சுற்றுச்சூழல்

ரிவால்டோ யானை நடமாட்டத்தை கண்காணித்து வீடியோ தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

kaleelrahman

காட்டில் விடப்பட்ட ரிவால்டோ யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து, வீடியோ பதிவு தாக்கல் செய்ய வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தும்பிக்கை சுருங்கி சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டு, மசினக்குடி பகுதியில் சுற்றி வந்த ரிவால்டோ யானையை வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து சிகிச்சை அளித்த வனத்துறையினர், அதை காட்டில் விட்டனர். ஆனால், அந்த யானை மீண்டும் வாழைத்தோட்டம் பகுதிக்கு வந்து விட்டது.

அந்த யானையை மீண்டும் காட்டில் விட எதிர்ப்பு தெரிவித்தும், திருச்சி எம்.ஆர்.பாளையம் யானைகள் முகாமுக்கு கொண்டு செல்ல உத்தரவிடக்கோரியும் இந்திய விலங்குகள் உரிமை மற்றும் கல்வி மையம் என்ற அமைப்பின் நிறுவன அறங்காவலர் முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, யானையின் நடமாட்டம், உணவு அருந்துவது குறித்த வீடியோ பதிவு வனத்துறை சார்பிலும், மனுதாரர் சார்பில் இந்தியா டுடே தொலைக்காட்சி பதிவு செய்த காட்சியும் காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து, ரிவால்டோ யானை ஒரு நாளைக்கு 250 கிலோ உணவு மற்றும் 200 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். ஆனால் தும்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளதால் அதனால் உணவை முழுமையாக சாப்பிட முடியாமல் பாதி உணவு மற்றும் தண்ணீர் கீழே விழுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரிவால்டோ யானை ஆரோக்கியமாக இருப்பதால் மீண்டும் காட்டில் விட வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. காணொளி காட்சி மூலம் ஆஜராகி விளக்கம் அளித்த தலைமை வன பாதுகாவலர், ரிவால்டோ யானையை 5 மருத்துவர்கள் ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் காட்டிற்குள் விடப்பட்டுள்ளதாகவும், ரிவால்டோ காட்டில் ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, தும்பிக்கையில் குறை இருந்தாலும், ரிவால்டோவால் சாப்பிட முடிவதாக தெரிவித்த நீதிபதிகள், விலங்குகள் காட்டில் தான் சிறப்பாக இருக்க முடியும் என கருத்து தெரிவித்து காட்டில் விடப்பட்டுள்ள ரிவால்டோ யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து 8 வாரத்தில் வீடியோ பதிவை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும், யானைகள் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டதற்கு, யானைகள் வழித்தடத்தில் மனித தலையீடு இல்லமால் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.