துள்ளார். 

காற்றின் தரக் குறியீட்டில் டெல்லி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து 300-க்கு மேல் உள்ளது. டெல்லி நகரில் 374, காசியாபாத் 319, குருகிராம் 364, ஃபரிதாபாத் 377 என உள்ளது. இந்த குறியீடு எண்ணிக்கை காற்றின் தரம் மிகவும் மோசமான நிலை என்பதை குறிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.