சுற்றுச்சூழல்

தனிமனிதன் உருவாக்கிய 550 ஹெக்டர் காடு: அமெரிக்க பாடத்திட்டத்தில் ஜாதவ் பயெங் வரலாறு

Veeramani

550 ஹெக்டர் பரப்பளவிலான தரிசு மணல் பகுதியில் அடர்த்தியான காட்டை உருவாக்கிய, அசாமை சேர்ந்த 57 வயதான விவசாயி 'ஃபாரஸ்ட் மேன் ஆஃப் இந்தியா' ஜாதவ் பயங்கின் சாதனை அமெரிக்க பாடபுத்தகங்களில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் பிரிஸ்டல் கனெக்டிகட்டில் உள்ள பள்ளிகளின் பாடத்திட்டத்தில் 'ஃபாரஸ்ட் மேன் ஆஃப் இந்தியா' ஜாதவ் பயெங்கின் வரலாறு சேர்க்கப்பட்டுள்ளது. "மாணவர்கள் தங்கள் சுற்றுச்சூழல் பாடத்தின் ஒரு பகுதியாக ஜாதவ் பயெங் பற்றி படிக்கின்றனர்" என்று பிரிஸ்டலில் உள்ள ஒரு பள்ளியின் ஆசிரியர் நவாமி சர்மா கூறினார். அசாமைச் சேர்ந்த பயெங் 1979 ஆம் ஆண்டில் தனது கிராமத்தில் மரங்களை நடவு செய்யத் தொடங்கினார். 40 ஆண்டுகள் கடுமையான முயற்சி செய்து 550 ஹெக்டர் பரப்பளவிலான தரிசு மணல் பகுதியில் அடர்த்தியான காட்டை உருவாக்கிய, 57 வயதான அசாமி விவசாயி பேயங்கின் சாதனைக்கு கிடைத்த தற்போதைய அங்கீகாரம் இதுவாகும்.

"மாணவர்கள் தங்கள் சூழலியல் பாடத்தின் ஒரு பகுதியாக பத்மஸ்ரீ ஜாதவ் பயெங் பற்றி படித்து வருகின்றனர்" என்று கூறும் நவமி ஷர்மா "பல விலங்குகள் வாழத்தொடங்கியுள்ள ஒரு முழுமையான பெரிய காட்டை அவர் தனது ஒற்றைக் கைகளால் வளர்த்தார். சுற்றுச்சூழலைப் பற்றி அறிந்து கொள்ளவும் பாதுகாக்கவும் ஜாதவ் எங்கள் மாணவர்களைத் தூண்டுகிறார். ஒவ்வொரு நபரும் ஒரு சிறிய செயலைச் செய்தால், சுற்றுச்சூழலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்." என்றும் கூறினார்.

கிழக்கு அசாமில் உள்ள மஜூலி தீவின் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து சிறுவயதிலேயே கவலை கொண்ட பயெங், தரிசு மணல் பொட்டலில் மரங்களை நடத் தொடங்கினார், இறுதியில் அதை ஆழமான காடாக மாற்றினார்.யானைகள், மான், காண்டாமிருகங்கள், புலிகள் மற்றும் பல விலங்குகள் இப்போது அந்த காட்டில் வாழ்கின்றன.